அயோத்தியும் நெகிழ்ச்சியும்!: நினைவுகூரும் முஸ்லிம் தனிச்சட்ட வாரியம்

By ஆர்.ஷபிமுன்னா

அயோத்தி விவகாரத்தில் ஸ்ரீ ஜெயேந்திரர் சமரசத்துக்கு முயன்றதை அகில இந்திய முஸ்லிம் தனிச்சட்ட வாரியம் நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்துள்ளது.

உ.பி.யின் அயோத்திக்கு கடந்த 2001-ல் ஸ்ரீ ஜெயேந்திரர் முதல்முறையாக வந்திருந்தார். இவரை விஷ்வ இந்து பரிஷத் (விஎச்பி) சாதுக்கள் வரவேற்று, ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். ஸ்ரீ ராமஜென்மபூமி அறக்கட்டளையின் தலைவராக இருந்த ஸ்ரீ ராமச்சந்திர பரமஹம்சரின் ‘திகம்பர அகாடா’ மடத்தில் ஸ்ரீ ஜெயேந்திரர் தங்கினார். அப்போது இந்து மற்றும் முஸ்லிம் தரப்பினரை அழைத்துப் பேசினார். இதைத்தொடர்ந்து அவர் ராமர் கோயில் - பாபர் மசூதி விவகாரத்தில் சமரசப் பேச்சுவார்த்தையில் இறங்கினார். ஸ்ரீ ஜெயேந்திரர் அழைப்பை ஏற்று அகில இந்திய முஸ்லிம் தனிச்சட்ட வாரியத்தின் தலைவரான மவுலானா ரப்பே ஹசன் நத்வீ, காஞ்சி மடத்துக்கு வந்து அவரை சந்தித்துப் பேசினார். பிறகு ஸ்ரீ ஜெயேந்திரரும் லக்னோ சென்று நத்வா மதராஸாவில் அமர்ந்து முஸ்லிம் தலைவர்களுடன் பேசினார். பிறகு இரு தரப்பினருடன் அப்போதைய பிரதமர் வாஜ்பாய் அனுப்பிய அதிகாரிகளுடனும் ஸ்ரீ ஜெயேந்திரர் டெல்லியில் இறுதிக்கட்டப் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதனை நினைவுகூரும் வகையில் முஸ்லிம் தனிச்சட்ட வாரியத்தின் செய்தித் தொடர்பாளர் ஜபர்யாப் ஜிலானி ‘தி இந்து’விடம் கூறும்போது, “சமரசப் பேச்சுவார்த்தையின் போது ஸ்ரீ ஜெயேந்திரர் எங்களுக்கு உரிய மரியாதை அளித்தது நெகிழ்ச்சிக்கு உரியது. சமரசம் ஏற்பட வேண்டி நாங்கள் கேட்ட இந்துக்கள் தரப்பு பரிந்துரைகளை அவர் இருமுறை அனுப்பியிருந்தார். அதில் அயோத்தி, காசி, மதுரா ஆகிய மூன்று இடங்களையும் விட்டுத்தரக் கோரியதை வாரியத்தின் நிர்வாகக்குழு ஏற்கவில்லை. இதை மனதில் கொள்ளாமல் அதன் பிறகும் அவர் தொடர்ந்து முஸ்லிம் தலைவர்களுடன் நட்பு பாராட்டினார். ஸ்ரீ ஜெயேந்திரர் போன்ற இந்து தலைவர்கள் எப்போதும் முஸ்லிம்களின் மதிப்புக்கு உரியவர்களாக இருப்பார்கள்” என்று தெரிவித்தார்.

2003-ம் ஆண்டு வரை தொடர்ந்த இந்த பேச்சுவார்த்தையில் சமரசம் எதுவும் ஏற்படவில்லை. எனினும் நாட்டில் உள்ள நான்கு மடங்களின் சங்கராச்சாரியார்களில் ஸ்ரீ ஜெயேந்திரர் மட்டும் அதற்காக எடுத்த முயற்சி பெரும் பாராட்டைப் பெற்றது. இதற்கு முஸ்லிம்களுக்கு ஆதரவான பல நல்லிணக்கக் கருத்துகளை ஸ்ரீ ஜெயேந்திரர் முன்வைத்தது ஒரு முக்கிய காரணமாகும். அவர், முஸ்லிம் மன்னர்கள் பலரும் கோயில், மடங்களுக்கு கொடை அளித்ததை நினைவுகூர்ந்தார். அதில் ஸ்ரீரங்கம் கோயில், சிருங்கேரி, காஞ்சி மடங்களுக்கும் முஸ்லிம் மன்னர்கள் நிதியுதவி செய்ததையும் குறிப்பிட்டிருந்தார். தனிச்சட்ட வாரியத்தின் முன்னாள் தலைவரான (அலி மியான்) மவுலானா அபுல் ஹசன் அலி ஹசனி நத்வியும் தமது சங்கர மடத்துக்கு காஞ்சி பரமாச்சாரியா சந்திரசேகரேந்திர சரஸ்வதியைக் காண மூன்று முறை நட்புடன் வந்திருந்ததையும் ஸ்ரீ ஜெயேந்திரர் முன்னிறுத்தியது அவர் முஸ்லிம்களின் மனதில் இடம்பெறக் காரணமானது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

38 mins ago

வணிகம்

8 hours ago

சுற்றுச்சூழல்

1 hour ago

சுற்றுலா

1 hour ago

கல்வி

44 mins ago

தமிழகம்

1 hour ago

சுற்றுலா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

ஆன்மிகம்

3 hours ago

மேலும்