சிட்கோ நிலம் அபகரித்ததாக தொடரப்பட்ட வழக்கு: மா.சுப்பிரமணியனுக்கு உயர் நீதிமன்றம் முன் ஜாமீன்

By செய்திப்பிரிவு

சிட்கோ நிலத்தை அபகரித்ததாக தொடரப்பட்ட வழக்கில் திமுக எம்எல்ஏ மா.சுப்பிரமணியனுக்கும், அவரது மனைவிக்கும் சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை முன் ஜாமீன் வழங்கியுள்ளது.

கடந்த 2016-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் சைதாப்பேட்டை தொகுதியில், திமுக சார்பில் சென்னை மாநகர முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

தேர்தலின்போது, தாக்கல் செய்த வேட்புமனுவில், கிண்டி, தொழிலாளர் காலனியில், தன் மனைவி காஞ்சனாவுக்கு சொத்து உள்ளதாக குறிப்பிட்டிருந்தார். ஆனால் அது பொய்யான தகவல் என குற்றச்சாட்டு எழுந்தது.

1959-ம் ஆண்டு எஸ்.கே.கண்ணன் என்பவருக்கு தொழில் மற்றும் வர்த்தகத்துறை ஒதுக்கீடு செய்த நிலத்தை, அவர் 2015-ம் ஆண்டு மறைந்த பிறகு, 6 மகள்கள், ஒரு மகன் ஆகிய வாரிசுதாரர்களிடமிருந்து தன் செல்வாக்கைப் பயன்படுத்தி போலி ஆவணங்களைத் தயாரித்து மா.சுப்பிரமணியன் அபகரித்துள்ளதாக சைதை பார்த்திபன் என்பவர் காவல்துறையில் புகார் அளித்தார்.

இதன்படி, மோசடி செய்து அபகரித்த நிலத்தை அவர் தனது மனைவி காஞ்சனாவின் பெயருக்கு மாற்றியுள்ளதாகவும், இந்த மோசடிக்கு தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி கழகத்தின் (சிட்கோ) அதிகாரிகளும் உடந்தையாக இருந்ததாகவும் குறிப்பிட்டிருந்தார். இந்தப் புகாரை விசாரித்த கிண்டி போலீஸார் மா.சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவி காஞ்சனா மீதும் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி இருவரும் தாக்கல் செய்த வழக்கு நீதிபதி இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது.

 

அப்போது, மா.சுப்பிரமணியன் தரப்பில், ''தேர்தலில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட சைதை பார்த்திபன் 87 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியடைந்தார்.அப்போதிருந்தே தன் நற்பெயரை களங்கப்படுத்த பார்த்திபன் முயற்சிப்பதாகவும், சிட்கோ நில உரிமை பெற்ற கண்ணன் உயிருடன் இருக்கும்போதே இடத்தை தன் மனைவி பெயருக்கு சட்டப்பூர்வமாக மாற்றப்பட்டது'' என்றும் தெரிவிக்கப்பட்டது.

அரசுத் தரப்பில், ''ஆவண மோசடி, அதிகார துஷ்பிரயோகம் மூலம் நில அபகரிப்பு செய்துள்ளதால் மா.சுப்பிரமணியன், காஞ்சனாவிற்கு முன் ஜாமீன் வழங்கக் கூடாது'' என வாதிடப்பட்டது. பின்னர் நீதிபதி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தார்.

பின்னர் இன்று தீர்ப்பளித்த நீதிபதி இளந்திரையன், இருவருக்கும் நிபந்தனை முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். விசாரணைக்கு தேவைப்படும்போது ஆஜராக வேண்டும், சாட்சிகளை கலைக்கக் கூடாது என்ற நிபந்தனைகளுடன் முன் ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

வணிகம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

தொழில்நுட்பம்

4 hours ago

சினிமா

5 hours ago

க்ரைம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

இந்தியா

6 hours ago

க்ரைம்

7 hours ago

மேலும்