அமெரிக்க உலக அறிவியல் கண்காட்சிக்கு தமிழக மாணவரை அனுப்பும் அல்பேனியா நாடு: கொலம்பியா புத்தாக்க கண்காட்சிக்கு செல்ல ஸ்பான்சர் கிடைக்காமல் தவிப்பு

By இ.மணிகண்டன்

அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உலக அறிவியல் கண்காட்சியில், அல்பேனியா நாட்டின் சார்பில் பங்கேற்கவுள்ளார் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த 16 வயது இளம் விஞ்ஞானி எம். டெனித் ஆதித்யா (16).

விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பைச் சேர்ந்த மாவேல்ராஜன்- ஆக்னலேனின் மகனான டெனித் ஆதித்யா, வத்திராயிருப்பு அரசு உதவி பெறும் தி இந்து மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 உயிரியல் பிரிவில் படித்து வருகிறார். நாணயங்கள் சேகரிப்பு, அறிவியல் சார்ந்த ஆராய்ச்சிகளில் ஈடுபடுதல், செஸ் விளையாட்டு, கணினி மென்பொருள் செயலாக்கம், புத்தகம் வாசிப்பது போன்றவை இவரது பொழுதுபோக்கு கள்.

இயற்பியல் அறிவியல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வாழை இலையை 3 ஆண்டுகள் வரை அதன் தன்மை மாறாமல் பாதுகாக்கும் முறையைக் கண்டுபிடித்து அதற்காக இதுவரை 7 தேசிய விருதுகளும், 4 சர்வதேச விருதுகளும், 8 மாநில அளவிலான விருதுகளையும் டெனித் ஆதித்யா பெற்றுள்ளார்.

கடந்த மார்ச் மாதம் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் நடைபெற்ற சர்வதேச அறிவியல் கண்காட்சியில் இந்தியா சார்பில் கலந்து கொண்டு தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமைக்குரியவர் இவர்.

மேலும், கடந்த ஜூலையில் நெதர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச சுற்றுச்சூழல் கண்காட்சி யில் பங்கேற்று முதலிடம் பெற்ற முதல் இந்தியர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதேபோல, கடந்த மாதம் அல்பேனியாவில் 90 நாடுகளுக்கும் மேல் பங்கேற்ற சர்வதேச எதிர்காலத் தலைவர்கள் மாநாட்டில் தலைசிறந்த கண்டுபிடிப்புக்கான சிறப்பு விருதையும் டெனித் ஆதித்யா பெற்றார்.

பிற நாட்டவரை ஈர்த்த ஆதித்யா

அடுத்த ஆண்டு அமெரிக்காவில் நடைபெறும் உலக அறிவியல் கண்காட்சியில் தங்கள் நாடு சார்பில் டெனித் ஆதித்யாவை பங்கேற்க வைக்கவுள்ளது அல்பேனியா. அமெரிக்கா சென்று வருவதற்கான அனைத்து செலவுகளையும் ஏற்பதாகவும் அந்த நாடு உறுதி அளித்துள்ளது.

கடந்த ஆண்டு நடைபெற்ற உலக அறிவியல் கண்காட்சியில் இந்தியா சார்பில் டெனித் ஆதித்யா பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்பான்சருக்காக காத்திருப்பு

இதனிடையே, வருகிற 23-ம் தேதி கொலம்பியாவில் நடைபெறும் சர்வதேச புத்தாக்க கண்காட்சியில் உலகம் முழுவதிலுமிருந்து பங்கேற்கும் 25 விஞ்ஞானிகளில் டெனித் ஆதித்யாவும் ஒருவர். இதற்காக வருகிற 21-ம் தேதி புறப்பட வேண்டிய நிலையில், பயணச் செலவுகளை ஏற்றுக் கொள்வதற்கான ஸ்பான்சர் கிடைக்காமல் தவித்து வருகிறார்.

கின்னஸ் நாயகன்:

இளம் விஞ்ஞானி டெனித் ஆதித்யா, 7-ம் வகுப்பு படிக்கும்போது இரு கின்னஸ் சாதனைகளை நிகழ்த்தியவர். இளம் வயதில் அதிக மென்பொருள்களை உருவாக்கியதற்காகவும், உலகில் மிக நீண்டநேரம் இயங்கக்கூடிய விளையாட்டு மென்பொருளை கண்டுபிடித்ததற்காகவும் கின்னஸ் புத்தகத்தில் அவர் இடம் பெற்றார்.

டெனித் ஆதித்யா கண்டுபிடித்த விளையாட்டு மென்பொருள் மூலம் தொடர்ந்து 570 ஆண்டுகள் விளையாட முடியும்.

இதுவரை டெனித் ஆதித்யா 17 வகையான அறிவியல் கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியுள்ளதும், கடந்த 3 மாதங்களுக்கு முன் குடியரசுத் தலைவர் மாளிகைக்கு அழைக்கப்பட்டு, ஒரு மாதம் குடியரசுத் தலைவர் மாளிகையிலேயே தங்கவைக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அல்பேனியாவில் கடந்த மாதம் நடைபெற்ற சர்வதேச எதிர்காலத் தலைவர்கள் மாநாட்டில் விருது பெற்ற டெனித் ஆதித்யா.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

6 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

ஜோதிடம்

8 hours ago

ஜோதிடம்

9 hours ago

ஜோதிடம்

9 hours ago

மேலும்