தமிழ்நாட்டை காற்று மாசு இல்லாத மாநிலமாக மாற்ற நடவடிக்கை தேவை: அன்புமணி

By செய்திப்பிரிவு

தமிழ்நாட்டை காற்று மாசு இல்லாத மாநிலமாக மாற்ற நடவடிக்கை தேவை என, பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "உலகின் முதல் சுற்றுச்சூழல் மாநாடு 1972 ஆம் ஆண்டு ஸ்வீடனின் ஸ்டாக்கோம் நகரில் கூட்டப்பட்டதைக் குறிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5 ஆம் தேதி உலகச் சுற்றுச்சூழல் நாள் கொண்டாடப்படுகிறது. 'காற்று மாசுபாட்டை முறியடிப்போம்' என்பதை இந்த ஆண்டுக்கான உலக சுற்றுச்சூழல் நாள் முழக்கமாக ஐநா அவை முன் வைத்துள்ளது. 

காற்று மாசுபாட்டினால் உலகில் ஆண்டுக்கு 70 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். உலகிலேயே மிகவும் மாசுபட்ட நாடுகளில் முதலிடம் வகிப்பது இந்தியா. இங்கு ஆண்டுக்கு 12 லட்சம் பேர் காற்று மாசுபாட்டால் இறக்கின்றனர். 2017 ஆம் ஆண்டின் கணக்கீட்டின் படி இந்திய மக்கள் தொகையில் 77% பேர் காற்று மாசு காரணமாக பாதிக்கப்படுகின்றனர். இத்தகைய சூழலில், காற்று மாசைத் தடுக்கும் நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக நகர்ப்புறங்களிலும், மாநகரங்களிலும் காற்று மாசு மிக வேகமாக அதிகரித்து வருவதை கட்டுப்படுத்த வேண்டும்.

சென்னையில் தனியார் வாகனங்களின் பெருக்கம், முறையான மாசுக்கட்டுப்பாடு சோதனைகள் இல்லாமை, சாலைகளிலும் தெருக்களிலும் படிந்துள்ள புழுதி, பொதுப்போக்குவரத்து வசதிகளின் பற்றாக்குறை, குப்பை, கட்டிடக் கழிவுகள், டீசல் ஜெனரேட்டர் உள்ளிட்டவை காற்று மாசுக்கு காரணமாக உள்ளன.

காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவதற்கான தேசிய தூயக் காற்று திட்டத்தை இந்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் 10.01.2019 ஆம் நாள் வெளியிட்டுள்ளது. அதன்படி 2024 ஆம் ஆண்டுக்குள் காற்று மாசு அளவை 20%- 30% அளவு குறைக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய தூயக் காற்று திட்டத்தில் 42 நடவடிக்கைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அவற்றை தமிழ்நாட்டில் அரசு செயலாக்க வேண்டும். குறிப்பாக, கடலூர், தூத்துக்குடி, ராணிப்பேட்டை, மேட்டூர் போன்ற தொழிற்சாலை மாசுகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தூயக்காற்றை மீட்டெடுக்க வேண்டும்.

சென்னை உள்ளிட்ட மாநகரங்களிலும் நகர்ப்புறங்களிலும் காற்று மாசுபாட்டு நடவடிக்கைகளை உடனடியாக வேகப்படுத்த வேண்டும். நகரங்களில் சாலைகளையும் தெருக்களையும் புழுதி இல்லாமல் பராமரித்தல், மாசுபடுத்தும் வாகனங்களை திடீர் சோதனைகள் மூலம் கண்டறிந்து நடவடிக்கை எடுத்தல், மாநகர பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகமாக்குதல், பசுமை பகுதிகளை பாதுகாத்து மரங்களின் எண்ணிக்கையை அதிகமாக்குதல், திடக்கழிவு மேலாண்மை விதிகளை செயல்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும்.

காற்று மாசுபாட்டு நடவடிக்கைகளை உடனடியாகவும் தீவிரமாகவும் நடைமுறைப்படுத்துவதன் மூலம் தமிழ்நாட்டில் தூய காற்றை மீட்டெடுக்க உலக சுற்றுச்சூழல் நாளில் அனைவரும் உறுதியேற்க வேண்டும்", என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 min ago

சினிமா

15 mins ago

தமிழகம்

5 mins ago

இந்தியா

1 hour ago

கல்வி

18 mins ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

20 mins ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

வாழ்வியல்

51 mins ago

தமிழகம்

2 hours ago

ஓடிடி களம்

2 hours ago

மேலும்