தனியார் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு: அவசியத் தேவையா? அரசுப் பள்ளிக்கான எச்சரிக்கை மணியா?

By க.சே.ரமணி பிரபா தேவி

தனியார் பள்ளிகளில் ஏழைகளுக்கு 25% இட ஒதுக்கீடு வழங்கப்படுவது சரியா, அது பொருளாதாரத்தில் நலிவுற்றவர்களைக் கைதூக்கிவிடும் அவசியக் காரணியா அல்லது அரசுப் பள்ளிகள் மூடப்படுவதற்கான அறிகுறியா என்பதுபற்றி இருவேறு கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன.

25% இட ஒதுக்கீடு: ஓர் அறிமுகம்

கல்வி ஒவ்வொரு குழந்தையின் அடிப்படை உரிமை. அதை முறையாக அளிக்க வேண்டியது அரசின் கடமை. இதைக் கருத்தில் கொண்டே மத்திய அரசு அனைவருக்கும் இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தை 2009-ல் இயற்றியது.

இதன்படி 6 முதல் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கல்வி கட்டாயமாக்கப்பட்டது. இதன் சிறப்பம்சமாக நலிவுற்ற குழந்தைகளுக்கு அருகிலுள்ள தனியார் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றும் அவர்களுக்கான கட்டணத்தை அரசே செலுத்த வேண்டும் என்றும் விதிமுறைகள் வகுக்கப்பட்டன. குழந்தைத் தொழிலாளர்கள், கைவிடப்பட்டோர், தலித் மற்றும் பழங்குடியினர், துப்புரவுத் தொழிலாளர்களின் குழந்தைகள் உள்ளிட்டவர்கள் நலிவுற்றவர்கள் வகைமையில் அடங்குவர்.

2009-ல் 2014 வரை தனியார் பள்ளிகளே, நலிவுற்ற மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு செய்து வந்தன. ஆனால் அதில் முறைகேடு நடப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. தனியார் நிர்வாகங்கள் தங்களுக்கு ஆதரவானவர்களின் குழந்தைகளை அந்த ஒதுக்கீட்டில் பள்ளியில் சேர்த்துக்கொள்வதாகவும் அவர்களிடம் முழுக் கட்டணத்தையும் வசூலிப்பதாகவும் புகார்கள் அதிகரித்தன. இதனால் அரசே குழந்தைகளைத் தேர்வு செய்து தனியார் பள்ளிகளில் சேர்த்து வருகிறது. இதற்காக 2017-ல் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிலையில் அரசே, ஏழை மாணவர்களை தனியார் பள்ளிக்கு அனுப்புவது சரியா என்று கண்டனக் குரல்கள் எழுந்து வருகின்றன.

இதுகுறித்து தமிழ்நாடு ஆசிரியர் சங்க மாநிலத்தலைவர் பி.கே.இளமாறனிடம் பேசியதில்,

''தமிழக அரசு ஆண்டுதோறும் சுமார் 1.25 லட்சம் மாணவர்களைத் தனியார் பள்ளிகளுக்கு தாரைவார்த்துக் கொடுத்திருக்கிறது. இதற்காக ஆண்டுதோறும் ரூ.100 கோடிக்கு மேல் செலவும் செய்திருக்கிறது. இதனால் என்ன பலன்? எதுவுமே இல்லை. தனியார் பள்ளியில்தான் தரமான கல்வி கிடைக்கும் என்று அரசாங்கமே சொல்கிறது என்று பெற்றோர்கள் நினைக்க ஆரம்பித்துவிட்டனர்.

முன்பெல்லாம் தனியார் பள்ளிகளே இட ஒதுக்கீட்டு முறையை மேற்கொண்டன. முதன்மைக் கல்வி அலுவலரும் மாவட்டக் கல்வி அலுவலரும் அதைக் கண்காணித்தனர். ஆனால் இப்போது இடங்களை ஒதுக்கும் திட்டத்தை அரசே கையில் எடுத்துள்ளது. அவர்களுக்கான கல்விக் கட்டணத்தையும் செலுத்திவிடுகிறது. இதனால் பெற்றோர்களுக்கு 'கரும்பு தின்னக் கூலியா?' என்ற நிலை உருவாகிறது.

ஆனால் அரசுப்பள்ளிகள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றன. அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தெருத் தெருவாக அலைந்து வீடு வீடாகச் சுற்றி மாணவர்களைச் சேர்க்கின்றனர். ஆனால் அரசின் செயலால் அரசுப் பள்ளிகள் மீதான மரியாதை பெற்றோர்களுக்குப் போய்விடுகிறது. சேர்க்கையும் குறைந்துவிடுகிறது. இதனால் போதிய மாணவர்கள் இல்லாமல் அரசுப் பள்ளிகள் மூடப்படும் அபாயம் அதிகரித்து வருகிறது.

