பேரம் பேசி மேலிட அழுத்தத்தால் அமைந்த கூட்டணி அல்ல: திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்

By செய்திப்பிரிவு

நமக்கு எதிராக நிற்கும் பாசிச சக்திக்கும் அதற்குத் துணை போகும் அடிமை மனநிலை கொண்டோருக்கும் ஜனநாயக ரீதியில் தக்க பாடம் புகட்டிடும் வகையில் நம்முடைய களப்பணி அமைந்திட வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் தன் தொண்டர்களுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியை வெற்றி பெறச்செய்ய வேண்டி ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

''நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் மடல்.  

வெற்றிக்கான களம் தயாராகி விட்டது. திமுகவின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு தேர்தல் களப்பணி தொடங்கி விட்டது. 2019 மக்களவைத் தேர்தலுக்கான கழகத்தின் தேர்தல் அறிக்கையும், 18 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையும் வெளியிடப்பட்டு விட்டது.

இனி நமது ஒற்றை இலக்கு, மத்தியிலும் மாநிலத்திலும் அதிகாரத்தில் இருந்துகொண்டு மக்களை வதைக்கிற பாசிச – மதவெறி – ஊழல் மய ஆட்சியாளர்களை அப்புறப்படுத்துவது ஒன்றுதான். எளிமையாகச் சொல்வதென்றால், தமிழகம் - புதுவையில் உள்ள 40 நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடைபெறுகிற சட்டப்பேரவை தொகுதிகளிலும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி முழுமையாக வெற்றிபெற உழைப்பது ஒன்றே நமது இலக்கு.

தலைவர் கலைஞர் இல்லாமல் திமுக சந்திக்கின்ற முதல் தேர்தல் களம் என்பது அவரது உயிரனைய உடன்பிறப்புகளான உங்களுக்கு மட்டுமல்ல, உங்களில் ஒருவனான எனக்கும் பெரும் சுமைதான். அந்தச் சுமையை எளிதாக சுமக்கும் ஆற்றலையும் பயிற்சியையும் நமக்கு வழங்கியவரே தலைவர் கலைஞர்தானே.

ஒவ்வொரு தேர்தல் களத்திலும் அதன் சாதக - பாதகங்களை நுணுக்கமாக அறிந்தும் உணர்ந்தும் நம்மைக் களப்பணியாற்றிடச் செய்த மாபெரும் தலைவர் அவரன்றோ. எத்தகைய சூழலிலும் வெற்றிக்கனியைப் பறிப்பது எப்படி என்பதை, தான் களம் கண்ட 13 தேர்தல்களிலும் வெற்றியன்றி வேறெதையும் காணாத ஜனநாயக சாதனையாளர் நம் உயிர் நிகர் தலைவர்.

அவர் அளித்த பயிற்சியை நெஞ்சத்தில் அப்படியே பதிய வைத்து, அவர் கண்ட கனவுகள் நிறைவேற களத்தில் பாடுபட்டால் முழுமையான வெற்றியை மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி அடைந்தே தீரும். இது தேர்தல் நேர, திடீர் கூட்டணி அல்ல. பதவியைக் காப்பாற்றிக் கொள்வதற்காக மிரட்டலுக்குப் பயந்து அமைக்கப்பட்ட கூட்டணி அல்ல.

தொகுதிப் பங்கீட்டைத் தாண்டி வேறு ஏதேதோ பலன்களை எதிர்பார்த்து பேரம்பேசி அதன்பின் அமைந்த சுயநலக் கூட்டணி அல்ல. மேலே இருந்து போடப்பட்ட உத்தரவுகளுக்குக் கட்டுப்பட்டு அமைக்கப்பட்ட கட்டாயக் கூட்டணியும் அல்ல.

நீட் தேர்வுக் கொடுமை, காவிரி நீர் உரிமை, ஒக்கி - கஜா புயல் நிவாரணம், விவசாயிகள் – தொழிலாளர்கள் - வணிகர்கள் படும் துயரம், பெண்கள் மீதான பாலியல் வன்முறை, ஸ்டெர்லைட் - ஹைட்ரோகார்பன் திட்டங்கள் எதிர்ப்போர் மீதான அடக்குமுறை உள்ளிட்ட ஒட்டுமொத்த ஜனநாயக விரோதப் போக்குகளையும் அதற்குக் காரணமான மத்திய - மாநில ஆட்சியாளர்களையும் எதிர்த்து ஏறத்தாழ இரண்டு ஆண்டுகளாகத் தோழமை உணர்வுடன் இணைந்து நின்ற மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளின் வலிமையான கூட்டணி.

