கோட்டையில் விழுந்த விரிசல்: கொங்கு மண்டலத்தில் அதிமுக சரிவைச் சந்தித்தது ஏன்?

By ஆர்.கிருஷ்ணகுமார்

அதிமுகவின் கோட்டையாக கருதப்பட்ட  கொங்கு மண்டலத்தில் இத்தேர்தலில் ஏற்பட்ட சரிவு அதிமுகவினரிடையே பெரும் அதிர்ச்சியையும், மற்ற கட்சியினரிடையே வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாகவே, அதிமுகவின் அபார வெற்றிக்கு பெரிதும் கைகொடுப்பது கொங்கு மண்டலம்தான். கோவை, திருப்பூர், நீலகிரி, பொள்ளாச்சி, ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, கரூர் ஆகிய 10 மக்களவைத் தொகுதிகளை உள்ளடக்கிய பகுதிகள் கொங்கு மண்டலமாகும்.

 

2004-ல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலின்போது அனைத்து தொகுதிகளையும் வென்ற திமுக கூட்டணியால் 2009-ல் 4 தொகுதிகளை  மட்டுமே கைப்பற்ற முடிந்தது. 2014-ல் கொங்கு மண்டலத்தில் உள்ள அத்தனை தொகுதிகளையுமே அதிமுகவிடம் பறிகொடுத்தது திமுக கூட்டணி. அதேபோல, சட்டப்பேரவை தேர்தல்களிலும் அதிமுகவின் பெரும் வெற்றிக்கு கைகொடுத்தது கொங்குமண்டலம்தான்.

இத்தேர்தலைப் பொறுத்தவரை, கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவர்தான் தமிழக முதல்வராகப் பொறுப்பு வகிக்கிறார். தமிழக அமைச்சரவையிலும் சக்திவாய்ந்த அமைச்சர்களாக கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவர்களே இருக்கிறார்கள்.  இதனால் இந்த மக்களவைத் தேர்தலிலும் கொங்கு மண்டலம் கைகொடுக்கும் என அதிமுகவினர் நம்பியிருந்த சூழலில், அதிமுக கூட்டணிக்கு பலத்த ஏமாற்றமே கிடைத்துள்ளது.

"முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவு, கொங்கு மண்டலத்தில் அதிமுகவுக்கு சரிவு ஏற்படுத்தியிருக்கலாம். இந்த மண்டலத்தில் கவுண்டர் சமூகத்தினர் பெரும்பான்மையாக உள்ள நிலையில், கொமதேக திமுகவுடன் கைகோத்ததும் அதிமுகவின் தோல்விக்கு காரணமாக இருக்கலாம். அதேசமயம், சிறு, குறுந் தொழில்நிறுவனங்கள் நிறைந்துள்ள கொங்கு மண்டலத்தில், பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி ஆகியவை தொழில்நிறுவனங்களுக்கு பெருத்த பாதிப்பை ஏற்படுத்தியது. அந்த அதிருப்தியும் அதிமுக-பாஜக கூட்டணியின் தோல்விக்கு காரணம்" என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

திமுக கூட்டணிக்கு வலிமை சேர்த்த கொமதேக!

