தமிழ், மலையாள இலக்கியம் நன்கறிந்த தோப்பில் முஹம்மது மீரான்: இஸ்லாமிய சமூக வாழ்வியலை பதிவு செய்த முன்னோடி

By அ.அருள்தாசன்

தமிழ் மற்றும் மலையாள இலக்கிய உலகம் நன்கறிந்த எழுத்தாளர் தோப்பில் முஹம்மது மீரான் (75), இஸ்லாமிய சமூக வாழ்வியலை பதிவு செய்தவர்களில் முக்கியமான படைப்பாளி.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடலோர கிராமமான தேங்காய்பட்டினத்தில் 1944-ம் ஆண்டு செப்டம்பர் 26-ம் தேதி பிறந்த தோப்பில் முஹம்மது மீரான், தனது. 75 வயதில் உடல் நலக்குறைவால் திருநெல்வேலி பேட்டையில் நேற்று அதிகாலையில் காலமானார். இவர், தமிழிலும், மலையாளத்திலும் எழுதும் ஆற்றல் மிக்கவர்.

`சாய்வு நாற்காலி’ எனும் நாவலுக்காக 1997-ம் ஆண்டில் சாகித்ய அகாடமி விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்ற பெருமைமிக்கவர்.

70-களில் தொடங்கிய இவரது எழுத்துப் பயணம் தனித்தன்மை வாய்ந்தது. அதிகம் எழுதப்படாத இஸ்லாமிய சமூக வாழ்வியலை தனது படைப்புகளில் பதிவு செய்த முன்னோடி. இவர், 1988-ம் ஆண்டில் எழுதிய `ஒரு கடலோர கிராமத்தின் கதை’ என்ற நாவல், தமிழக இஸ்லாமியர்களின் வாழ்வியல் குறித்த இனவரைவியல் நாவலாக திறனாய்வாளர்களால் போற்றப்படுகிறது. 1991-ல் துறைமுகம், 1993-ல் கூனன்தோப்பு, அஞ்சுவண்ணம் தெரு நாவல்களையும், 2 ஆண்டுகளுக்கு முன் குடியேற்றம் நாவலையும் எழுதியிருக்கிறார். நாவல்கள் மட்டுமல்லாமல் சிறுகதை தொகுதிகளையும் எழுதி வெளியிட்டுள்ளார். அன்புக்கு முதுமை இல்லை, அனந்தசயனம் காலனி, ஒரு குட்டித் தீவின் வரிப்படம், ஒரு மாமரமும் கொஞ்சம் பறவைகளும், தோப்பில் முஹம்மது மீரான் கதைகள் என்று பல தொகுப்புகள் வெளிவந்துள்ளன. வைக்கம் முகமது பஷீர் வாழ்க்கை வரலாறு ஆய்வு கட்டுரையை மலையாளத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.

2009-ல் வேர்களின் பேச்சு என்ற தலைப்பிட்டு தனது 75 சிறுகதைகளையும் தொகுத்து புத்தகமாக வெளியிட்டிருக்கிறார்.

அவரது குடும்பத்தில் முதல் தலைமுறையாக பள்ளி சென்றது அவர்தான். பத்தாம் வகுப்பு தேர்வை நான்கு முறை எழுதியதாக தோப்பில் ஒரு நேர்காணலில் குறிப்பிட்டார். பி.ஏ. மலையாள இலக்கியம் பயின்றிருக்கிறார். திருநெல்வேலி சதக்கத்துல்லா அப்பா கல்லூரி தமிழ்த்துறை தலைவர் சவுந்தர மகாதேவன் கூறும்போது, ``மிகச்சிறந்த வாழ்வியல் சித்திரக்காரர். வைக்கம் முகமது பசீரையும் தி.ஜானகிராமனையும், சுந்தர ராமசாமியையும், கி.ரா.வையும், ஜெயமோகனையும், பாவண்ணனையும், இமயத்தையும் விரும்பிப் படிப்பதாக கூறியுள்ளார். கடந்த ஆண்டு பள்ளிக்கல்வித் துறை தமிழாசிரியர்களுக்காக திசையன்விளையில் ஏற்பாடு செய்திருந்த புத்தாக்க பயிற்சியில் அவர் பேசும்போது, தாய்மொழிக் கல்வி குறித்து தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார். சமகால தமிழ் இலக்கியங்களை வாசிக்காமல் தமிழ் வகுப்புகளை நடத்தாதீர்கள் என்பது அவரது அறிவுரை என்றார் மகாதேவன்.

எழுத்தாளர் நாறும்பூ நாதன் கூறும்போது, ``அடித்தட்டு இஸ்லாமியர்களின் வாழ்வியலை நுட்பமாக பதிவு செய்திருக்கிறார். வளரும் எழுத்தாளர்களுக்கு ஊக்கமாக இருந்தார். கடந்த ஆண்டு சாகித்ய அகாடமி விருது தேர்வு குழுவில் உறுப்பினராக இருந்தார். எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு இந்த விருது கிடைக்க இவர் முக்கிய காரணம்” என்று தெரிவித்தார்.

`ஓர் இரங்கற்பா’ என்ற கதையில், `வர இருக்கும் என் இறப்புக்கு நித்திய சாந்தி நானே நேர்கிறேன்’ என்று தோப்பில் முஹம்மது மீரான் நிறைவு செய்திருந்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

16 mins ago

தமிழகம்

25 mins ago

க்ரைம்

39 mins ago

வாழ்வியல்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

47 mins ago

க்ரைம்

2 hours ago

சினிமா

2 hours ago

இந்தியா

2 hours ago

ஓடிடி களம்

2 hours ago

கருத்துப் பேழை

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்