இப்போதாவது ஏழு பேரை விடுவியுங்கள்: உச்ச நீதிமன்ற தீர்ப்பையடுத்து ஆளுநருக்கு வைகோ வேண்டுகோள்

By செய்திப்பிரிவு

7 பேர் விடுதலை குறித்து தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றி அனுப்பி 8 மாதமாகியும் நடவடிக்கை எடுக்கவில்லை. உச்ச நீதிமன்றம் இன்று சுட்டிக்காட்டிய பிறகாவது விடுதலை செய்யுங்கள் என ஆளுநருக்கு வைகோ வேண்டுகோள் வைத்துள்ளார்.

பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய ஏழு பேர் விடுதலைக்கு தடை கேட்டு அமெரிக்கை நாராயணன், உயிரிழந்த ஆய்வாளரின் மகன் உள்ளிட்ட சிலர் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த விவகாரத்தில் தமிழக ஆளுநரே முடிவெடுப்பார் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று வெளியிட்ட அறிக்கையில், ''பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய ஏழு பேர், கடந்த 28 ஆண்டுகளாக சிறைச்சாலையில் வாடுகின்றனர். குற்றமற்ற நிரபராதிகளான இவர்களின் வாழ்க்கையே நிர்மூலமாக்கபட்டது.

இந்த ஏழு பேரையும் விடுதலை செய்யலாம். விடுதலை செய்வதற்கு தமிழக அரசு முடிவு எடுக்கலாம் என்று மூவர் மரண தண்டனையை ரத்து செய்து தீர்ப்பு அளித்தபோதே அன்றைய உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தெரிவித்து இருந்தார்.

ஏழு பேரையும் விடுதலை செய்வதற்கு, மறைந்த முதல்வர் ஜெயலலிதா முடிவெடுத்து, மத்திய அரசுக்கு தெரிவித்தபோது, மத்திய அரசு முட்டுக்கட்டை போட்டது. விடுதலை செய்யக் கூடாது என்று உச்ச நீதிமன்றத்தை நாடியது.

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் அமர்வு,ஏழு பேரையும் விடுதலை செய்வதற்கு, மத்திய அரசின் ஆட்சேபனைகளை நிராகரித்துவிட்டு இந்திய அரசியல் சட்டம் 161-வது பிரிவின்படி தமிழக அரசே முடிவெடுக்கலாம் என்று 2018 செப்டம்பர் 6-ல் தீர்ப்பளித்தது.

செப்டம்பர் 9-ம் தேதி தமிழக அமைச்சரவை ஏழு பேரையும் விடுதலை செய்வதற்கு முடிவெடுத்து, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு அனுப்பி வைத்தது. தமிழக ஆளுநர் அமைச்சரவையின் பரிந்துரையை செயல்படுத்தாமல், ஏழு பேரையும் விடுதலை செய்ய முன்வரவில்லை.

இவர்கள் விடுதலை குறித்து மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தில் கருத்து கேட்கப்பட்டதாக செய்தி வெளியானது. மத்திய அரசிடம் இதுபற்றி கருத்து கேட்க வேண்டிய அவசியம் சட்டரீதியாக அறவே கிடையாது. அப்படியானால் மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்திடம் இதுகுறித்து ஆளுநரே நேரடியாக கருத்து கேட்டாரா? அல்லது தமிழக அமைச்சரவை மூலம் கருத்து கேட்டாரா? என்பதுதான் எழுந்துள்ள கேள்வியாகும்.

மாநில அரசு அப்படி கருத்து கேட்டிருந்தால் அது சட்டத்திற்கும், நீதிக்கும் விரோதமான மோசடி நடவடிக்கையாகும். அதனால்தான் ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டத்தை என்னுடைய தலைமையில் தோழமைக் கட்சிகள் இணைந்து நடத்தி கைது செய்யப்பட்டோம்.

உச்ச நீதிமன்றத்தில் ஏழு பேர் விடுதலையை எதிர்த்து மீண்டும் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அமர்வு இன்று தள்ளுபடி செய்துவிட்டது. இதுபற்றிய பிரச்சினை தமிழக ஆளுநரிடம் இருக்கிறது. அங்கு முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

தமிழக அமைச்சரவை ஏற்கெனவே அனுப்பிய முடிவினை ஏற்று ஏழு பேரையும் தமிழக ஆளுநர் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்'' என்று வைகோ தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

3 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

2 hours ago

ஓடிடி களம்

3 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

கருத்துப் பேழை

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

சினிமா

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்