நீட் தேர்வை தமிழகம் எதிர்ப்பது ஏன்? - கல்வியாளர்கள், நிபுணர்கள் விளக்கம்

By சி.பிரதாப்

நாடு முழுவதும் நடத்தப்படும் நீட் தேர்வு, தமிழகத்தில் மட்டும் எதிர்க்கப்படுவது ஏன் என்று கல்வியாளர்கள் விளக்கம் அளித்துள்ளனர். கிராமப்புற மாணவர்களிடம் நீட் தேர்வு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். நீட் தேர்வின் வாயிலாக பள்ளிகள், பயிற்சி மையங்கள் அனைத்தும் வணிக நோக்குடன் செயல்படுவதை அரசு தடுக்க வேண்டும் என்ற குரலும் எழுந்துள்ளது.

மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கு நாடு முழுவதும் ‘நீட்’ (NEET)தேர்வு கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டுக்கான நீட் தேர்வுகடந்த மே 5-ம் தேதி (ஒடிசாவில் மே 20) நடந்தது. தேர்வு முடிவு கடந்த 5-ம் தேதி வெளியிடப்பட்டது.

தமிழகத்தில் 1.23 லட்சம் பேர்தேர்வு எழுதிய நிலையில் 59,785 பேர், அதாவது 48.57 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டைவிட 9 சதவீதம் அதிகம் என்றபோதும், தேசிய அளவிலான தேர்ச்சி பட்டியலில் தமிழகம் பின்தங்கியுள்ளது. மேலும், தேசிய அளவிலான ‘டாப் 50’ பட்டியலிலும் தமிழக மாணவர்கள் யாரும் இல்லை.

கல்வியில் மற்ற மாநிலங்களைவிட முன்னேறியுள்ள தமிழகம், நீட் தேர்வில் பின்னடைவை சந்திப்பது ஏன்? விலக்கு கோருவது சரிதானா? மரணங்கள் தொடர்வதற்கு யார் பொறுப்பு? இத்தேர்வு உண்மையில் சமவாய்ப்பை வழங்குகிறதா என்று மக்கள் மத்தியில் பல கேள்விகள் எழுந்துள்ளன. இதுகுறித்து இத்துறை சார்ந்த நிபுணர்கள் கூறியதாவது:

சமவாய்ப்பு வழங்காத நீட்

பொதுப் பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு: நீட் தேர்வின் ‘டாப் 50’ பட்டியலில் எஸ்.சி., எஸ்.டி. மாணவர்கள் யாரும்இல்லை. அதிக மதிப்பெண் பெற்றவர்கள்கூட வசதி உள்ளவர்களாகவே இருப்பார்கள். எனவே, சமூகத்தின் எல்லா மக்களுக்கும் நீட் தேர்வு சமவாய்ப்பு வழங்கவில்லை என்பதை அறிய முடியும்.

முழுக்க முழுக்க வசதியானவர்களுக்கானதும், கிராமப்புற மற்றும் ஏழைகளின் மருத்துவக் கனவை சிதைப்பதாகவுமே நீட் தேர்வு உள்ளது. தேர்வில் தோல்வி அடைந்தால் மீண்டும் எழுத வாய்ப்பு உள்ளதை சுட்டிக்காட்டுகின்றனர். ஏழை மாணவர்கள் பொருளாதார நிலை அதற்கு இடம்தராது. மற்ற மாநிலங்களிலும் இந்த பாதிப்பு இருந்தாலும், தமிழகம் மட்டுமே குரல்கொடுக்கிறது. மற்ற மாநிலத்தினரும் இதை விரைவில் உணர்வார்கள். தவிர, நீட் தேர்வில் மட்டுமேமாணவர்கள் கவனம் செலுத்துவதால், பள்ளித்தேர்வில் குறைந்த மதிப்பெண்களே பெறுகின்றனர். இதனால் கல்வித் தரம் குறையும். அதனால்தான் நீட் வேண்டாம் என்கிறோம்.

வழிகாட்டுதல் இல்லை

கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி: தமிழகத்தில் நீட் தேர்ச்சி பெற்றதில் 60 சதவீதம் பேர் மீண்டும் தேர்வு எழுதியவர்கள். இங்கு மாணவர்களுக்கு சரியான வழிகாட்டுதல் இல்லை. குறிப்பாக, கிராமப்புற மாணவர்களுக்கு நீட் குறித்த புரிதல் இல்லை. ‘நீட் கடினம்’ என்ற பிம்பம் மட்டுமே அவர்கள் மனதில் உள்ளது. இதனால் குறைவான மாணவர்களே தேர்வுக்கு விண்ணப்பிக்கின்றனர்.

இதைத் தவிர்க்க, நுழைவுத் தேர்வுகள் குறித்து பள்ளிகளில் மாணவர்களுக்கு தெளிவான வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும். தேர்வுக்கு முன்னும், பின்னும் கவுன்சலிங் வழங்க வேண்டும். உயிரியல் பிரிவில் அதிக கவனம் செலுத்தினாலே நீட் தேர்வில் எளிதாக தேர்வு பெறலாம்.

