தமிழக சிறைகளில் உள்ள ஆயுள் கைதிகளின் குழந்தைகள் நிலை என்ன?: ஆராய குழு அமைத்து உயர் நீதிமன்றம் உத்தரவு

By கி.மகாராஜன்

தமிழக சிறைகளில் உள்ள ஆயுள் கைதிகளின் குழந்தைகள் நிலையை ஆராய குழு அமைத்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் செம்புதூரைச் சேர்ந்தவர் சுப்பையா(45). இவரது மனைவி பரமேஸ்வரி. இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். கணவன், மனைவி இடையே குடும்பத் தகராறு இருந்துள்ளது. பரமேஸ்வரி கடந்த 8.3.2014-ல் உடல் கருகிய நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மறுநாள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மனைவியை எரித்து கொலை செய்ததாக சுப்பையாவை கொப்பம்பட்டி போலீஸார் கைது செய்தனர். இவ்வழக்கில் சுப்பையாவுக்கு தூத்துக்குடி மாவட்ட மகளிர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியது. தாய் இறந்த நிலையில் தந்தையும் சிறைக்கு செல்வதால் அவரது 3 மகன்களையும் மாவட்ட குழந்தைகள் நலக்குழு வளர்க்க வேண்டும். சிறையில் இருந்து விடுதலையானதும் குழந்தைகளை சுப்பையாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

இந்நிலையில் தண்டனையை எதிர்த்து சுப்பையா உயர் நீதிமன்ற கிளையில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதிகள் எஸ்.விமலா, டி.கிருஷ்ணவள்ளி அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ஆர்.அழகுமணி வாதிட்டார். விசாரணையின்போது சுப்பையாவின் 3 மகன்களையும் நீதிபதிகள் அழைத்து விசாரித்தனர்.

பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: இந்த வழக்கில் மனுதாரரின் மனைவி தீக்குளித்து இறந்துள்ளார். அவரது இறப்புக்கு மனுதாரரும் ஒரு காரணமாக இருந்துள்ளார். இதற்கு அவர் இதுவரை சிறையில் அனுபவித்த தண்டனையே போதுமானது. எனவே மனுதாரருக்கு கீழமை நீதிமன்றம் வழங்கிய ஆயுள் தண்டனை ரத்து செய்யப்படுகிறது.

தமிழகத்தில் 8 மத்திய சிறைகளில் உள்ள ஆயுள் தண்டனை கைதிகளின் குழந்தைகள் நிலையை அறிய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. ஆயுள் தண்டனை கைதிகளின் குழந்தைகள் என்ன செய்கின்றனர், படிக்கிறார்களா, இல்லையா? யார் பராமரிப்பில் உள்ளார்கள் என்ற விவரங்கள் அரசிடமும், சிறைத் துறையிடமும் இல்லை.

இவர்களில் பெண் குழந்தைகள் சட்டவிரோத கும்பல்களிடம் சிக்கி, குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கப்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளன. ஆதரவற்ற 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அரசுதான் பாதுகாவலர். சிறையில் இருப்பவர்கள் திருந்தி சமூகத்தில் நல்ல நிலையில் வாழும் வரை குழந்தைகளை பாதுகாக்க வேண்டியது முக்கியம்.

இதனால் தமிழக சிறைகளில் உள்ள ஆயுள் கைதிகளின் குழந்தைகள் தற்போது என்ன செய்கின்றனர், யார் கட்டுப்பாட்டில் உள்ளனர் என்பதை ஆய்வு செய்ய குழு அமைக்கப்படுகிறது. இக்குழு அனைத்து விவரங்களையும் மார்ச் 23-ல் தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

6 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

ஜோதிடம்

9 hours ago

ஜோதிடம்

9 hours ago

ஜோதிடம்

9 hours ago

மேலும்