அணுக் கழிவுகளால் பேராபத்து; கூடங்குளம் அணு உலைகளை நிரந்தரமாக மூடுக: வைகோ

By செய்திப்பிரிவு

அணுக் கழிவுகளைப் பாதுகாப்பாக சேமிக்க முடியாத நிலை இருப்பதால் கூடங்குளம் அணு உலைகளை நிரந்தரமாக மூட வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

''கூடங்குளம் அணுமின் உலையில் அணுக் கழிவுகளை சரியாக கையாளாமலும், உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றாமலும் அணுமின் உற்பத்தி நடக்கிறது. மேலும் அணுக் கழிவுகளை பாதுகாப்பாக அகற்றாமல், கடலில் கொட்டப்படுகிறது. அதனால் மிகப்பெரிய அளவில் சுற்றுச் சூழல் பாதிப்பும், கதிர் வீச்சு அபாயமும் ஏற்படும். எனவே, உரிய பாதுகாப்பு முறைகள் பின்பற்றப்படும் வரை அணு உலையில் மின் உற்பத்தியை நிறுத்தி வைக்க வேண்டும் என்று பூவுலகின் நண்பர்கள் அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

அணுக் கழிவுகளைச் சேமித்து வைத்திட, அணு உலைகள் இருக்கும் இடத்திலிருந்து தொலைவில் ஒரு இடம் (Away From Reactor -AFR), அணுக் கழிவுகளை நிரந்தரமாகப் பாதுகாக்க ஆழ் நில கருவூலம் (Deep Geological Repository -DGR) ஆகிய இரண்டு வகையான கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும்.

இதில் அணுக் கழிவுகளை உலைக்கு வெளியே வைப்பதற்கான கட்டமைப்பு (AFR) ஐந்து ஆண்டுகளில் உருவாக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தேசிய அணுமின் கழகத்திற்கு 2013-ல் உத்தரவிட்டது. உச்ச நீதிமன்றம் வழங்கிய கால அவகாசம் 2018 மார்ச் மாதம் முடிந்த நிலையில், தேசிய அணுமின் கழகம், AFR தொழில்நுட்பத்தை வடிவமைப்பதில் சிக்கல்களைச் சந்தித்து வருவதால் மேலும் 5 ஆண்டுகள் கால அவகாசம் வேண்டும் என்று மனுத்தாக்கல் செய்தது.

மேலும், இதைப் போன்ற மென்நீர் உலைகள் இந்தியாவில் முதல் முறையாக கூடங்குளத்தில் உள்ளதால், AFR அமைப்பது மிகவும் சவாலான பணி என்றும் தேசிய அணுமின் கழகம் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது.

இதனைத் தொடர்ந்து உலைகளுக்கு உள்ளேயே அணுக் கழிவுகளை சேகரித்து வைப்பதால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. ஆகவே, AFR கட்டி முடிக்கப்படும் வரை கூடங்குளத்தில் உள்ள இரண்டு உலைகளிலிருந்து மேலும் கழிவுகள் உருவாகாமல் இருக்க, AFR மற்றும் DGR பாதுகாப்பு கட்டமைப்புகள் உருவாக்கப்படும் வரையில் அணுமின் உற்பத்தியை நிறுத்தி வைக்க உத்தரவிட வேண்டும் என்று பூவுலகின் நண்பர்கள் அமைப்பு மனு தாக்கல் செய்தது.

இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம், “கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக் கழிவுகளைப் பாதுகாக்கும் விதமாக 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் கழிவு பாதுகாப்பு பெட்டகத்தை அமைத்திட வேண்டும். இதுபற்றிய திட்ட அறிக்கையை மத்திய அரசு நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்” என்று 2018 ஆகஸ்ட் 24 ஆம் தேதி உத்தரவிட்டு, அணுமின் உற்பத்தி தொடர அனுமதி அளித்தது.

இதனைத் தொடர்ந்துதான் தற்போது, கூடங்குளம் வளாகத்திற்கு உள்ளாகவே AFR பாதுகாப்புக் கட்டமைப்பு உருவாக்கி, அணுக் கழிவுகளைச் சேமிக்க திட்டமிட்டுள்ள தேசிய அணுமின் கழகம், வரும் ஜூலை 10 ஆம் தேதி நெல்லை மாவட்டம், ராதாபுரத்தில் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் மூலம் பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.

அணுக் கழிவுகளை நிரந்தரமாக சேமித்து வைக்க உலக அளவில் பயன்படுத்தப்பட்டு வரும் ‘ஆழ்நிலக் கருவூலம்’ (DGR) அமைப்பதற்கான இடமும், தொழில்நுட்பமும் இன்றுவரை இந்தியாவிடம் இல்லாத நிலையில், கூடங்குளத்தில் தற்காலிகமாக AFR பாதுகாப்பு கட்டமைப்பை உருவாக்கி, அதில் கூடங்குளம் அணுக் கழிவுகளை மட்டுமின்றி, இந்தியாவில் இயங்கி வரும் மற்ற 22 அணு உலைகளின் கழிவுகளையும் கொண்டுவந்து சேமிப்பது என்பது தமிழ்நாட்டிற்கு பேரபாயம் ஆகும்.

ஏனெனில், கடந்த 2011-ல் ஜப்பான் புகுஷிமா நகரில் அணு உலை விபத்து ஏற்பட்டபோது, அணுக் கழிவுகளால்தான் மிகப்பெரிய பாதிப்புகள் உருவாகின. கதிர் வீச்சு அபாயம் மட்டுமல்ல, அணு குண்டு போல எந்த நேரமும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய அணுக் கழிவுகளைக் கையாளும் தொழில்நுட்பம் இந்திய அரசிடம் இல்லை என்று மத்திய அரசு ஏற்கனவே ஒப்புக்கொண்டு இருக்கிறது.

அணு உலைக் கழிவுகள் என்பது உறங்கிக் கொண்டிருக்கும் அணுகுண்டு போன்றது. அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் அணுக் கழிவுகளை முழுமையாக செயலிழக்கச் செய்யும் தொழில்நுட்பம் இல்லாமல் திணறுகின்றன. ஏனெனில், புளுட்டோனியம் போன்ற அணு உலைக் கழிவுகளைச் செயலிழக்கச் செய்ய நூற்றுக்கணக்கான ஆண்டுகள் ஆகும்.

இந்நிலையில், கூடங்குள வளாகத்துக்குள்ளேயே அணுக் கழிவுகளை சேமித்து வைக்கும் கட்டமைப்புகளை உருவாக்க மத்திய அரசு தீர்மானித்து இருப்பது கடும் கண்டனத்துக்கு உரியது.

இந்தியா முழுவதிலிமிருந்து அணுக் கழிவுகளைக் கொண்டுவந்து தமிழ்நாட்டில் கூடங்குளத்தில் கொட்டி சேமிக்க என்பது கற்பனை செய்யத முடியாத பேரழிவை ஏற்படுத்தும். எனவே, அணுக் கழிவுகளை கையாளும் கட்டமைப்புகளை உருவாக்க முடியாத நிலையில், கூடங்குளத்தில் செயல்படும் அணுமின் உற்பத்தி நிலைகளை நிரந்தரமாக மூட வேண்டும், புதிய அணு உலைகளையும் நிறுவக் கூடாது என்று வலியுறுத்துகிறேன்''.

இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

42 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

உலகம்

4 hours ago

மேலும்