சஞ்சய் தத்தை முன்கூட்டியே விடுதலை செய்தது மாநில அரசே: பேரறிவாளன் தாக்கல் செய்த ஆர்.டி.ஐ.க்கு பதில் கிடைத்தது

By செய்திப்பிரிவு

மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் சிக்கிய பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தை முன்கூட்டியே விடுதலை செய்தது மாநில அரசுதான் என பேரறிவாளன் தாக்கல் செய்த மனுவுக்குப் பதில் கிடைத்துள்ளது.

இந்தத் தகவல் பேரறிவாளனுக்கு மிகவும் தாமதமாகக் கிட்டியுள்ளது.

மும்பை தொடர் குண்டு வெடிப்பு சம்பந்தமாக பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால், அவர் முன்கூட்டியே விடுதலையானார். சிறையில் இருந்தபோதும் அடிக்கடி பரோலில் சென்றுவந்தார்.

கடைசியாக கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பரில் அவர் மத்திய அரசிடம் கருணை மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால், அந்த மனுவை மத்திய அரசு நிராகரித்தது.

மனு நிராகரிக்கப்பட்டதிலிருந்து சரியாக இரண்டே மாதத்தில், அதாவது பிப்ரவரி 2016-ல் சஞ்சய் தத் விடுவிக்கப்பட்டார். நன்நடத்தையின் கீழ் அவரை மகாராஷ்டிரா சிறைத்துறை விடுவித்தது.

இதனைச் சுட்டிக்காட்டி பேரறிவாளன் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனு தாக்கல் செய்திருந்தார். சஞ்சய் தத்தை முன்கூட்டியே விடுதலை செய்தது யார்? என்று அந்த மனுவில் கேட்டிருந்தார்.

இது தொடர்பாக தற்போது அவருக்கு பதில் கிடைத்திருக்கிறது. அந்த பதில் மனுவில், சஞ்சய் தத்தை முன்கூட்டியே விடுவித்தது மாநில அரசுதான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலுவையில் முடிவு

ராஜீவ் கொலை வழக்கில் சிறையிலுள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ராபர்ட் பயஸ் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை குறித்து தமிழக அமைச்சரவை கூடி தீர்மானம் நிறைவேற்றியது. அந்தத் தீர்மானம் ஆளுநருக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. இன்னும் ஆளுநர் அதில் முடிவு தெரிவிக்கவில்லை.

வழக்கறிஞர் சிவா கருத்து

சஞ்ச்ய தத் விடுதலை குறித்த தகவலை சுட்டிக்காட்டும் பேரறிவாளனின் வழக்கறிஞர் சிவகுமார், "சஞ்சய் தத்தின் விடுதலை மகாராஷ்டிரா சிறை சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு மாநில அரசாலேயே முடிவு செய்யப்பட்டிருக்கிறது. கிரிமினல் சட்டத்தையோ அல்லது அரசியல் சாசன வழிமுறைகளோ இதில் கணக்கில் கொள்ளப்படவில்லை.

தமிழக அரசு, மற்றும் ஆளுநருக்கு எங்களது வேண்டுகோள் இதுதான். ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரையும் விடுவிப்பதில் எவ்வித சட்டச்சிக்கலும் இல்லை என்பதை உணர்ந்து விரைவில் அவர்களை விடுதலை செய்ய வேண்டும்" எனக் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

வாழ்வியல்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

க்ரைம்

3 hours ago

இந்தியா

3 hours ago

சுற்றுலா

4 hours ago

மேலும்