ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்க்கும் கிராம மக்கள் மீதான காவல்துறையின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது: தினகரன்

By செய்திப்பிரிவு

ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்க்கும் கிராம மக்கள் மீதான காவல்துறையின் கண்மூடித்தனமான நடவடிக்கை கண்டிக்கத்தக்கது என்று அமமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''நாகப்பட்டினம் மாவட்டம் கரியாப்பட்டினத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக அமைதி வழியில் போராடும் பொதுமக்கள் மீது காவல்துறை மேற்கொண்டிருக்கும் கண்மூடித்தனமான நடவடிக்கைகளுக்கு அமமுக கடும் கண்டனம் தெரிவிக்கிறது.

கரியாப்பட்டினத்தில் இருந்து திருவாரூர் மாவட்டம்  திருக்காரவாசல் வரை  474 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு மக்கள் விரோத மத்திய அரசும், எடப்பாடி பழனிசாமி அரசும் திட்டம் தீட்டியுள்ளன. தூத்துக்குடியில் அப்பாவி மக்கள் 13 பேர் சுட்டுக்கொல்லப்படுவதற்கு காரணமான ஸ்டெர்லைட் நிறுவனத்தை நடத்தும் வேதாந்தா நிறுவனத்துடன் இதற்கான ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

தங்கள் பகுதியைப் பாழடிக்கும் இத்திட்டத்தை எதிர்த்து கரியாப்பட்டினம் பகுதி மக்கள் கடந்த ஒரு வாரமாக அமைதி வழியில் தொடர்ந்து போராடி வருகின்றனர்.  அவர்களின் மீது வழக்கம் போல மத்திய ஆட்சியாளர்களின் தூண்டுதலில், பழனிசாமி அரசு அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளது.

நள்ளிரவில் அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு, ஒவ்வொரு  வீடாக அத்துமீறி புகுந்து கிராம மக்களைக் கைது செய்து இழுத்துச் சென்றுள்ளனர். அமைதிப் போராட்டத்திற்காக கிராம மக்கள் போட்டிருந்த பந்தலையும் காவல் துறையினர் சேதப்படுத்தி உள்ளனர். மேலும் ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்க்கும் கிராமத்தினர் மீது பொய் வழக்குகளைப் பதிந்து வருவதாகவும் தகவல்கள் வருகின்றன.

காவல்துறையை ஏவிவிட்டு பழனிசாமி அரசு மேற்கொண்டிருக்கும் இத்தகைய காட்டுமிராண்டித்தனமான  நடவடிக்கைகள் கடும் கண்டனத்திற்குரியவை. கைது செய்யப்பட்டவர்களை எந்த நிபந்தனையும் இன்றி உடனடியாக விடுவிக்க வேண்டும். அப்பாவி மக்கள் மீதான வழக்குகளையும் கைவிட வேண்டும். ஆட்சி அதிகாரம் கையில் இருக்கிறது என்பதற்காக ஆடாத ஆட்டமெல்லாம் ஆடிக்கொண்டிருக்கிற மத்திய ஆட்சியாளர்களுக்கும், அவர்களோடு கூட்டு சேர்ந்து மக்களைத் துச்சமாக நடத்துகிற எடப்பாடி பழனிசாமிக்கும் பாடம் புகட்டுகிற நாள் நெருங்கிவிட்டது.

 ‘நமக்குச் சோறு போடுகிற காவிரி டெல்டாவில்  கை வைத்து அழிப்பதற்கு யாரையும் விட மாட்டோம்’ என்ற நிலைப்பாட்டில் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் உறுதியாக உள்ளது. ஹைட்ரோகார்பன், மீத்தேன் உட்பட தனியாருக்காக மண்ணையும், மனிதர்களையும் சூறையாடும்  திட்டங்களைத் தொடர்ந்து எதிர்ப்போம். அவற்றுக்கு எதிரான போராட்டங்களில்  மக்களுக்கு ஆதரவாக நிற்போம்'' என்று தினகரன் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

5 mins ago

வணிகம்

7 hours ago

சுற்றுச்சூழல்

42 mins ago

சுற்றுலா

54 mins ago

கல்வி

11 mins ago

தமிழகம்

1 hour ago

சுற்றுலா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

ஆன்மிகம்

2 hours ago

மேலும்