உள்ளாட்சி இடைத்தேர்தல்: உற்சாகத்தில் அதிமுக

By செய்திப்பிரிவு

உள்ளாட்சி இடைத்தேர்தலில் வலு வான போட்டி இல்லாததால் எல்லா இடங்களிலும் அதிமுக வேட்பாளர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

தமிழக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள இடங்களுக்கு வரும் 18-ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை, நெல்லை, தூத்துக்குடி மாநகராட்சி மேயர்கள் மற்றும் 8 நகராட்சித் தலைவர்கள் உள்பட ஆயிரத்துக்கும் அதிகமான பதவிகளுக்கு இந்தத் தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் வியாழக்கிழமையுடன் முடிவடைந்தது.

அதிமுக சார்பில் அனைத்து இடங்களிலும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு, மனு தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில், அதிமுகவை எதிர்த்து பாஜக போட்டியிடுகிறது. சில இடங்களில் இடதுசாரிகளும் மனு தாக்கல் செய்துள்ளனர். திமுக, பாமக, விடுதலைச் சிறுத்தைகள், புதிய தமிழகம், மமக உள்ளிட்ட கட்சிகள் தேர்தலைப் புறக்கணிக்கப்போவதாக அறிவித்துள்ளன. தேமுதிகவும் மதிமுகவும் பாஜகவுக்கு ஆதரவு அளித்துள்ளன.

முக்கிய எதிர்க்கட்சிகள் போட்டியிடாததால் கடுமையாக தேர்தல் பணியாற்ற அவசியம் இருக்காது; எளிதாக வெற்றி பெற்றுவிடலாம் என அதிமுகவினர் நிம்மதி அடைந்துள்ளனர். அதேநேரத்தில், மாநிலத்தின் ஆளும்கட்சிக்கு எதிராக கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் பாஜக போட்டியில் குதித்திருப்பது தேர்தல் களத்தில் சற்று விறுவிறுப்பை ஏற்படுத்தியுள்ளது. வேட்புமனு தாக்கல் நடந்த சில இடங்களில் பாஜக மற்றும் இடதுசாரி கட்சியினருக்கும் அதிமுகவினருக்கும் இடையே நடந்த மோதல்கள் பரபரப்பை கூட்டியிருக்கின்றன.

புதுக்கோட்டை நகராட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் பாஜக வேட்பாளர்களை மனு தாக்கல் செய்யவிடாமல் அதிமுகவினர் தடுத்துவிட்டதாக இருதரப்பினரும் புகார் செய்துள்ளனர். அதிமுகவின் இந்த செயலுக்கு பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுகப்போவதாகவும் கூறியுள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன், ‘தி இந்து’விடம் கூறும்போது, “இது ஆளும்கட்சியின் அடாவடிப்போக்கின் தொடக்கம். இதற்கு கடும் கண்டனத்தை தெரிவிக்கிறேன்” என்றார். மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணனும் புதுக்கோட்டை சம்பவத்தை வன்மையாக கண்டித்துள்ளார்.

மார்க்சிஸ்ட் கட்சி, கோவை மேயர் பதவிக்கும் சில நகராட்சி தலைவர் பதவிக்கும் போட்டியிடுகிறது. புதுக்கோட்டையில் மட்டுமே இந்திய கம்யூனிஸ்ட் போட்டியிட இருந்தது. அங்கும் அவர்களால் மனு தாக்கல் செய்யமுடியாமல் போய்விட்டது.

அலைக்கழித்த பாமக

தேமுதிக, மதிமுக தலைவர்களை தமிழக பாஜக தலைவர் தமிழிசை சந்தித்து ஆதரவு கேட்டார். அவர்களும் ஆதரவு தருவதாக அறிவித்துவிட்டனர். ஆனால், பலமுறை முயன்றும் பாமக தலைவர்களை தமிழிசையால் சந்திக்க முடியவில்லை. எனினும், பாமக தரப்பை எப்படியாவது சந்தித்து ஆதரவை பெற்றுவிட பாஜக தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருவதாக தெரிகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

15 mins ago

ஓடிடி களம்

17 mins ago

விளையாட்டு

32 mins ago

சினிமா

34 mins ago

உலகம்

48 mins ago

விளையாட்டு

55 mins ago

ஜோதிடம்

37 mins ago

ஜோதிடம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

2 hours ago

மேலும்