மொத்தத்தில் 25% இட ஒதுக்கீடே கூடாது என்பது என்னுடைய கருத்து. கல்வியை அரசுதான் ஏற்று நடத்தவேண்டும். அப்போதுதான் அதில் சமதர்மத்தை நிலைநாட்டமுடியும். குறைந்தபட்சம் அரசே இட ஒதுக்கீட்டை எடுத்து நடத்துவதையாவது அரசு தவிர்க்க வேண்டும்'' என்கிறார் இளமாறன்.

ஓர் அரசுப் பள்ளி ஆசிரியர் இதை எந்தக் கண்ணோட்டத்தில் அணுகிறார்?

ஆசிரியை உமா மகேஸ்வரியிடம் பேசியபோது, ''தனியார் பள்ளிகளில் இட ஒதுக்கீடு கட்டாயமாக்கப்பட்டபோது ஏராளமானோர் தனியார்களின் அதிகாரத்தை உடைக்கப் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு என்று கொண்டாடினர். பெற்றோரும் மகிழ்ந்தனர். ஆனால் நடைமுறையில் சிக்கல்கள் எழுந்தன. நலிவுற்ற பிரிவினர், தன் பிள்ளைகள் படிக்கும்  தனியார் பள்ளி ஆசிரியர்களையோ, நிர்வாகத்தையோ சுதந்திரமாக அணுகிப் பேச முடிவதில்லை. வகுப்புக்குள்ளாகவே இட ஒதுக்கீட்டில் சென்ற மாணவர்கள் புறக்கணிப்படுவதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன்'' என்கிறார் ஆசிரியை உமா.                                           

இதனால் அரசுப் பள்ளிகளுக்கும் ஆசிரியர்களுக்கும் பாதிப்பு ஏற்படுவதாகக் கூறப்படுகிறதே என்று கேட்டபோது, ''இட ஒதுக்கீட்டில் முக்கியப் பிரச்சினையாக இருப்பது இதுதான். 2013 முதல் 2018 வரை சுமார் 5 லட்சம் மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் இருந்து தனியார் பள்ளிக்கு மாறியிருக்கின்றனர். இவர்களுக்காக சுமார் 980 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளது. இந்த தொகை இருந்திருந்தால் அரசுப் பள்ளிகளை செம்மைப்படுத்தி இருக்கலாம்.

25 மாணவர்களுக்கு 1 ஆசிரியர் என்பது நடைமுறை. 5 லட்சம் மாணவர்கள் அரசுப் பள்ளியில் சேராததால், 20 ஆயிரம் ஆசிரியர்களின் பணியிடங்கள் காணாமல் போய்விட்டன.  இட ஒதுக்கீடு தேவையா என்பதை முதலில் யோசிக்க வேண்டும். அதேநேரத்தில் ஒதுக்கீடு கட்டாயம் என்னும்பட்சத்தில் அதை அரசே ஏற்று நடத்தலாம். அரசு தலையிடாத பட்சத்தில் அது தனியாருக்கே சாதகமாக முடியும். இட ஒதுக்கீட்டில் அரசின் தலையீட்டை தற்போது எதிர்க்கும் சங்கங்கள் இத்தனை நாட்களாக என்ன செய்தன'' என்று கேள்வி எழுப்புகிறார்.

இதற்கு என்ன தீர்வை முன்வைக்கிறீர்கள் என்று கேட்டபோது, ''அனைவருக்கும் கட்டாயக் கல்வி என்பது, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு சட்டமாக உள்ளது. இதனால் கல்வித்துறையின் உயர் அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் ஒன்றிணைந்து செயல்பட்டு திருத்தத்தைக் கொண்டுவந்தால் மட்டுமே அரசுப்பள்ளிகள் மூடப்படும் அபாயத்தைத் தடுத்து நிறுத்தமுடியும்'' என்கிறார் உமா மகேஸ்வரி.

கொள்கை முடிவு- அரசு தரப்பு

இந்த விவகாரம் குறித்து அரசுத் தரப்பில் திருவண்ணாமலை முதன்மைக் கல்வி அலுவலர் ஜெயக்குமாரைத் தொடர்புகொண்டோம். இதுகுறித்துப் பேசிய அவர், ''இது அரசின் கொள்கை முடிவு என்பதால் நாங்கள் இதில் கருத்து கூறமுடியாது. கட்டாயக் கல்விச் சட்டத்தின்படி, விருப்பப்பட்ட பள்ளிகளில் மாணவர்கள் படிப்பது அவர்களின் உரிமை. இங்குதான் படிக்கவேண்டும் என்று யாரும் கட்டாயப்படுத்த முடியாது. அவர்களுக்கு அரசே பணம் செலுத்த வேண்டும்.

