வைகை அணைக்கு ஒரு சொட்டு நீர்வரத்து கூட இல்லை: சென்னையைத் தொடர்ந்து மதுரையிலும் குடிநீர் பஞ்ச அபாயம்

By செய்திப்பிரிவு

வைகை அணை நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதோடு, தற்போது பருவமழையின்றி வைகை அணைக்கு ஒரு சொட்டு தண்ணீர் வரத்து கூட இல்லை. அதனால், சென்னையைத் தொடர்ந்து மதுரையிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது.

மதுரை மாநகராட்சியின் ஒட்டுமொத்த குடிநீர் தேவைக்கும் வைகை அணையைச் சார்ந்தே இருக்க வேண்டி உள்ளது. வைகை அணையிலிருந்து தினமும் 125.87 மில்லியன் லிட்டர் குடிநீர் மதுரைக்கு பெறப்படுகிறது. காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தில் இருந்து வெறும் 11 மில்லியன் லிட்டர் தண்ணீர் மட்டும் பெறப்படுகிறது.

ஒரு நாளைக்கு மாநகராட்சி பகுதியில் வசிக்கும் மக்களுக்கு 225 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. ஆனால், தற்போது 136 மில்லியன் லிட்டர் தண்ணீரே கிடைப்பதால், பல இடங்களில் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் மாநகராட்சி லாரிகளில் குடிநீர் வழங்கி நிலைமையை சமாளித்து வருகிறது.

ஒரு நாளைக்கு நபர் ஒருவருக்கு 135 லிட்டர் தண்ணீரை மாநகராட்சி வழங்க வேண்டும். ஆனால், பற்றாக்குறையால் தற்போது 90 லிட்டர் மட்டுமே வழங்குவதாக மாநகராட்சி கூறுகிறது.

இந்நிலையில் வைகை அணையின் மொத்த நீர்மட்டம் 71 அடியில் தற்போது 32.09 அடி வரையே தண்ணீர் உள்ளது. அணைக்கு நீர்வரத்து முற்றிலும் இல்லை. அதனால், பாசனத்துக்குத் தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டுள்ளது.

மதுரை மாநகராட்சிக்காக மட்டும் 60 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. கேரளாவில் பெய்யும் தென்மேற்குப் பருவ மழை பெரியாறு, வைகை வடி நிலப் பகுதிகளில் இதுவரை பெய்யவில்லை. அதனால், சென்னையைத் தொடர்ந்து மதுரையிலும் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது.

மதுரையில் நிலத்தடி நீர் மட்டம் சில இடங்களில் 1,000 அடிக்குக் கீழ் சென்றது. மாநகராட்சியும் முழுமையாக குடிநீர் விநியோகம் செய்ய முடியாததால் குடிநீருக்காகவும், வீட்டு உபயோகத்துக்காகவும் மக்கள் விலை கொடுத்து தண்ணீரை வாங்கும் பரிதாபம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து பொதுப்பணித் துறை உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘வைகை அணையில் தற்போதுள்ள தண்ணீரை வைத்து மதுரை நகருக்கு ஆகஸ்ட் மாதம் வரை குடிநீர் வழங்கலாம்.

பருவமழை பெய்யாவிட்டால் அதன்பிறகு குடிநீருக்குக்கூட தண்ணீர் வழங்க இயலாது. அதற்குள் தென்மேற்குப் பருவமழை பெய்யும். பெரியாறு அணையில் தண்ணீர் வந்தால் குடிநீர் பற்றாக்குறையை சமாளித்துவிடலாம், ’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

35 mins ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

10 hours ago

இந்தியா

10 hours ago

விளையாட்டு

12 hours ago

இந்தியா

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்