பிரதமர் மோடி தீவிரவாதத்தை ஒழிக்கப் போவதாகக் கூறுவது ஏமாற்று வேலை: வைகோ விமர்சனம்

By செய்திப்பிரிவு

குற்றப்பின்னணி கொண்ட சாத்வி பிரக்யா சிங்கை வேட்பாளராக நிறுத்தி, பிரதமர் நரேந்திர மோடி தீவிரவாதத்தை ஒழிக்கப் போவதாகக் கூறுவது ஏமாற்று வேலை என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வைகோ இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "நடைபெற்று வரும் 17-வது மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில், தீவிரவாதத்தை எதிர்த்துப் போராடி வருவதாக, பிரதமர் நரேந்திர மோடி பேசி வருகின்றார். ஆனால், பாஜகவின் சார்பில், வேட்பாளர்களாகக் களம் இறக்கப்பட்டுள்ளவர்களின் பின்னணி அதிர்ச்சி அளிக்கின்றது.

மத்தியப் பிரதேசத் தலைநகர் போபால் தொகுதியில், காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடுகின்ற, அம்மாநிலத்தின் முன்னாள் முதல்வர் திக்விஜய் சிங்கை எதிர்த்து, சாத்வி பிரக்யா சிங் என்பவரை பாஜக வேட்பாளராக நிறுத்தியுள்ளது.

2008 ஆம் ஆண்டு செப்டெம்பர் 29-ம் நாள், குஜராத், மகாராஷ்டிரா மாநிலங்களில் 3 இடங்களில் சக்திவாய்ந்த குண்டுகள் வெடித்தன. பத்து பேர் உயிரிழந்தனர்; 80 பேர் காயம் அடைந்தனர். இந்தக் குண்டுவெடிப்புகளின் பின்னணியில் இந்து தீவிரவாத அமைப்புகள் இருப்பதாக, புலன் விசாரணையில் தெரியவந்தது. அதன் அடிப்படையில் கைது செய்யப்பட்டவர்களுள் ஒருவர் தான் சாத்வி பிரக்யா சிங்.

இவர், 1997-ம் ஆண்டு, பாஜகவின் மாணவர் பிரிவான அகில பாரத வித்யார்த்தி பரிசத் அமைப்பில் இணைந்தவர். இன்று அக்கட்சியின் முன்னணித் தலைவர்களுள் ஒருவர். வன்முறை, வெறுப்புணர்வை விதைக்கின்ற வகையில் பேசி வருபவர்.

ஆனால், சாத்வி பிரக்யா சிங் இந்தியப் பண்பாட்டுக்கும், பழம்பெருமைக்கும் அடையாளமாகத் திகழ்பவர் என்று பிரதமர் மோடி புகழ்ந்து உரைத்துள்ளார்.

அவரது இந்தப் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்திய ஆட்சிப் பணியில் இருந்து ஓய்வுபெற்ற 71 அதிகாரிகள் ஒன்றாகச் சேர்ந்து பிரதமர் நரேந்திர மோடிக்கு வெளிப்படையாக ஒரு கடிதம் எழுதியுள்ளனர்.

அந்தக் கடிதத்தில், "மாலேகான் குண்டுவெடிப்பிற்காக என்னைக் கைது செய்தபோது, ஹேமந்த் கர்கரே என்ற காவல்துறை அதிகாரி, விசாரணையின்போது என்னைத் துன்புறுத்தினார். அவருக்கு நான் சாபம் கொடுத்தேன். அதன் விளைவாக, மும்பையைத் தீவிரவாதிகள் தாக்கியபோது, ஹேமந்த் கர்கரே சுட்டுக் கொல்லப்பட்டார் என்று சாத்வி பிரக்யா சிங் பேசி இருக்கின்றார்.

தீவிரவாதிகளிடம் இருந்து அப்பாவிப் பொதுமக்களைக் காப்பதற்காகப் போராடி உயிரை ஈந்த கர்கரேவை இந்திய அரசு பெருமைப்படுத்த வேண்டும். அதற்கு மாறாக, அவரை இகழ்ந்து பேசிய ஒருவரை, வேட்பாளராக நிறுத்தி இருப்பதோடு மட்டும் அல்லாமல், பிரதமர் மோடி அவரை இந்தியப் பண்பாட்டின் அடையாளம் எனப் புகழ்ந்து பேசி இருப்பது, எங்களைப் போன்ற அரசுப் பணியாளர்களைப் பெரிதும் புண்படுத்தி இருக்கின்றது என அவர்கள் தங்கள் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர். சாத்வி பிரக்யா சிங்கை வேட்பாளராக நிறுத்தக் கூடாது" என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

சத்தீஸ்கர் மாநில முதல்வர் புபேஷ் பாகேல், "சாத்வி பிரக்யா சிங் எந்நேரமும் ஒரு கத்தியைக் கையில் வைத்து இருப்பவர்; பிலியாகர் என்ற இடத்தில், 2001 ஆம் சைலேந்திர தேவகன் என்ற இளைஞரின் நெஞ்சில் கத்தியால் குத்தியவர் பிரக்யா சிங்" என ஒரு திடுக்கிடும் குற்றச்சாட்டைக் கூறியுள்ளார்.

குற்றப்பின்னணி கொண்ட சாத்வி பிரக்யா சிங்கை வேட்பாளராக நிறுத்தி, அவர் இந்தியப் பண்பாட்டின் அடையாளம் என்று புகழ்ந்து உரைக்கின்ற பிரதமர் நரேந்திர மோடி, தீவிரவாதத்தை ஒழிக்கப் போவதாகக் கூறுவது ஏமாற்று வேலை.

நியூஸிலாந்து மசூதியில் தாக்குதல் நடத்தி 50 பேர்களைக் கொன்ற வெள்ளை இனவெறி ஆகட்டும், இலங்கையில் தாக்குதல் நடத்திய ஐஎஸ் தீவிரவாதிகள் ஆகட்டும், மாலேகான் குண்டுவெடிப்பை நிகழ்த்திய சங் பரிவார் கும்பல் ஆகட்டும், தீவிரவாதம் எந்த வடிவத்தில் வந்தாலும், அதை எதிர்த்துப் போராடுவதே பொதுமக்களின் கடமை" என வைகோ தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 mins ago

இந்தியா

18 mins ago

இந்தியா

45 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

3 hours ago

உலகம்

3 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்