முன்னாள் எம்.எல்.ஏ பாலபாரதியை அவமானப்படுத்திய பறக்கும்படை பெண் காவலர்: சமாதானப்படுத்திய அதிகாரிகள்

By செய்திப்பிரிவு

கோவில்பட்டியில் பறக்கும்படை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த பெண் காவலர் ஒருவர் அவ்வழியாக வந்த மார்க்சிஸ்ட் முன்னாள் எம்.எல்.ஏ பாலபாரதியை அவமானப்படுத்தும் விதமாக ஒருமையில் பேசி மிரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் தகவல் அறிந்து அங்கு வந்த உயர் அதிகாரிகள் சமாதானப்படுத்தியதால் நிலைமை சீரானது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் திண்டுக்கல் தொகுதியில் 15 ஆண்டுகள் தொடர்ந்து எம்.எல்.ஏவாக இருந்தவர் பாலபாரதி. எளிமைக்கு ஒரு இலக்கணம் என மாற்றுக்கட்சியினராலும் பாராட்டப்பட்டவர். குறிப்பாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் நன்மதிப்பைப் பெற்றவர்.

சிறந்த சட்டப்பேரவை பேச்சாளர். அவரது சாதுர்யமிக்க பேச்சால் கவரப்பட்ட ஜெயலலிதா அவரையும் அறியாமல் மேஜையைத் தட்டி ரசித்த சம்பவங்கள் உண்டு. பாலபாரதிமேல் உள்ள மதிப்பு காரணமாக அவரது பல கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றித் தந்துள்ளார் ஜெயலலிதா. இதில் பெண் காவலர்கள் பலரின் பிரச்சினைகள் குறித்தும் பாலபாரதி பேசியுள்ளார்.

இதேபோன்று திமுக தலைவர் கருணாநிதியின் மதிப்பையும் பெற்றவர் பாலபாரதி. திண்டுக்கல் மக்கள் மட்டுமல்ல தமிழக மக்களுக்கு நன்கு அறிமுகமான முகம் அவருக்கு.

இந்நிலையில் நேற்றிரவு தென்காசி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளரை ஆதரித்து சிவகிரி மற்றும் சங்கரன் கோவிலில் நடந்த பிரச்சாரக் கூட்டங்களில் பங்கேற்று விட்டு பிரச்சாரத்தை முடித்துக்கொண்டு சங்கரன்கோவில் கழுகுமலை வழியாக தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டிக்கு காரில் வந்தார் பாலபாரதி.

வழியில் நாலாட்டின்புத்தூர் விலக்கு பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் அவரது காரை நிறுத்தியுள்ளனர். காரில் உள்ளவர்கள் சோதனைக்கு ஒத்துழைத்தனர். காரை சோதனையிட்ட பின் காரில் இருந்த பாலபாரதியிடம் வந்த ஒரு பெண் காவலர் ஏம்மா பையில் என்ன வைத்திருக்கிறாய் திறந்து காட்டு, கீழே இறங்கு என்றெல்லாம் ஒருமையில் பேசியுள்ளார்.

அப்போது உடன் வந்தவர்கள் அவர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர், நீங்கள் இப்படி ஒருமையில் பேசலாமா? என்று கேட்டபோது அதைவிட மோசமான வார்த்தையில் அந்தப்பெண் காவலர் பதிலளித்துள்ளார். இதையறிந்த மார்க்சிஸ்ட் கட்சித் தொண்டர்கள் அங்கு திரண்டு வாக்கு வாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நிலைமை மோசமாவதை அடுத்து உடனிருந்த ஆண் காவலர்கள் மேலதிகாரிகளுக்குத் தகவல் கொடுக்க,காவல்துறை அதிகாரிகள் விரைந்து வந்து சமதானப்படுத்தினர். தகவல் அறிந்து ஊடகங்களும் அங்கு வர காவல்துறையினர் மன்னிப்பு கேட்டுக்கொண்டனர்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பாலபாரதி கூறியதாவது:

''பிரச்சாரம் முடிந்து, காரில் கோவில்பட்டிக்கு வந்து கொண்டிருந்தேன். வரும் வழியில் 2 இடங்களில் தேர்தல் பறக்கும் படையினர் எனது காரை சோதனையிட்டனர். கோவில்பட்டி அருகே நாலாட்டின்புதூர் விலக்கு பகுதியில் நின்ற தேர்தல் பறக்கும் படையினர் எனது காரை நிறுத்தி சோதனையிட்டனர்.

அப்போது அதில் இருந்த ஒரு பெண் காவலர், ஒருமையில் பேசி சோதனையிடுவதைவிட கட்டளையிடுவதிலேயே குறியாக இருந்தார். அவமானப்படுத்தும் வகையில் பேசினார். 15 ஆண்டுகாலம் எம்.எல்.ஏவாக இருந்தவர் நான். எனது வயது, அரசியல் அனுபவம் இவற்றைக் கருத்தில் கொள்ளாமல் குற்றவாளியைப்போல் ஒருமையில் பேசி நடத்தினார் அந்தப் பெண் காவலர்.

பின்னர் வந்த அதிகாரிகள் மன்னிப்பு கோரினர். பல மாவட்டங்களைக் கடந்து வந்தேன் நான். எங்கும் இதுபோன்ற அனுபவம் இல்லை. தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் அந்தக் காவலர்கள் மிகவும் வன்மமாக ஆக்ரோஷத்துடன் நடந்து கொண்டனர்.

இந்தத் தேர்தல் ஒரு அமைதியான ஜனநாயக முறையில் நடக்குமா என்ற கேள்வி எழுகிறது. தமிழக தலைமை தேர்தல் ஆணையம் தூத்துக்குடி காவல்துறையில் மாறுதல் கொண்டு வர வேண்டும். தேர்தல் ஆணையத்தின் கீழ் இயங்கும் காவல்துறை பொதுமக்களையும், அரசியல்வாதிகளையும் ஒரு குற்றவாளியைப் போல, பணம் எடுத்து செல்வதுச் போல அவர்களது பார்வையும் நடத்தையும் உள்ளது.

உத்தரவிடுவது, பைகளை கடுமையாகப் பறித்து சோதனையிடுவது என அராஜகச் செயல்களில் ஈடுபடுகின்றனர். காவல்துறைக்கு எப்படி சோதனையிட வேண்டும் என்ற பயிற்சியும் இல்லை. எந்த நாகரிகமும் வார்த்தைகளும் கிடையாது. காரில் செல்பவர்கள் எல்லாம் குற்றவாளிகள் என்பதுபோல காவல்துறையின் பார்வை இருக்கிறது.

பல மாவட்டங்களைக் கடந்து வந்துள்ளேன். ஒவ்வொரு இடத்திலும் அங்குள்ள அரசியல் இயக்கம் மக்களின் போக்குவரத்து ஆகியவற்றைப் பார்த்து அனுமதிக்கின்றனர். ஆனால் தூத்துக்குடிக்குள் நுழையும் இந்த நேரத்தில் மிகவும் கசப்பான வெறுப்பான சம்பவத்தை காவல்துறை திட்டமிட்டு நடத்தியுள்ளது.

இது ஜனநாயகத்துக்கு அபாயகரமானது. தமிழக தலைமை தேர்தல் ஆணையமும், மாவட்ட தேர்தல் ஆணையமும் உரியமுறையில் யார் தவறு செய்தார்களோ அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்''.

இவ்வாறு பாலபாரதி தெரிவித்தார்.

 

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

5 hours ago

வணிகம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

க்ரைம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

உலகம்

8 hours ago

இந்தியா

10 hours ago

மேலும்