sr-easwaranjpgஈஸ்வரன்50 

இது தொடர்பாக கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி பொதுச் செயலர் இ.ஆர்.ஈஸ்வரன் கூறும்போது, "கொங்கு மண்டலத்தில் அதிமுக வலுவாக இருப்பதாக கருதிக் கொண்டு, மற்றவர்களின் ஆதரவு எதற்கு என்று அலட்சியமாக இருந்துவிட்டார்கள். இந்த எண்ணத்தை மக்கள் தகர்த்துவிட்டார்கள். திமுக கூட்டணியைப் பொறுத்தவரை, கொமதேக உள்ளிட்ட எலலா கூட்டணிக் கட்சிகளும் கடுமையாக உழைத்தன. குறிப்பாக, கொங்கு மண்டலத்தில் கொமதேக திமுக கூட்டணிக்கு பெரிதும் வலிமை சேர்த்தது. திமுகவினரும் கடுமையாகப் பணிபுரிந்தனர். இதுவே, பெரும் திமுக கூட்டணியின் வெற்றிக்கு காரணம். கொமதேகவின் வலிமை இப்போது அதிமுகவுக்குப் புரிந்திருக்கும். கொமதேகவுக்கு முதல் வெற்றி கிடைத்துள்ளது. இந்த வெற்றி தொடர, இன்னும் கடுமையாக மக்கள் பணியில் ஈடுபடுவோம். கட்சியை வலுப்படுத்தவும் தீவிர முயற்சிகளை மேற்கொள்வோம்" என்றார்.

தமிழகத் தோல்வி பிரதமர் மோடிக்கானதல்ல!

manujpgமனுநீதி மாணிக்கம்50 

மக்களவைத் தேர்தலையொட்டி கோவையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பிரதமர் பங்கேற்று, அதிமுக-பாஜக கூட்டணி  வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். பாஜக செல்வாக்கு மிகுந்ததாக கருதப்படும் கோவை உள்ளிட்ட அனைத்து தொகுதிகளிலும் இக்கூட்டணி தோல்வியடைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவையைச் சேர்ந்த மனுநீதி மாணிக்கம், பிரதமர் மோடியின் நண்பர் மற்றும் அவரது ஆதரவாளர். இவரது மனுநீதி அறக்கட்டளை,  நல்லாட்சி அமைய வேண்டுமென தொடர்ந்து வலியுறுத்தி வருவதுடன், அதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகிறது. மக்களவைத் தேர்தல் முடிவுகள் தொடர்பாக மனுநீதி மாணிக்கம் கூறும்போது, "தமிழக மக்கள் வித்தியாசமான சிந்தனை உள்ளவர்கள். 80 சதவீதம் பேர் கல்வியறிவு பெற்றவர்கள். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குப் பிறகு, தமிழகத்தில் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய  தலைவர் அமையவில்லை என்றே கருத வேண்டியுள்ளது.

இந்தத் தேர்தலில் மக்கள் ஒரு மாற்றத்தைக்  கொண்டுவர விரும்பினார்கள். இதனால், தற்போதுள்ள கட்சிகளில் மாற்றுக் கட்சி என்ற முறையில்  திமுகவை மக்கள் ஆதரித்துள்ளார்கள். எனினும்,  பிரதமர் மோடி மீது தமிழக மக்கள் மிகுந்த மரியாதையும், எதிர்பார்ப்பும் கொண்டுள்ளனர். பிரதமரின் சாதனைகள், மக்கள் நலத் திட்டங்கள், கொள்கைகளை தமிழக பாஜக மக்களிடம் சரிவர கொண்டுசேர்க்கவில்லை. இதுவே பாஜகவின் தோல்விக்கு காரணம். அதேசமயம், இதை, பிரதமர் மோடிக்கான தோல்வி என்று எடுத்துக்கொள்ளக்கூடாது.

பிரதமரின் மோடியின் `ஊழலற்ற அரசு' என்ற கொள்கையை 100 சதவீதம் ஏற்றுக்கொண்டு,  அதை மக்களிடம் கொண்டுசெல்ல பாடுபடக்கூடிய மக்கள் தலைவர், மோடியின் தலைமையில் உருவானால், நல்லாட்சியை விரும்பும் தமிழக மக்கள், மக்கள் நலன் காக்கும் அரசை நடத்திக் கொண்டிருக்கும் பிரதமர் மோடிக்கு நிச்சயம் ஆதரவளிப்பார்கள்" என்றார்.

 

 

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

16 mins ago

சுற்றுலா

19 mins ago

வணிகம்

6 hours ago

இந்தியா

44 mins ago

சினிமா

39 mins ago

தமிழகம்

47 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

6 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்