இலட்சியக் கூட்டணி. இந்த மகத்தான வெற்றிக் கூட்டணியின் சார்பில் திமுக 20 நாடாளுமன்றத் தொகுதிகளிலும், 18 சட்டப்பேரவை இடைத்தேர்தல் தொகுதிகளிலும் அரசியல் இருட்டை விரட்டியடிக்கும் ஆற்றல் கொண்ட சின்னத்தில் களம் காண்கிறது.

கூட்டணிக் கட்சிகளான இந்திய தேசிய காங்கிரஸ் புதுவை உள்ளிட்ட 10 மக்களவைத் தொகுதிகளிலும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் 1 தொகுதியிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) 2 தொகுதிகளிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 2 தொகுதிகளிலும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 1 தொகுதியிலும், விடுதலை சிறுத்தைகள் கட்சி 2 தொகுதிகளிலும், கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சி 1 தொகுதியிலும், இந்திய ஜனநாயக கட்சி 1 தொகுதியிலும் களம் காண்கின்றன.

இவற்றில், விடுதலை சிறுத்தைகள் கட்சி 1 தொகுதியிலும் கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சி, இந்திய ஜனநாயக கட்சிப் போட்டியிடும் ஒவ்வொரு தொகுதியிலும் நமது சின்னத்திலேயே அதன் வேட்பாளர்கள் களம் காண்கிறார்கள். அந்த வகையில், 40 நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளில் 23 தொகுதிகளில் நமது சின்னம் ஒளிர்கிறது. மற்ற தொகுதிகளில், அந்தந்த கட்சிகளின் வெற்றிச் சின்னத்தில் வேட்பாளர்கள் களம் இறங்குகிறார்கள்.

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர்கள் போட்டியிடும் எந்தச் சின்னமாக இருந்தாலும் தலைவரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு அது நமது சின்னமாகத்தான் தெரியும்; தெரிந்திட வேண்டும். அதனை மனதில் கொண்டு, கட்சியின் நிர்வாகிகளும் செயல்வீரர்களும் களப்பணியாற்றி முழுமையான வெற்றியைக் கொண்டாடுவதே நமக்கான இலக்காகும்.

நமக்கு எதிராக நிற்கும் பாசிச சக்திக்கும் அதற்குத் துணை போகும் அடிமை மனநிலை கொண்டோருக்கும் ஜனநாயக ரீதியில் தக்க பாடம் புகட்டிடும் வகையில் நம்முடைய களப்பணி அமைந்திட வேண்டும். திமுக சார்பில் நேரடியாகக் களமிறங்கும் 20 தொகுதிகளின் வேட்பாளர்களின் பெயரை அறிவிக்கும்போதே அவர்கள் வெற்றி வேட்பாளர்கள் என்ற எண்ணம் மக்கள் மனதில் உருவாகிவிட்டது.

அதனை நிச்சயமாக்கித் தரவேண்டிய பொறுப்பு தலைவர் கலைஞரின் உடன்பிறப்புகளான உங்களிடம்தான் உள்ளது. கட்சியின் சார்பில் போட்டியிட பலரும் ஆர்வம் காட்டிய நிலையில், நமக்கு கிடைத்துள்ள வாய்ப்பில் 20 பேரைத்தான் தேர்வு செய்ய முடியும் என்பதால், அதனடிப்படையில் இந்த வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

தேர்தல் களத்தின் போக்கைத் தீர்மானிக்கும் கதாநாயகனாகவும், கதாநாயகியாகவும் விளங்கும். இப்போதும் அப்படித்தான். நம்முடைய தேர்தல் அறிக்கை ஒரு போதும் வில்லனாக இருந்ததில்லை. மக்களின் வில்லன்களை எதிர்கொள்ளக் கூடிய வலிமை கொண்ட ஆயுதமாக இருக்கும். அந்த ஆயுதத்தை வழங்கிவிட்டு, பரப்புரைப் பயணத்தை மேற்கொள்கிறேன். உங்களில் ஒருவனாக எத்தனையோ தேர்தல் களங்களில் பரப்புரை செய்திருக்கிறேன்.

மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் நாற்பதுக்கு நாற்பது - பதினெட்டுக்கு பதினெட்டு என 100 விழுக்காடு வெற்றியன்றி வேறு சிந்தனைக்கு இடம்கொடுக்காமல் உழைத்திடுவீர். அந்த உழைப்பு தரப்போகும் மகத்தான வெற்றியை மே 23-ம் நாள் நம் உயிர் நிகர் தலைவர் கலைஞருக்குக் காணிக்கையாக்கிடுவோம். உங்களில் ஒருவனாகக் கேட்கிறேன். உறுதி தாருங்கள்… உத்தரவாதம் தாருங்கள்… உழைப்பைத் தாருங்கள்... முழுமையான வெற்றியைத் தாருங்கள்''.

இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

10 mins ago

தமிழகம்

22 mins ago

சினிமா

35 mins ago

விளையாட்டு

41 mins ago

சினிமா

47 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

53 mins ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

30 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

மேலும்