வனத்துறை அனுமதியுடன் மலையேறினோம்: மலையேற்றக் குழு ஒருங்கிணைப்பாளர் பிரபு தகவல்

By செய்திப்பிரிவு

குரங்கணி வனப்பகுதியில் மலையேற்றப் பயிற்சிக்கு செல்லும்போது, வனத்துறையினரிடம் உரிய அனுமதி பெற்று கட்டணம் செலுத்தியே பங்கேற்றோம் என சென்னிமலையைச் சேர்ந்த பிரபு தெரிவித்துள்ளார்.

சென்னிமலையைச் சேர்ந்த பிரபு ஈரோட்டில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்நிறுவனம் மூலமே குரங்கணி மலைப்பகுதிக்கு, பிரபு உள்ளிட்ட 12 பேர் மலையேற்றப் பயிற்சிக்கு சென்றுள்ளனர். தீ விபத்தில் சிறு காயங்களுடன் தப்பிய பிரபு, சிகிச்சைக்குப் பின் சென்னிமலைக்கு திரும்பினார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

மலையேற்றப் பயணங்களின்போது வனத்துறையினரின் அனுமதியோடுதான் பயணம் மேற்கொள்வோம். குரங்கணி மலை ஏற்றப் பயிற்சிக்கென, முந்தலில் உள்ள வனத்துறை சோதனைச்சாவடியில் ஒரு நபருக்கு ரூ.200 வீதம், மொத்தம் ரூ.2400 கொடுத்தோம். ரஞ்சித் என்ற உள்ளூர் வழிகாட்டியின் உதவியுடன் குரங்கணி அடிவாரத்துக்கு சென்றபோது, எங்களுக்கு வனத்துறை ஊழியர் ஒருவர் பயணத்துக்கான அனுமதி சீட்டுகளை தந்தார்.

தீ விபத்துக்குப்பின், போலீஸ் விசாரணை நடத்தியபோது, என்னிடம் இருந்த 8 அனுமதி சீட்டுகளை பெற்றுக் கொண்டனர். 4 அனுமதிச் சீட்டுகள் தீ விபத்தின் போது தவறிவிட்டன. நாங்கள் குரங்கணி சென்றபோது 2 நாட்களாக வெயில் அதிகமாக இருக்கிறது என்று மட்டுமே வனத்துறையினர் தெரிவித்தனர். காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது குறித்து யாரும் தெரிவிக்கவில்லை. 11-ம் தேதி கொழுக்குமலையில் உள்ள டீ தொழிற்சாலையை சுற்றிப் பார்த்துவிட்டு, ஒத்தமரம் என்ற இடத்துக்கு வந்தபோதுதான் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது குறித்து ரஞ்சித் எங்களுக்கு எச்சரிக்கை செய்தார். அதே இடத்தில் இருந்த சென்னை குழுவினருடன் சேர்ந்து, தப்பிக்க முயன்றோம்.

காற்றடிக்கும் திசைக்கு எதிர் திசையில் சென்றால், தப்பித்து விடலாம் என முயற்சித்தோம். ஆனால், அந்த பகுதியிலும், தீ பரவி இருந்தது. இதையடுத்து நான்கு புறமும் பிரிந்து ஒவ்வொருவரும் தங்களுக்கு தெரிந்த வழியில் தப்பிக்க முயன்றனர். நானும், ரஞ்சித்தும் 3 குழந்தைகளை அழைத்துக் கொண்டு தப்பினோம். குரங்கணிக்கு வந்து தகவல் தெரிவித்து பிறகு மீட்பு முயற்சிகள் நடந்தன என்றார்.

முன்னதாக அவர் மதுரையில் போலீஸாரிடம் விபத்து குறித்து வாக்குமூலம் அளித்திருந்தார். அதன் அடிப்படையில், இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 174-ன் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

டிரெக்கிங் கிளப் விளக்கம்

இதேபோன்று, சென்னை டிரெக்கிங் கிளப் நேற்று முகநூல் பக்கத்தில் வெளியிட்ட விளக்கம்:

27 பேர் கொண்ட குழு 2 நாள் டிரெக்கிங் பயணம் மேற்கொண்டது. வனத்துறை சோதனை சாவடியில் கட்டணம் செலுத்தி முறையாக அனுமதி பெற்று மலையேற்றத்தை தொடங்கியுள்ளனர். கொழுக்குமலை செல்லும் மலையேற்ற பாதை வழக்கமாக மலையேற்றம் செல்பவர்கள் செல்லும் பாதைதான். 11-ம் தேதி காலை கீழே இறங்கத் தொடங்கி பாதி வழியை அடைந்த நிலையில், மலையடிவார விவசாயிகள், வழக்கமான விவசாய நடைமுறைப்படி புற்களை பற்ற வைத்ததாக தெரிகிறது. அந்த நேரத்தில் காற்று பலமாக வீசியதால் மலையடிவாரத்தில் இருந்து தீ மேல் நோக்கி பரவியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 mins ago

ஆன்மிகம்

21 mins ago

தமிழகம்

41 mins ago

தமிழகம்

5 hours ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

1 hour ago

தமிழகம்

1 hour ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

வாழ்வியல்

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

7 hours ago

மேலும்