குறும்பா... என் உலகே நீதான்டா...

By ஆர்.டி.சிவசங்கர்

அவ்வளவு பெரிய யானைகளையே சர்வசாதாரணமாக கட்டி மேய்க்கும் முதுமலை புலிகள் காப்பக  பாகன்களின் குழந்தைகளை சந்தித்தபோது, பல திருக்குறள்களைச் சொல்லி அசத்தினர். முதுமலை கேம்ப்பாடியில் உள்ள அங்கன்வாடி மையத்தில்தான் இப்படி  நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றனர் இங்குள்ள குழந்தைகள்.

இந்த அங்கன்வாடி மையத்தில் 20 குழந்தைகள் படிக்கின்றனர். குறும்பர் இனத்தைச் சேர்ந்த  இந்தக் குழந்தைகள், திருக்குறளை ஒப்புவிப்பதுடன், ஆசிரியை கூறும் ஆங்கிலப் பாடல்கள் முதல் உடற்பயிற்சி வரை அனைத்தும் செய்து அசத்துகின்றனர். இதில், குறிப்பிடத்தக்கது தமிழ் அவர்களது தாய்மொழி அல்ல.

இந்தக் குழந்தைகள் அங்கன்வாடியில் தான் தமிழ் பயிலுகின்றனர். குழந்தைகள் உற்சாகத்துடன் அங்கன்வாடிக்கு வந்தாலும்,போதிய இட வசதியில்லாமல் சிரமப்படுவதாக தெரிவிக்கிறார் ஆசிரியை ஜெயா.

“முதுமலைக்கு உட்பட்ட கேம்ப்பாடி, யானை பாடி, தெப்பக்காடு கிராமங்களில் 97 குடும்பங்கள் வசிக்கின்றன.

இங்குள்ளவர்களின் குழந்தைகளுக்காக கேம்ப்பாடியில் அங்கன்வாடி மையம் இயங்குகிறது. இந்த மையத்தில் தற்போது  20 குழந்தைகள் படிக்கின்றனர்.  ஒரு சமையலர் மற்றும் ஆசிரியை என இருவர் பணிபுரிகிறோம்.

சொந்தக் கட்டிடம் இல்லாததால், வாடகை வீ்ட்டில் இம்மையம் செயல் படுகிறது. அங்கன்வாடிக்கு தனி கட்டிடமோ,குழந்தைகள் விளையாட மைதானமோ கிடையாது.  வீட்டின் முன் அறையில் குழந்தைகள் வகுப்பறை நடக்கிறது. குழந்தைகளுக்கு சத்துணவு வழங்கப்படுகிறது. ஆனால், சமையலுக்கு தனி இடம் இல்லை. வீட்டின் முன்புறம் அடுப்பு மூட்டி சமையல் செய்வோம். மழை வந்துவிட்டால், வீ்ட்டின் உள் அறையில்தான் சமையல் நடக்கும்.

மேலும், வீட்டின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதால், பக்கத்து வீட்டிலிருந்து மின் இணைப்பு பெற்றுள்ளோம். வீட்டின் கூரை ஆஸ்பெஸ்டாஸ் ஷீட்டினாலானது. இப்பகுதியில் நடமாடும் குரங்குகள் கூரையின் மீது குதிப்பதால், கூரை உடைந்து விடுகிறது.

யானைபாடி கிராமம் தெப்பக்காடு பாலத்தின் மறுகரையில் உள்ளதால், பாலத்தைக் கடந்து  குழந்தைகள் அங்கன்வாடிக்கு வர வேண்டும். போக்குவரத்து நெரிசல் காரணமாக குழந்தைகள் பாதுகாப்பாக பாலத்தைக் கடந்து வருவதே சவாலாக உள்ளது. எனவே, குழந்தைகள்பாதுகாப்பை கருதி சொந்தக் கட்டிடத்துக்கு அங்கன்வாடி மையத்தை மாற்ற வேண்டும்” என்றார்.

முதுமலை புலிகள் காப்பகம், தேசிய புலிகள் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. எனவே, இப்பகுதியில் கட்டிடம் கட்டுவதில் சிக்கல் உள்ளது. எனவே, தகரத்தினால் அல்லது தற்போது புதுவித கட்டுமான யுக்திகளைப் பயன்படுத்தி அங்கன்வாடி மையம் அமைக்க வேண்டும் என்கின்றனர் இப்பகுதி மக்கள்.

நீலகிரியில் தோடர், கோத்தகர், இருளர், பனியர், குறும்பர், காட்டுநாயக்கர் ஆகிய 6 பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். 2001 மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி இம்மாவட்டத்தில்  7.50 லட்சம் பேர் உள்ளனர் இவர்களில் பழங்குடியினர் 3.70 சதவீதம். பெரும்பாலான பழங்குடியினர் பள்ளிப்  படிப்பைக் கடப்பதில்லை என்பது கவலைக்குரியது.

 தோடர், கோத்தர் இன மக்கள் ஓரளவுக்கு முன்னேறியுள்ள நிலையில், இருளர், பனியர், குறும்பர், காட்டுநாயக்கர் சமூக  மக்கள் போதிய முன்னேற்றம் அடையவில்லை. கூடலூரில் பனியர், இருளர், குறும்பர், காட்டுநாயக்கர் இன மக்கள் விவசாயக் கூலிகளாகவே வாழ்கின்றனர். எனவே, பழங்குடியினர் குழந்தைகளின் கல்விக்காக வனத் துறை அதிகாரிகள் உதவ வேண்டும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

“முதுமலை புலிகள் காப்பகம் உள்ளிட்ட பகுதிகளில், தங்கள் தேவைக்காக வனத் துறை பல கட்டிடங்களைக் கட்டி வருகிறது. யானைகள் முகாம் பகுதியில் இயற்கை பள்ளி, தகவல் மையம் என பல கட்டிடங்கள் உள்ளன.

இந்நிலையில், யானைப் பாகன்களின் குழந்தைகள் படிப்புக்கு வனத் துறை உதவ வேண்டும். அங்கன்வாடி மையத்துக்கு தனி கட்டிடம் கட்டித்தர வேண்டும்” என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

15 mins ago

இந்தியா

56 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

வாழ்வியல்

3 hours ago

தமிழகம்

3 hours ago

ஆன்மிகம்

2 hours ago

கருத்துப் பேழை

3 hours ago

விளையாட்டு

3 hours ago

மேலும்