விளைநிலங்களில் பயிர்களை அழித்து எரிவாயு குழாய் அமைக்கும் கெயில் நிறுவனம்: வைகோ கண்டனம்

By செய்திப்பிரிவு

விளைநிலங்களில் பயிர்களை அழித்து கெயில் நிறுவனம் எரிவாயு குழாய் அமைப்பதற்கு, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வைகோ இன்று (சனிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "நாகப்பட்டினம் மாவட்டம் - சீர்காழி அருகில் உள்ள பழையபாளையத்தில் விளைநிலங்களில் எரிவாயு எடுப்பதற்கான ஆழ்குழாய் கிணறுகளை இந்திய எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனம் (ஓஎன்ஜிசி) அமைத்துள்ளது. இங்கு எடுக்கப்படும் எரிவாயு, செம்பனார்கோவில் அருகே மேமாத்தூரில் உள்ள கிடங்குக்குக் கொண்டுசென்று சேமிக்கப்படுகிறது. இதற்காக பழையபாளையம் முதல் மேமாத்தூர் வரை சுமார் 29 கிலோ மீட்டர் தூரத்திற்கு ராட்சத குழாய்கள் பதிக்கும் பணியை கெயில் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

நில உரிமையாளர்களின் ஒப்புதல் இன்றி குழாய்கள் பதிப்பதற்கு பணிகள் தொடங்கப்பட்டபோது, விவசாயிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

'மாதானம் திட்டம்' என்ற பெயரில் ஓஎன்ஜிசி ஆழ்துளை கிணறுகளை அமைத்து, துரப்பன பணிகள் நடந்து வருகிறது. இங்கு எடுக்கப்படும் கச்சா எண்ணெய் நாள்தோறும் 20 லாரிகளில் எடுத்துச் செல்லப்படுகிறது. இந்தக் கிணறுகளின் வாயிலாக ரசாயனக் கலவைகளை பூமிக்குள் செலுத்துவதால் சுற்றியுள்ள 30 ஆயிரம் ஏக்கருக்கு மேலான விளைநிலங்கள் பாழாகி வருகின்றன. நிலத்தடி நீர் ஆதாரமும் பாதிக்கப்பட்டுவிட்டது.

இந்நிலையில் தான் கடந்த 2018 ஆம் ஆண்டு பழையபாளையம், அகரவட்டாரம், வேட்டங்குடி, எடமணல், திருநகரி உள்ளிட்ட கிராமங்களில் விளைநிலங்கள் வழியாக குழாய் பதித்து, எரிவாயு கொண்டு செல்ல கெயில் நிறுவனம் திட்டமிட்டபோது, விவசாயிகள் அதனை எதிர்த்துப் போராட்டத்தில் இறங்கினர். எடப்பாடி பழனிசாமி அரசு வழக்கம் போல கண்டுகொள்ளாமல் அலட்சியமாக இருந்தது.

விவசாயிகளின் கருத்துக் கேட்கப்படாமல், கெயில் நிறுவனம் தமது விருப்பப்படி விளைநிலங்களைத் தோண்டும் பணியை சீர்காழி அருகில் உள்ள நாங்கூர் கிராமத்தில் தொடங்கியது. ஏப்ரல் மாதம் 13 மற்றும் 14 தேதிகளில் கெயில் நிறுவனத்தின் சார்பில் குழாய் பதிக்கும் பணிகளை அப்புறப்படுத்தக்கோரி, நாங்கூர் பொதுமக்கள் காத்திருப்புப் போராட்டத்தில் இறங்கினர். எனவே கெயில் நிறுவனம் பணிகளை நிறுத்தி வைத்தது.

விவசாயிகள் எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல், கெயில் நிறுவனம் மே 16 ஆம் தேதி, மேமாத்தூர், காளகஸ்திநாதபுரம் பகுதியில் குறுவை சாகுபடிக்கு விதை விட்ட மற்றும் நடவு செய்த வயல்களில் பொக்லைன் இயந்திரத்தை இறக்கி பயிர்களை நாசப்படுத்தி, குழாய் பதிக்க முனைந்தபோது, மக்கள் கொதித்து எழுந்தனர். பயிர்களை அழித்து விளைநிலங்களில் குழாய் பதிப்பதைக் கைவிட வேண்டும் என்று விவசாயிகள் தங்கள் உடலில் சேற்றைப் பூசிக்கொண்டு போராட்டம் நடத்தினர்.

நேற்று முன்தினம் உமையாள்புரம் கிராமத்தில் நடவு செய்த விளைநிலத்தில் ராட்சத குழாய் பதிக்கும் வேலைக்காக பொக்லைன் இயந்திரத்தை இறக்கிப் பயிர்களை அழித்துள்ளது கெயில் நிறுவனம். இவ்வாறு பொக்லைன் இயந்திரம் மூலம் தோண்டும் பள்ளத்தை எளிதில் சமன் செய்யவும் முடியாது.

ஊர் மக்கள் திரண்டு எதிர்ப்புத் தெரிவித்தும், தமிழக அரசு அதிகாரிகள் கவலையின்றி அலட்சியப்போக்குடன் செயல்படுவதால், கெயில் நிறுவனம் தமது விருப்பம் போல விளைநிலங்களைச் சீரழிக்கும் பணியைச் செய்து வருகிறது.

சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள் கண்முன்னே அழிவதைப் பார்த்து விவசாயிகள் கதறி அழுது கண்ணீர் வடிக்கும் காட்சி நெஞ்சை உலுக்குகிறது.

கொச்சியிலிருந்து - பெங்களூருக்கு எரிவாயு குழாய் கொண்டு செல்ல மேற்கு மாவட்ட விளைநிலங்களில் குழாய் அமைக்க கெயில் நிறுவனம் முயற்சித்தபோது, விவசாயிகள் போராடியதால் தமிழக முதல்வர் மறைந்த ஜெயலலிதா, கெயில் நிறுவனத்துக்குத் தடை விதித்தார். உச்ச நீதிமன்றம் வரையில் சென்று கெயில் நிறுவனம் அனுமதி பெற்றிருந்தாலும், கோவை, திருப்பூர், ஈரோடு, தருமபுரி மாவட்டங்களில் இன்னமும் விவசாயிகள் போராடி வருகின்றனர்.

இச்சூழலில் காவிரி டெல்டாவிலும் விவசாய நிலங்களை பாழ்படுத்தும் முயற்சியில் கெயில் நிறுவனம் இறங்கி இருப்பது கடும் கண்டனத்துக்கு உரியது.

காவிரி பாசனப் பகுதிகளில் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் எரிவாயு எடுத்தல் உள்ளிட்ட நாசகாரத் திட்டங்களை ரத்துச் செய்யக் கோரி மக்கள் போராட்டம் தீவிரமடையும் சூழலை உணர்ந்துகொண்டு, தமிழக அரசு இத்திட்டங்களுக்கு உடனடியாகத் தடை விதிக்க வேண்டும்" என, வைகோ வலியுறுத்தியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 min ago

தமிழகம்

14 mins ago

சினிமா

43 mins ago

க்ரைம்

24 mins ago

தமிழகம்

46 mins ago

தமிழகம்

37 mins ago

தொழில்நுட்பம்

19 mins ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

3 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்