வியாபாரிகளை மிரட்டி பணம் வசூல்: திருவல்லிக்கேணி எஸ்.ஐ, போலீஸார் 4 பேர் சஸ்பெண்ட்: காவல் ஆணையர் உத்தரவு

By செய்திப்பிரிவு

சென்னை திருவல்லிக்கேணி வியாபாரிகளை மிரட்டி பணம் பறித்த எஸ்.ஐ உட்பட 4 போலீஸாரை காவல் ஆணையர் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

சென்னையில் பர்மா பஜார் வியாபாரிகள் திருவல்லிக்கேணி பகுதியில் மேன்ஷனில் தங்கியிருக்கிறார்கள். இவர்கள் வாங்கிவிற்கும் பொருட்களுக்கு பில் இருக்காது. இதைப்பயன்படுத்திக் கொண்ட திருவல்லிக்கேணி போலீஸார் அவர்கள் பொருட்களை கைப்பற்றி பெரிய அளவில் லஞ்சம் கேட்டு மிரட்டிய விவகாரம் வெளிவந்துள்ளது.

கடந்த 19-ம் தேதி அன்று மதியம் 1:30 மணி அளவில் சேப்பாக்கம் முஹம்மத் அப்துல்லாஹ் இரண்டாவது தெருவில் வசிக்கும் சாகுல் அமீது (33) என்கிற வியாபாரியிடம் எஸ்.ஐ.ராஜ்சேகரன், தலைமை காவலர்கள் ஆனந்தராஜ், அஷோக்குமார் ஆகியோர் அறையை சோதனை செய்துள்ளனர்.

அப்போது 90 லேப்டாப் மற்றும் 500 மொபைல் போன் 30 கிராம் தங்கம், வெளிநாட்டு சாக்லேட், கொரியாவைச் சேர்ந்த விளையாட்டுப் பொருட்கள் ஆகியவை பறிமுதல் செய்து  அதற்கு பில் கேட்டுள்ளனர். தகுந்த ஆதாரங்களை கொடுக்க முடியாத காரணத்தினால் அவரை திருவல்லிக்கேணி காவல் நிலையம் எதிரில் உள்ள தேநீர் விடுதிக்கு அழைத்து வந்து இரண்டு லட்ச ரூபாய் கேட்டுள்ளனர்.

அவர் இல்லை என்று கூறியவுடன் அவரை மிரட்டி பணம் ரூபாய் 80 ஆயிரம் பெற்றுக்கொண்டு இந்த பணம் முழுவதும் இன்ஸ்பெக்டருக்கு என்று சொல்லி மீண்டும் அவரை மேற்கண்ட முகவரியில் விட்டுவிட்டு சென்றுள்ளனர். இதன் பின்னணியில் தலைமை காவலர் சன்னி லாய்டு இருந்து பேசி முடித்துள்ளார். அவரிடம் பேசிய பின்பு தான் பணம் கொடுத்ததாக வியாபாரிகள் உதவி ஆணையரிடம் புகார் அளித்துள்ளனர்.

இது குறித்து அன்று மாலை 4:00மணி அளவில் பாதிக்கப்பட்ட சாகுல்ஹமீது என்பவருடன் 25 நபர்கள் உதவி ஆணையர் மற்றும் திருவல்லிக்கேணி ஆய்வாளரை சந்தித்து மேற்கண்ட தகவலைக்கூறி புகார் கூறியுள்ளனர். கடந்த 2 மாதங்களாக இது போன்று பல சம்பவங்கள் தலைமை காவலர் சன்னி லாயிட்  மற்றும் சில காவலர்களால் நடைபெறுவதாகவும் இதுபோன்ற சம்பவங்கள் பல முறை நடந்து பணம் கொடுத்ததாகவும் வாய்மொழி புகார் தெரிவித்துள்ளனர்.

இது சம்பந்தமாக சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் முரளியிடம் அவர்கள் சந்தித்து முறையிட்ட போது, இத போன்ற சம்பவங்கள் இனிமேல் நடைபெறாது என வாக்குறுதி அளித்ததாகவும் உதவி ஆணையர் சங்கரை சந்தித்து வாய்மொழியாக புகார் சொன்னபோது அவர் சம்பந்தப்பட்டவர்கள் மீது புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கிறேன் என்று கூறியதாகவும் வியாபாரிகள் புகார் அளிக்க மறுத்துவிட்டனர் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

அனைத்து விவகாரங்களிலும் தலைமை காவலர் சன்னி லாயிட் இருப்பதாகவும், அவர் இதற்காகவே மீண்டும் திருவல்லிக்கேணிக்கு மாற்றல் கேட்டு வந்ததாகவும் வியாபாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. இதனிடையே வியாபாரிகள் தரப்பு புகார் காவல் ஆணையர் கவனத்துக்கு சென்றதை அடுத்து அனைவரும் கூண்டோடு மாற்றப்பட்டனர்.

பின்னர் இதுகுறித்து வியாபாரிகள் புகார் அளிக்காவிட்டாலும் இத்தகைய செயலில் ஈடுபட்டவர்கள் குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி காவல் ஆணையர் உத்தரவிட்டதன்பேரில் தெற்கு மண்டல கூடுதல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டது.

விசாரணையின் அறிக்கையைப்பெற்ற காவல் ஆணையர் மேற்கண்ட செயலில் மூளையாக செயல்பட்ட சன்னி லாய்ட் உள்ளிட்ட 4 போலீஸாரையும் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். இந்த விவகாரத்தில் மேலும் சிலர் மீதும் நடவடிக்கை வரும் என்று கூறப்படுகிறது.  

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

13 mins ago

சினிமா

42 mins ago

க்ரைம்

23 mins ago

தமிழகம்

45 mins ago

தமிழகம்

36 mins ago

தொழில்நுட்பம்

18 mins ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

3 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்