தற்கொலை தீர்வல்ல; மீண்டும் முயற்சி செய்யுங்கள்- நீட் தேர்வில் 605 மதிப்பெண்கள் பெற்ற அரசுப்பள்ளி மாணவி ஜீவிதா

By க.சே.ரமணி பிரபா தேவி

சென்னை, பம்மல் அருகே அனகாபுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜீவிதா. அரசுப் பள்ளி மாணவியான இவர், நீட் தேர்வில் 605 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.  அகில இந்திய அளவில் ஜீவிதா பெற்றுள்ள இடம் - 6,678. ஓபிசி பிரிவில் 2,318-வது இடம்.

அப்பா பன்னீர்செல்வம் தையல் தொழிலாளி, அம்மா இல்லத்தரசி. 3 மகள்கள் என்பதால், சிரமத்துக்கு இடையில்தான் ஜீவிதாவின் குடும்பம் நகர்கிறது. அனகாபுத்தூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியில்படித்து அவர் பெற்ற மதிப்பெண்கள் 1,161. முதல் முறை நீட் தேர்வு எழுதி அவர் பெற்ற மதிப்பெண்கள் 361. ஆனாலும் மருத்துவர் ஆகவேண்டும் என்ற அவரின் கனவு மட்டும் கலையவில்லை. மனம் தளராமல் மீண்டும் முயற்சி செய்தார்.

பெற்றோரும் ஜீவிதாவின் கனவுக்கு உரம் சேர்த்தனர். அக்கம் பக்கத்தில் கடன் வாங்கி, கிழக்கு தாம்பரத்தில் உள்ள தனியார் பயிற்சி நிறுவனத்தில் பயிற்சி எடுத்தார் ஜீவிதா. தான் தேர்வுக்குத் தயாரானது குறித்துப் பகிர்ந்துகொள்கிறார் ஜீவிதா.

''ஸ்டேட் போர்டு வேறு புத்தகம், சிபிஎஸ்சி வேறு புத்தகம் என்ற எண்ணம் இருக்கிறது. ஆனால் பெரும்பாலான அடிப்படைத் தகவல்கள் ஒரே மாதிரிதான் இருக்கும். கூடுதலாக சில விவரங்கள் மட்டும் நீட் சிலபஸில் கற்றுக்கொள்ளும்படியாக இருக்கும். அரசுப் பள்ளியில் படித்தாலும் நீட் சிலபஸ் நம்மால் படிக்க முடிகிற வகையில்தான் இருக்கும். கஷ்டப்பட வேண்டியதில்லை, முயற்சி செய்தால் போதும். படித்துவிடலாம்'' என்கிறார்.

எந்தக் கல்லூரியில் இடம் கிடைக்கும் என்று கேட்டதற்கு பதிலளித்த ஜீவிதா, ''தமிழகத்தில் முதல் மதிப்பெண்ணே 685 என்பதால், 605 மதிப்பெண்கள் பெற்றுள்ள எனக்கு அரசு மருத்துவக் கல்லூரியிலேயே இடம் கிடைக்கும் என்று ஆசிரியர்கள் தெரிவித்தனர். குறிப்பாக சென்னை மருத்துவக் கல்லூரியிலேயே இடம் கிடைக்கும் என்று நம்பிக்கையுடன் கூறியுள்ளனர்'' என்கிறார்.

நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் மூன்று மாணவிகள் தற்கொலை செய்துகொண்டது குறித்துக் கேட்டதற்கு, ''அந்த கணத்தை எதிர்கொள்வதற்கான தைரியத்தை வளர்த்துக் கொண்டாலே போதும். நன்றாகப் படிக்காமல் அவர்கள் உயிரியலை எடுத்திருக்க வாய்ப்பே இல்லை.

உண்மையில் ஆர்வம் இருந்ததால்தான் அந்த குரூப்பையே அவர்கள் எடுத்திருப்பார்கள். ஆனால் எதிர்பாராத விதமாக ஏற்படும் தோல்வியை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் இன்றைய தலைமுறையினர் இடையே குறைந்துள்ளது. இது மாறவேண்டும். தற்கொலை தீர்வல்ல என்பதை உணர வேண்டும்.

யாராக இருந்தாலும் தைரியமாக எதிர்கொண்டால் நீட்டில் வெற்றி பெறலாம். ஒருமுறையாவது முயற்சி செய்யுங்கள். கிடைக்கவில்லையா? ஓராண்டு படித்து மீண்டும் எழுதுங்கள். ஒரு வருடத்தை அர்ப்பணிப்புடன் அதற்குச் செலவிடுவதில் தவறில்லை. தற்கொலை முடிவுகள் மிகவும் தவறானவை.

முதல் முறை முயற்சி செய்தபோது எனக்கு வெற்றி கிடைக்கவில்லை. பழைய தவறுகளைத் திருத்திக் கொண்டு, மீண்டும் கடின உழைப்புடன் முயற்சித்தேன். வெற்றி கிடைத்தது. அரசுப் பள்ளி மாணவர்களும் நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவர் ஆகலாம் என்பதற்கு நான் ஓர் உதாரணம்'' என்று தன்னம்பிக்கை மிளிரப் புன்னகைக்கிறார் ஜீவிதா.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

சினிமா

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

4 hours ago

வாழ்வியல்

4 hours ago

தமிழகம்

5 hours ago

ஆன்மிகம்

4 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

மேலும்