பெரியார் சிலை உடைப்பு: தமிழ்நாட்டில் ரத்தக்களரி ஏற்படுத்த திட்டமிட்டு சதிவலை; வைகோ கண்டனம்

By செய்திப்பிரிவு

பெரியாரின் கருத்துகளை உடைக்க முடியாத கூட்டம், அவரது சிலைகளைச் சேதப்படுத்தி தமிழ்நாட்டில் ரத்தக்களரி ஏற்படுத்துவதற்குத் திட்டமிட்டு சதிவலை பின்னி வருவதாக, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வைகோ இன்று (திங்கள்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகரில் பட்டுக்கோட்டை சாலையில் அரசு பொது மருத்துவமனை அருகே அமைக்கப்பட்டு இருந்த  பெரியார் சிலை உடைக்கப்பட்டுள்ள செய்தி தமிழக மக்களைக் கொந்தளிக்கச் செய்துள்ளது.

திராவிடர் கழகத்தின் சார்பில் 1998-ம் ஆண்டு நிறுவப்பட்ட பெரியார் சிலையின் தலைப்பகுதி உடைக்கப்பட்டு தரையில் கிடந்ததைப் பார்த்து காலையில் அவ்வழியாக நடைப்பயிற்சி மேற்கொண்டவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

கடந்த ஆண்டு புதுக்கோட்டை விடுதி அருகே பெரியார் சிலை உடைக்கப்பட்டது. வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் பெரியார் சிலை தேசப்படுத்தப்பட்டது.

பெரியார் மறைந்து 45 ஆண்டுகள் உருண்டோடி விட்டன. இன்னமும் தமிழகத்தில் பெரியாரின் கருத்துகளும், சிந்தனைகளும் தான் வெகு மக்கள் திரளை ஈர்த்து வருகின்றன. வரலாற்றில் மட்டுமல்ல, மக்கள் இதயங்களிலும் வாழும் பெரியாரின் கொள்கை கோட்பாடுகள் இன்றைய தமிழகத்தில் சமூக, அரசியல் மற்றும் பொருளாதாரத் துறைகளில் குறிப்பிடத்தக்க செல்வாக்கைச் செலுத்தி வருகின்றன.

இந்நிலையில், தமிழ்நாட்டில் பெரியாரின் கருத்துகளை எதிர்கொள்ள முடியாத கூட்டம் ஒன்று பெரியார் சிலைகளைச் சேதப்படுத்துவதையும், இழிவுபடுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறது.

திருச்சியில் 2018 டிசம்பர் 23-ம் தேதி லட்சோப லட்சம் இளம் வாலிப வேங்கைகளும் வீராங்கனைகளும் காவிரி வெள்ளம் போன்று கருஞ்சட்டைப் பேரணியில் அணிவகுத்து வந்ததை தமிழகமே கண்டு எழுச்சியுற்றது. ஆனால், மத சகிப்பின்மையோடு வன்முறைகளையும் ஏவி வரும் கூட்டம் அதிர்ச்சியில் உறைந்தது.

மதவெறி சனாதன சக்திகளின் ஒரே நாடு, ஒரே மதம், ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் எனும் இந்துத்துவா சிந்தனைகளுக்குத் தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்புக் 'கனலாக' கனன்று கொண்டிருப்பதற்கு அடிப்படைக் காரணம் இது பெரியார் மண் என்பதால் தான்.

பெரியாரின் கருத்துகளை உடைக்க முடியாத கூட்டம், அவரது சிலைகளைச் சேதப்படுத்தி தமிழ்நாட்டில் ரத்தக்களரி ஏற்படுத்துவதற்குத் திட்டமிட்டு சதிவலை பின்னி வருவதற்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நாடாளுமன்றப் பொதுத் தேர்தலைச் சந்திக்கும் நேரத்தில் பெரியார் சிலையை உடைத்து, கலவர விதைகளைத் தூவ நினைப்போரின் உள்நோக்கம் ஒருபோதும் நிறைவேறாது.

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி எதையும் சந்திக்கத் தயாராக இருக்கிறது என்பதையும் எச்சரிக்கையுடன் தெரிவித்துக் கொண்டு, தமிழக அரசு இதைப் போன்ற தொடர் சிலை உடைப்பு நிகழ்வுகள் நடப்பதைத் தடுப்பதுடன், இதில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என வைகோ வலியுறுத்தியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

32 mins ago

ஜோதிடம்

38 mins ago

விளையாட்டு

4 hours ago

வணிகம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

தொழில்நுட்பம்

6 hours ago

சினிமா

7 hours ago

க்ரைம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்