தமிழகத்தில் மீத்தேன், ஷேல் காஸ் திட்டங்களை செயல்படுத்த மறைமுகமாக முயலும் மத்திய அரசு; மவுனம் காக்கும் தமிழக அரசு: சூழலியல் ஆர்வலர்கள் குற்றச்சாட்டு

By எஸ்.கோபாலகிருஷ்ணன்

மத்திய அரசு கடந்த ஒரு மாத காலத்தில் துரப்பணக் கொள்கையில் கொண்டுவந்துள்ள மாற்றங்களால் தமிழகத்தில் மீத்தேன், ஷேல் காஸ் திட்டங்களை செயல்படுத்த மறைமுகமாக முயற்சி மேற்கொண்டுள்ளதாகவும், இதுகுறித்து தமிழக அரசு மவுனம் காப்பதாகவும் சூழலி யல் ஆர்வலர்கள் குற்றம்சாட்டு கின்றனர்.

கடந்த 2014-க்கு முன்புவரை, எதற்காக உரிமம் வழங்கப்பட்டதோ அந்த எரிபொருளை மட்டுமே சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் எடுக்க முடியும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில், உள்நாட்டு உற்பத்தியை அதிகப் படுத்தும் நோக்கத்துடன் ‘ஹெல்ப்' (Hydrocarbon Exploration Licensing Policy) என்ற கொள்கையை அறி முகப்படுத்தி, ஒற்றை அனுமதியில் எந்தவிதமான எரிபொருளையும் எடுத்துக் கொள்ளலாம் என கடந்த 2017-ல் 65 வட்டாரங்களுக்கு மத்திய அரசு உரிமம் வழங்கியது.

திறந்தவெளி அனுமதி

இந்நிலையில் தனியார் நிறுவ னங்களை கவர்ந்திழுக்க, திறந்த வெளி அனுமதி (Open Acreage Licensing Policy) என்ற கொள்கையை அறிமுகப்படுத்தி, முதல் சுற்றில் தமிழகத்தின் 3 வட் டாரங்கள் உள்ளிட்ட 55 புதிய வட் டாரங்களுக்கு கடந்த 19.1.2018-ல் டெண்டர் விடப்பட்டது. இதற்கு 110 நிறுவனங்கள் விண்ணப் பித்தன. இந்த விண்ணப்பங்களை பரிசீலித்து கடந்த 28.8.2018-ல் மத்திய அரசு இறுதி செய்துள்ளது. அதன்படி, ஸ்டெர்லைட் ஆலையை நடத்தும் வேதாந்தா நிறுவனத்துக்கு 41 வட்டாரங்கள், ஹெச்ஓஇசி நிறுவனத்துக்கு 1 வட்டாரம், அரசுப் பொதுத்துறை நிறுவனங்களான ஓஎன்ஜிசி-க்கு 2, பிபிஆர்எல்-க்கு 1, கெயில்-க்கு 1, ஆயில் இந்தியா வுக்கு 9 வட்டாரங்கள் ஒதுக்கப் பட்டுள்ளன. இதை உறுதிப்படுத்தி டெண்டர் எடுத்துள்ள நிறுவனங் களுக்கு அனுமதி வழங்குவதற் காக, ஹைட்ரோ கார்பன் இயக்கு நரகத்தின் கூட்டம் மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் முன்னிலையில் டெல்லியில் நாளை (செப்.6) நடைபெறவுள்ளது.

இந்த டெண்டர் அனுமதியை வழங்குவதற்காகவே மத்திய அரசு சில முக்கிய மாற்றங் களையும் அண்மையில் செய்துள் ளது. அதன்படி திரவ மற்றும் வாயு வடிவிலான அனைத்து எரிபொருட்களையும் பெட்ரோலி யம் என்றே அழைக்கலாம் என மத்திய பெட்ரோலிய அமைச்சகம் கடந்த 24.7.2018 அன்று அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது.