எனினும் அரசுப் பள்ளிகள் சிறப்பாகச் செயல்படுவதால் இந்தப் போக்கு மாறி வருகிறது. தனியார் பள்ளிகளில் கல்விக் கட்டணம் இலவசமாக இருந்தாலும் புத்தகம், சீருடை, வேன், உணவு என செலவுகள் அதிகம் இருக்கின்றன. அரசுப் பள்ளிகள் மீது நம்பிக்கை ஏற்பட்டு வருவதாலும், தனியார் பள்ளிகளில் செலவழிக்க முடியாததாலும் இட ஒதுக்கீட்டில் தனியார் பள்ளிகளில் சேருபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. திருவண்ணாமலையில் முன்பெல்லாம் 80 சதவீதமாக இருந்த எண்ணிக்கை கடந்த ஆண்டில் 65 சதவீதமாகக் குறைந்துள்ளது.

இன்னும் சில ஆண்டுகளில் அரசுப் பள்ளிகளும் தனியார் பள்ளிகளும் சமம் என்ற நிலை உருவாகும். அப்போது பாகுபாடின்றி கல்வித்தரம் உயரும்'' என்றார் ஜெயக்குமார்.

பெயர் வெளியிட விரும்பாத பெற்றோர் ஒருவர் பகிர்ந்துகொண்டது:

''முன்னாடி நாங்களும் என் பையன கவர்மெண்டு ஸ்கூல்லதான் சேர்த்துருந்தோம். அங்க டாய்லெட்டுகூட சரியா இல்ல. ஏபிசிடி கூடத் தெரியாம மத்தவங்க முன்னாடி, பையன் ரொம்ப கஷ்டப்பட்டான். தனியார் ஸ்கூல்ல சேர்க்க ஆசை, ஆனா வருமானம் இடம் கொடுக்கல. அப்போதான் இதுபத்தி (25% இட ஒதுக்கீடு) தெரிஞ்சுது. செலவும் இல்லாம சிரமமும் இல்லாம பையன பெரிய ஸ்கூல்ல சேர்த்துட்டோம். மத்த செலவுகளும் இருக்கு. எப்படியாவது வாயைக் கட்டி வயித்தைக் கட்டி, அந்தப் பணத்தைப் புரட்டிடறோம்.

ஸ்கூல்லையும் எங்க நிலையைப் புரிஞ்சுகிட்டு பணத்தைக் கட்ட டைம் குடுக்கறாங்க. ஆரம்பத்துல மத்த பசங்க, என்பிள்ளைகிட்ட சரியா பேசிப் பழகலை. ஆனா இப்போ பரவாயில்லை. சீக்கிரத்துல அவனும் படிச்சு பெரிய ஆளாகணும். அதுதான் எங்க ஆசை'' என்று கண்கள் பனிக்கச் சொல்கிறார் அந்த ஏழைத் தாய்.

பிரின்ஸ் கஜேந்திரபாபு, கல்வியாளர்

''அரசமைப்புச் சட்டத்தின் இரு பிரிவுகளில் கல்வி குறித்துப் பேசப்பட்டுள்ளது. இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு உருவாக்கப்பட்ட அரசமைப்புச் சட்டத்தின் 41-ம் பிரிவில் அரசின் பொருளாதாரம் வளர வளர கல்வியை அளிக்கவேண்டியது அரசின் கடமை என்று கூறப்பட்டது. அப்போது பணம் இல்லை என்று சொன்னீர்கள் சரி, இப்போது செயற்கைக்கோளை சுட்டு வீழ்த்துகிறீர்கள்; செவ்வாய் கிரகத்தை ஆய்வுசெய்ய மங்கள்யானை அனுப்புகிறீர்கள். எனில் இப்போது பொருளாதாரம் வளர்ந்துள்ளதா இல்லையா? பிறகு ஏன் சட்டப்பிரிவு 41-ன் படி அரசு கல்வியைக் கொடுக்கவில்லை?

நலிவுற்றவர்களுக்கான இட ஒதுக்கீடாகவே இருந்தாலும் இது சமத்துவத்துக்கு முரணானது. ஆரம்பத்தில் கல்வியை அளிப்பது அரசின் கடமையாக இருந்தது. 2002-ல் செய்யப்பட்ட 86-வது சட்டத்திருத்தத்தில் 6 முதல் 14 வயது வரை கட்டணமில்லாக் கல்வியைக் கொடுப்பதை அரசு எவ்வழியில் நினைக்கிறதோ அவ்வழியில் சட்டத்தின் மூலம் கொடுக்கலாம் என்று மாற்றப்பட்டது. இதன்மூலம் கல்வி அடிப்படை உரிமையை இழந்தது. நாடு சுதந்திரம் அடைந்து 55 ஆண்டுகள் கழித்து இயற்றப்பட்ட சட்டத்தில், அரசுதான் கல்வியைக் கொடுக்கவேண்டும் என்பது நீக்கப்பட்டது.

