பொள்ளாச்சி பாலியல் வழக்கு; அதிமுக ஆட்சியாளர்கள் செய்ய வேண்டியது என்ன?- ஸ்டாலின் விளக்கம்

By செய்திப்பிரிவு

பொள்ளாச்சி பாலியல் வழக்கு விவகாரத்தில் மக்களை ஏமாற்ற கண்துடைப்பு நாடகங்கள் வேண்டாம். நியாயத்திற்குப் புறம்பாகக் காப்பாற்றப்படுபவர்களை கடுமையாகத் தண்டிக்கும் வகையில் விரைவான விசாரணையே தேவை என்று திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் மனசாட்சியையும் உலுக்கி எடுத்திருக்கும் பொள்ளாச்சி பாலியல் வன்கொடூர நிகழ்வு குறித்து, அதிமுக ஆட்சி தன்னைக் காப்பாற்றிக் கொள்ள, தொடர்ந்து திசை திருப்பும் போலியான நடவடிக்கைகளையே மேற்கொண்டு வருகிறது. மனித உருவில் அலைந்து திரியும் விலங்கு குணம் கொண்ட, கடைந்தெடுத்த கயவர்களைக் கடுமையாகத் தண்டிக்க வேண்டும் எனப் பொதுமக்களும் மாணவர்களும் பெண்களும் தீர்மானத்துடன் களமிறங்கி விட்டதைத் தமிழ்நாட்டில் பரவலாகக் காண முடிகிறது. இந்தக் கொடூரம் குறித்து இதுவரை இந்த மாநிலத்தை ஆளுகிற முதல்வரோ, துணை முதல்வரோ வாய் திறக்கவேயில்லை என்பது வேதனையானது, வெட்கக்கேடானது!

அவர்கள் இருவரும் வாய் திறக்க மறுப்பது மட்டுமின்றி, நியாயம் கேட்டு குரல் எழுப்புவோரின் குரல்வளையை நெரிக்கும் வகையில், போராட்டங்களுக்கு அனுமதி மறுப்பதும், போராடுபவர்கள் மீது காவல்துறையைப் பயன்படுத்தி வன்முறையை ஏவுவதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஜனநாயகத்திற்கு விரோதமான இந்த நடவடிக்கை வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் செயலாகும்.

பொள்ளாச்சி கொடூரம் குறித்து பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், சமூக வலைதளங்கள் வெளியிட்ட செய்திகளைத் தொடர்ந்து, எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் நானும், தமிழ்நாட்டில் உள்ள மற்ற தலைவர்களும் கண்டனம் தெரிவித்த பிறகே, அதிமுக அரசு லேசாக அசைந்தது என்பதே உண்மை நிலை. அப்போதும்கூட உண்மைகள் முழுமையாக வெளிவந்துவிடக்கூடாது என்பதற்காக எதிர்க்கட்சிகள் மீது பழிபோடும் நோக்கில்தான் துணை சபாநாயகர் உள்ளிட்டவர்கள் செயல்படுகிறார்களே ஒழிய, இந்தக் கொடூரத்தில் தொடர்புடைய ஆளுந்தரப்பின் கரங்களில் படிந்துள்ள அழிக்க முடியாத கறைகளைக் கழுவும் முயற்சியே ரகசியமாக வேகமாக நடைபெறுகிறது.

கைதானவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்வதாக அறிவித்த சில மணி நேரத்தில், சிபிசிஐடிக்கு விசாரணை மாற்றப்படுவதாக அறிவிப்பதும், அதன்பின் சில மணிநேரங்களிலேயே சிபிஐக்குப் பரிந்துரை என்பதிலிருந்தே ஆட்சியாளர்களின் பதற்றமும் பயமும் அம்பலமாகிவிட்டது. கொடுமையான பாலியல் குற்றத்தில் தொடர்புடையவர்கள் மீது உரிய சட்டத்தைப் பாய்ச்சாமல், ஒரே ஒரு முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்துவிட்டு, அவர்கள் மீது குண்டர் சட்டம் போடுவது என்பது சட்டரீதியாகவே அவர்கள் சில மாதங்கள் கழித்துத் தப்பிப்பதற்கான வழியை அரசே உருவாக்கித் தருகிறதோ என்ற சந்தேகத்தை அனைத்துத் தரப்பிலும் ஏற்படுத்துகிறது.

பொள்ளாச்சி பாலியல் கொடூர விவகாரம் என்பது, கையில் சிக்கிய 4 இளைஞர்களை மட்டும் பலிகடாவாக்கும் நிகழ்வாக மாறிவிடக்கூடாது. பொள்ளாச்சி பகுதியில் கடந்த 7 ஆண்டுகளாக பாலியல் வன்கொடூர நிகழ்வு நடந்து வருவதும், அண்மைக்காலத்தில் ஆறேழு இளம்பெண்கள் மர்மமான முறையில் மரணம் அடைந்திருப்பதும் உரிய முறையில் கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, முழுமையாக விசாரிக்கப்பட வேண்டிய சமூக விரோத நிகழ்வுகளாகும்.

காலையில் ஒரு வகை விசாரணை, மாலையில் ஒரு வகை விசாரணை எனத் தள்ளாடுவது அனைத்துமே சதி எண்ணத்தோடு நடத்தப்படும் கண்துடைப்பு நாடகங்கள். இந்த விவகாரத்தில் தொடர்புடைய ஆளுந்தரப்பினரைக் காப்பாற்ற நினைக்கும் முயற்சியில் மட்டுமே ஆட்சியாளர்கள் தீவிரமாக இருக்கிறார்கள். ஆனால், அரசியல் கட்சியினரைக் கடந்து, இது தமிழ்நாட்டில் உள்ள பொதுமக்களின் உணர்வுக் கொந்தளிப்பாக மாறிவிட்டது. இனியும் மறைக்க முயற்சித்தாலோ, குற்றவாளிகளைக் காப்பாற்ற நினைத்தாலோ தமிழ்நாடு என்பது மக்களின் தன்னெழுச்சிமிக்க போராட்டக்களமாக மாறிவிடும்.

அதிமுக ஆட்சியாளர்கள் இதனை உணர்ந்து, உடனடியாக Speedy Trial எனப்படும் விரைவு நீதிமன்ற விசாரணைக்கு இந்த வழக்கை உட்படுத்தி, பாலியல் வன்கொடூர நிகழ்வில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் கடுமையான தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தாமதிப்பதும், தப்பிக்க விட நினைப்பதும் மக்களின் மனசாட்சிக்கு விரோதமானது; அது ஆட்சியாளர்களைக் கனவிலும் நனவிலும் துரத்திக் கொண்டே இருக்கும்'' என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

24 mins ago

ஜோதிடம்

40 mins ago

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

6 hours ago

வணிகம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

க்ரைம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்