1970-ல் இருந்து, பாஜக அரசு அமைவதற்கு முன்புவரை அனைத்து சுற்றுகளிலும் ஏற் கெனவே டெண்டர் விடப்பட்டுள்ள 255 வட்டாரங்களிலும் உரிமம் பெற்று பணிகளை மேற்கொண்டு வரும் நிறுவனங்களுக்கும் இந்த ஹெல்ப் (HELP) கொள்கை பொருந்தும், அந்த நிறுவனங்களும் மீத்தேன், ஷேல் காஸ் உள்ளிட்ட அனைத்து எரிபொருட்களையும் எடுத்துக்கொள்ளலாம் என்று கடந்த 1.8.2018-ல் மத்திய அமைச் சரவை அனுமதி அளித்துள்ளது.

இந்த விவகாரத்தில் தமிழக அரசு தனது மவுனத்தைக் கலைத்துவிட்டு, துரப்பணக் கொள்கைகளில் மத்திய அரசு ஏற்படுத்தியுள்ள மாற்றங்கள் குறித்த தனது நிலைப்பாட்டை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியபோது, "மத்திய அரசு தமிழகத்துக்கு ஆபத்து விளை விக்கும் வகையில் கனிமவளக் கொள்கைகளில் தொடர்ந்து மாற்றம் செய்து வருகிறது. கடலிலும் தரையிலும் என டெண்டர் விடப்பட்டுள்ள 55 வட்டாரங்களில் 3 வட்டாரங்கள் தமிழகத்தில் உள்ளன. இதில் இரண்டுக்கான உரிமம் வேதாந்தா நிறுவனத்திடமும் மற்றொரு உரிமம் ஓஎன்ஜிசியிடமும் உள்ளது. கொள்கைகள் மாற்றப் பட்டுவிட்டதால், தூத்துக்குடியில் எதைச் செய்ததோ அதைத்தான் வேதாந்தா போன்ற நிறுவனங்கள் செய்யும்.

மறைந்த முதல்வர் ஜெய லலிதாவின் பெயரைச் சொல்லி ஆட்சி நடத்தி வரும் இந்த அரசு தமிழகத்துக்கு எதிரான மத்திய அரசின் நடவடிக்கைகளை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக் கிறது. இனியாவது விழித்துக் கொண்டு மீனவர்கள், விவசாயி களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க ஆவன செய்ய வேண்டும். இதற்காக தமிழகத்தில் உள்ள அனைவரும் ஓரணியில் திரள வேண்டும்" என்றார்.

வேளாண் தொழில் அழிந்துவிடும்

தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில கருத்தாளர் வ.சேதுராமன் கூறியபோது, "மத்திய அரசின் புதிய கொள்கை முடிவால் மீன்வளம் குறைந்து மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். நீராதாரம் மற்றும் மண் வளம், நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டு வேளாண் தொழில் அழிந்துவிடும். துரப்பணக் கொள்கையில் மத்திய அரசு செய்துள்ள மாற்றங்களை மீத்தேன், ஷேல் காஸ் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான முன் னோட்டமாகவே கருதுகிறோம். இதை மத்திய அரசு கைவிட வேண்டும். இதுகுறித்து, தமிழக அரசு தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும்" என்றார்.

காவிரி டெல்டா விவசாயிகள் சங்கப் பொதுச் செயலாளர் மன்னார்குடி எஸ்.ரெங்கநாதன் கூறியபோது, "இதுபோன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வரும் ஆந்திராவில் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டு, நிலப் பரப்பே 5 அடி அளவுக்கு தாழ்ந்து, பள்ளமாகி கடல் நீர் உட்புகுந்து விட்டது. எனவே, தமிழக அரசு, தனி வல்லுநர் குழுவை நியமித்து, மத்திய அரசின் துரப்பணக் கொள்கை குறித்து ஆராய வேண்டும்" என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

வாழ்வியல்

5 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

8 hours ago

ஓடிடி களம்

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

கருத்துப் பேழை

9 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்