86-வது சட்டத்திருத்தத்தின் 51 ஏ, கே பிரிவில் குழந்தைக்கு கல்வி வாய்ப்பை உருவாக்குவது பெற்றோர் அல்லது காப்பாளரின் கடமை என்று கூறப்பட்டுள்ளது. இதன்மூலம் தனது பொறுப்பை அரசு கைகழுவியது'' என்கிறார் கஜேந்திரபாபு.

 

இன்னும் கொஞ்சம் தெளிவாகக் கூறமுடியுமா என்ற கேட்டபோது, ''உதாரணத்துக்கு நீங்கள் ஒரு பள்ளியை நடத்துகிறீர்கள். உங்கள் குழந்தையை எங்கே படிக்கவைப்பீர்கள்? அங்குதானே. கல்வித்துறை அமைச்சரும் முதன்மைச் செயலரும் பிற உயர் அதிகாரிகளும் தங்களின் குழந்தைகளை எங்கு படிக்கவைக்கிறார்கள்?

 

2009 கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் நலிவுற்றவர்களுக்கு கல்விக் கட்டணம் செலுத்தப்படும் என்கிறீர்கள். வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ளவர்கள் 3 வேளை உணவுக்கே வழியில்லாதவர்கள். அவர்களை பத்மா சேஷாத்ரியில் இட ஒதுக்கீட்டில் சேர்த்தால், மதிய உணவு யார் போடுவார்கள்? உணவு கிடைத்தாலும் மற்ற செலவுகளுக்கு என்ன செய்வது? இவர்களுக்கு ஒதுக்கும் கோடிக்கணக்கான நிதியைக் கொண்டு செலவுகளை அரசுப்பள்ளியை மேம்படுத்த உதவலாமே? மொழிகளைக் கற்றுக்கொடுக்க தனித்தனி ஆசிரியர்களை நியமிக்கலாமே, விளையாட்டு ஆசிரியரைப் போடலாமே? அரசுப் பள்ளிகளுக்கு அருகமைப் பள்ளி அந்தஸ்து கொடுக்கலாமே.

 

இதன்மூலம் அந்தக் குழந்தைகளும் உரிமையோடு அரசுப்பள்ளியில் படிக்கும். அரசு செலவிலேயே சத்துணவு, புத்தகங்கள், சீருடை, சுற்றுலா என அனைத்துமே கிடைக்கும். இங்கு இட ஒதுக்கீடு முறையே தவறு. முழுமையான கல்வி உரிமை என்பது தனியார் பள்ளி மூலம் சாத்தியமல்ல'' என்று காத்திரமாகச் சொல்கிறார் கஜேந்திரபாபு.

தனியார் பள்ளிகளில்தான் தரமான கல்வி கிடைக்கும் என்று நம்பும் பெற்றோர்கள் உண்மை நிலவரத்தை அறிந்துகொள்வது அவசியம். தமிழகத்தில் இதுவரை அங்கீகாரம் இல்லாமல் இயங்கும் தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை 709.  அதிகபட்சமாக மதுரையில்106 பள்ளிகள், திருப்பூரில் 86 பள்ளிகள், சேலத்தில் 53 பள்ளிகள், திருவள்ளூரில் 48 பள்ளிகள், சென்னையில் 7 பள்ளிகள் உட்பட 709 பள்ளிகள் இதில் கண்டறியப்பட்டுள்ளன.

இதனால் பெற்றோர்கள் தனியார் பள்ளிகளுக்குப் படையெடுக்காமல் அருகில் இருக்கும் அரசுப் பள்ளிகளின் தரத்தை அறிந்து, குழந்தைகளை அங்கு சேர்ப்பது குறித்துப் யோசிக்க வேண்டும்; அரசுப் பள்ளி ஆசிரியர்களும் அவர்களுக்கான பொறுப்புடன் செயல்பட்டால் சமூகம் சிறக்கும். கல்வியில் சமத்துவம் தழைக்கும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாக இருந்து வருகிறது.

க.சே.ரமணி பிரபா தேவி, தொடர்புக்கு: ramaniprabhadevi.s@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

21 mins ago

க்ரைம்

2 mins ago

தமிழகம்

24 mins ago

தமிழகம்

15 mins ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

வாழ்வியல்

3 hours ago

மேலும்