தவறான முடிவு கூடாது

அதேநேரம், தேர்வில் தோல்வி அடைந்தால்கூட மாணவர்கள் கவலைப்பட வேண்டாம். ஏனென்றால், மருத்துவத் துறையில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் தவிர கால்நடை மருத்துவம், இந்திய மருத்துவம், துணை மருத்துவப் படிப்புகள் என ஏராளமான பிரிவுகள் உள்ளன. அதில் ஒன்றை தேர்வு செய்து மருத்துவத் துறையில் சாதிக்கலாம். பொறியியல் துறையிலும் உயிரி தொழில்நுட்பம், வேதியியல் தொழில்நுட்பம் என மருத்துவம் சார்ந்த படிப்புகள் உள்ளன. பிஎஸ்சி வேதியியல் படித்தாலும் மருந்துகள் தயாரிப்பு துறையில் மாணவர்கள் பணிபுரியலாம். எனவே, எத்தகைய சூழலிலும் மாணவர்கள் தவறான முடிவை நோக்கி செல்லக்கூடாது.

நோக்கம் சிதைகிறது

கல்வியாளர் நெடுஞ்செழியன்: தகுதியான மருத்துவர்களை உருவாக்குவதே நீட் தேர்வின் நோக்கம் என்கிறது மத்திய அரசு. ஆனால், குறைந்த மதிப்பெண் பெற்றவர் பணம் இருந்தால் இப்போதுகூட மருத்துவராக முடியும். ஆக, நீட் தேர்வின் நோக்கமே சிதைந்துவிடுகிறது.

கல்வி வணிகமயமாக்கலை நீட் தேர்வு முறை ஊக்குவிக்கிறது. பள்ளிகள், பயிற்சி மையங்கள் அனைத்தும் வணிக நோக்குடன் செயல்படுகின்றன. இதை தடுக்க வேண்டியது அரசின் கடமை.

நாடு முழுவதும் மருத்துவப் படிப்புகளில் 66 ஆயிரம் இடங்கள் மட்டுமே உள்ளன. நீட் தேர்வு மூலம் இதற்கு அதிகபட்சம் 2 லட்சம் பேரை தகுதி செய்வது நியாயம். ஆனால், 7 லட்சம் பேரை தகுதி செய்வது ஏன்? நீட் தேர்ச்சி பெற்ற எல்லோரும் மருத்துவராக முடியாது என்பதால், கட்ஆஃப் நிர்ணயம் செய்வதில் தெளிவு தேவை. கட்ஆஃப் நிர்ணயிப்பதில் பிளஸ் 2 மதிப்பெண்ணுக்கு வெயிட்டேஜ் வழங்கலாம். தேர்வு குறித்த அனைத்து விவரங்களையும் வெளிப்படையாக தெரிவிப்பது அவசியம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தமிழக இடஒதுக்கீடு இடங்களை வெளி மாநிலத்தவர் பெறமுடியாது

மருத்துவக் கல்வி இயக்குநரக அதிகாரிகள் கூறியதாவது:

தமிழகத்தில் 23 அரசு மருத்துவக் கல்லூரிகள், ஒரு பல் மருத்துவக் கல்லூரி உள்ளன. இதில் உள்ள இடங்களில், தேசிய ஒதுக்கீட்டுக்கு 15 சதவீதம் போக, தமிழகத்துக்கு 3,100 இடங்கள் வரை உள்ளன. இதில் அரசின் இடஒதுக்கீடு இடங்களில் மற்ற மாநிலத்தவர் சேர முடியாது. அதேநேரம், பொதுப் பிரிவு இடங்களில் மற்ற மாநிலத்தவர் சேர முடியும். இது நாடு முழுவதும் உள்ள நடைமுறை. அதனால், தமிழக மாணவர்களும் பிற மாநிலக் கல்லூரிகளில் பொதுப் பிரிவில் சேருகின்றனர். நீட் வருவதற்கும் முன்பும் இந்த முறையே பின்பற்றப்பட்டது. இதுதவிர தொழில்ரீதியாக வெளி மாநிலத்தில் இருக்கும் தமிழர்களின் குழந்தைகள் தமிழர் என்பதற்கான சான்றுகளை சமர்ப்பிக்க வேண்டும்.

நீட் தேர்வில் சில குறைபாடுகள் இருக்கின்றன. அதற்காக ஒட்டுமொத்தமாக அதை எதிர்ப்பது சரியல்ல. நீட் தேர்வு முறையால் தனியார் மருத்துவக் கல்லூரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் அரசியல் கட்சிகளை பயன்படுத்தி தேவையற்ற செயல்பாடுகளை அரங்கேற்றி வருகின்றன. இப்போது அறிமுகமாகியுள்ள புதிய பாடத்திட்டம் சிறப்பாக இருப்பதால் வருங்காலத்தில் நம் மாணவர்கள் நுழைவுத் தேர்வில் சாதிப்பார்கள்.

 

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

வாழ்வியல்

4 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

6 hours ago

ஓடிடி களம்

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

கருத்துப் பேழை

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்