வறட்சியால் தவிக்கும் விலங்குகளுக்காக செயற்கை நீராதாரங்கள்!

By செய்திப்பிரிவு

ஊருக்குள் நுழைந்து யானைகள்அட்டகாசம், வனப் பகுதியையொட்டி கிராமங்களில் சிறுத்தை நடமாட்டம் என்றெல்லாம் பத்திரிகைகளில் வரும் செய்திகளை, எளிதாக கடந்து சென்றுவிடுகிறோம். ஆனால், சுற்றுச் சூழலுக்கும், இயற்கைக்கும் நேரிட்டுள்ள பேராபத்தே இதற்கெல்லாம் காரணம் என்பது தெரியுமா? வனத்தையே வசிப்பிடமாகக் கொண்ட விலங்குகள், ஊருக்குள் ஏன் வருகின்றன?

உண்மையில், அவை காடுகளுக்குள் தான் இருக்கின்றன. மனிதர்கள்தான் காட்டைத் திருத்தி, நாடாக மாற்றியுள்ளனர். காட்டின் பரப்பு சுருங்கிக்கொண்டே போகிறது. இன்னொன்று, அவற்றின் வசிப்பிடத்தில் உணவும், தண்ணீரும் இல்லாத சூழலில், அதை என்னதான் செய்யும்? உயிர்த் தேவைக்காக வனத்திலிருந்து வெளியே வந்துதானே தீரும்!

இதையே, விலங்குகள் ஊருக்குள் நுழைந்து அட்டகாசம் செய்வதாக நாம் சித்தரித்துக் கொண்டிருக்கிறோம். தண்ணீரும், உணவும் தேடி வரும் விலங்குகளுக்கு நம்மால் ஏற்படும் தொந்தரவே மனித-விலங்கு மோதலாக மாறுகிறது. அவற்றின் வசிப்பிடத்தில் தண்ணீரும், உணவும் கிடைக்கச் செய்வது முக்கியமல்லவா? இதற்கான முயற்சிகளில் வனத் துறையும் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

போதிய மழையின்றி வனப் பகுதிகளில் கடும் வறட்சி நிலவி வருவதால், லாரிகள் மூலம் காடுகளுக்குள் தண்ணீர் கொண்டு சென்று, வன உயிரினங்களின் தாகம் தீர்க்க வனத் துறை முயற்சித்து வருகிறது.

கோவை வனக் கோட்டத்துக்கு உட்பட்ட  மேட்டுப்பாளையம், சிறுமுகை, காரமடை உள்ளிட்ட வனச் சரகப் பகுதிகளில் புலி, யானை, கரடி, சிறுத்தை, காட்டெருமை, மான் என பல்வேறு வன உயிரினங்கள் உள்ளன. குறிப்பாக, இந்த வனப் பகுதி யானைகளின் முக்கிய வழித்தடப் பாதை என்பதால்,  ஏராளமான யானைகள் நடமாடுகின்றன.

 இந்நிலையில், கடந்த ஆண்டு இப்பகுதியில் பெய்ய வேண்டிய பருவ மழையின் அளவு வெகுவாகக் குறைந்து போனதால்,  மலையடிவாரத்தில் அமைந்துள்ள அடர்ந்த வனத்தில் கடும் வறட்சி நிலவுகிறது. சுட்டெரிக்கும் சூரியனின் தாக்கத்தால், வனத்தில் இருந்த நீரோடைகள், வனக் குட்டைகள் என வன உயிரினங்களின் தாகம் தீர்க்கும் அனைத்து இயற்கை நீராதாரங்களும் வறண்டு வருகின்றன.

இதனால்,  வன விலங்குகள் தண்ணீர் தேடி அலையும் சூழல் நிலவுகிறது. ஒரு யானை உயிர்வாழ நாளொன்றுக்கு குறைந்தபட்சம் 200  லிட்டர் தண்ணீர் தேவை என்ற நிலையில்,  காடுகளுக்குள் போதிய நீரின்றி யானைகள் பரிதவித்து வருகின்றன. காட்டில் நீர் கிடைக்காத நிலையில், வனத்தை விட்டு வெளியேறி, நீரைத் தேடி அருகில் உள்ள கிராமங்களுக்குள் யானைகள் புகும் வாய்ப்பும் அதிகரித்து வருகிறது.

இதைக் கருத்தில் கொண்டு, செயற்கையான முறையில் லாரிகளில் தண்ணீரை காட்டுக்குள் எடுத்துச் சென்று, வன விலங்குகளின் தாகம் தீர்க்கும் முயற்சியில் சிறுமுகை வனத் துறை ஈடுபட்டுள்ளது.குஞ்சப்பனை, வில்வமரக்காடு, பெத்திக்குட்டை, ஓடந்துறை என அடர்ந்த வனத்தின் எல்லைகளில், வனத் துறையால் கட்டப்பட்டுள்ள தண்ணீர்த் தொட்டிகளில் நீர் நிரப்பும் பணி நடைபெற்று வருகிறது.

 மேலும்,  செயற்கையான கசிவு நீர்க் குட்டைகளை அமைத்து, அதில் ஆழ்குழாய்க் கிணறு மற்றும் பவானி ஆற்று நீரைத் திருப்பி தண்ணீர் நிரப்பவும் முயற்சிகள் மேற்க்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கும் சிறுமுகை வனத் துறையினர், இதனால் வன உயிரினங்களின் தாகத்தைத் தீர்ப்பதுடன், தண்ணீர் தேடி ஊருக்குள் நுழையும் யானைகளைத் தடுத்து,  மனித-விலங்கு மோதலையும் கட்டுப்படுத்தலாம் என்கின்றனர். எது எப்படியோ? வனத்தின் ஆதாரமான விலங்குகளின் தாகம் தீர்ந்தால் சரி!

படங்கள்: ஆர்.சரவணபாபு

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

7 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

ஜோதிடம்

10 hours ago

ஜோதிடம்

10 hours ago

ஜோதிடம்

10 hours ago

மேலும்