கணவர், 1 வயது குழந்தை கொலை; காணாமல் போனதாக நாடகமாடிய இளம்பெண்: போலீஸ் விசாரணையில் சிக்கினார்

By செய்திப்பிரிவு

வேலூரில் காதல் கணவனையும், ஒரு வயது ஆண் குழந்தையையும் கொலை செய்துவிட்டு, அவர்களைக் காணவில்லை என போலீஸில் புகார் அளித்து நாடகமாடிய  நிலையில் மனைவியே கொலை செய்தது தெரியவந்துள்ளது.

வேலூர் மாவட்டம், ஆற்காடு திமிறி பகுதியைச் சேர்ந்தவர் ராஜா (25). எலக்ட்ரீஷியனாகப் பணியாற்றி வந்தார். இவரும், தாஜ்புரா மந்தைவெளி பகுதியைச் சேர்ந்த தீபிகா (20) என்பவரும் 2 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டனர்.

கடந்த ஆண்டு இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அதற்கு பிரனீஷ் எனப் பெயரிட்டு வளர்த்து வந்தனர். கடந்த மாதம் அந்தக் குழந்தைக்குப் பிறந்த நாள் கொண்டாடினர். காதல் திருமணம் என்பதால் ராஜா வீட்டாரோடு அவ்வளவாக ஒட்டுதல் இல்லாமல், தீபிகா வீட்டோடு இணைந்து ராஜா வசித்துள்ளார். ஆனாலும், ராஜா வீட்டார் வந்துபோக இருந்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த 4 நாட்களுக்கு முன் கணவர் ராஜாவையும், குழந்தை பிரனீஷையும் காணவில்லை என ஆற்காடு கிராமிய காவல் நிலையத்தில் தீபிகா புகார் அளிக்க, போலீஸார் வழக்குப்பதிவு செய்து ராஜாவையும், மகன் பிரனீஷையும் தேடிவந்தனர்.

ராஜா காணாமல் போனது குறித்து தீபிகாவிடம் போலீஸார் விசாரணை நடத்தியபோது, அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பதில் அளித்துள்ளார். இதனால், போலீஸார் சந்தேகப்பட்டு விசாரணையை தீவிரப்படுத்தினர். ராஜாவின் செல்போன் டவரை ஆராய்ந்தபோது, அது வீட்டில் இருப்பதாகக் காண்பித்தது. அதுகுறித்து விசாரித்தபோது, ராஜா போகும்போது செல்போனை விட்டுவிட்டுச் சென்றுவிட்டார் என தீபிகா தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

இதனால், போலீஸார் சந்தேகம் தீபிகா பக்கம் திரும்பியது. அவரை விசாரித்தபோது, அவர் தனது கணவரையும்  மகனையும் கொலை செய்ததை ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, போலீஸார் தீபிகாவிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

விசாரணையில், கணவர் காதலித்து திருமணம் செய்துகொண்டாலும், மதுபோதைக்கு அடிமையானதால் தினமும் குடித்துவிட்டு வந்து தன்னைக் கொடுமைப்படுத்தி வந்ததாகவும், அதைப் பொறுக்க முடியாமல் கணவரைக் கொன்றதாகவும் தெரிவித்துள்ளார்.

கொலை செய்தபின்னர், தான் ஒருவேளை கைதானால் கொலையாளியின் மகன் என்கிற பட்டத்துடன் தனது மகன் வளரக்கூடாது என்பதற்காக ஒரு வயது மகனைக் கொன்றதாகவும் தீபிகா தெரிவித்ததாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

இருவரின் உடலையும் சாத்தூர் ஏரிக்கரையில் புதைத்து விட்டதாக தீபிகா கூறியதை அடுத்து, அங்குசென்று தோண்டிப் பார்க்க போலீஸார் முடிவுசெய்துள்ளனர். ஆற்காடு வட்டாட்சியர் சம்பவ இடத்தில் இன்று காலை விசாரணை நடத்தினார்.

வேலூரில் இருந்து 3 பேர் கொண்ட தடயவியல் வல்லுநர்கள் குழுவும் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். மருத்துவக் குழுவினர் வந்தபின்னர், சடலங்களைத் தோண்டியெடுத்து பிரேத பரிசோதனை நடத்த அனுப்பி வைக்கப்படும் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.

கணவனையும் குழந்தையையும் கொலை செய்யும் அளவுக்கு 20 வயது தீபிகாவுக்கு மனோதிடமும், உடல் வலுவும் இருக்க வாய்ப்பிருப்பதாக போலீஸார் கருதவில்லை. அவருக்கு வேறு யாரேனும் உதவி இருக்கக்கூடும், ஒருவேளை கொலையை தீபிகா செய்திருந்தால்கூட, கொலை செய்யப்பட்ட கணவர் ராஜா, குழந்தை பிரனீஷ் உடல்களை ஏரிக்கரைக்கு கொண்டுசென்று பள்ளம் தோண்டி புதைக்க, கண்டிப்பாக மற்றவர் உதவி தேவை என போலீஸார் கருதுகின்றனர்.

ஆகவே, உடல்களைக் கொண்டு சென்றது, உடல்களைப் புதைக்க உதவியது யார் என போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் தீபிகாவின் உறவினர்கள்மீது ராஜாவின் சகோதரி குற்றம் சாட்டியுள்ளார். ஆகவே, மேலும் சிலரும் கைதாக வாய்ப்புள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 min ago

இந்தியா

48 mins ago

தமிழகம்

1 hour ago

இலக்கியம்

7 hours ago

தமிழகம்

1 hour ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்