மோகனூரில் ஒட்டுண்ணி உற்பத்தி நிலையம்!- கரும்பு விவசாயிகள் எதிர்பார்ப்பு நிறைவேறுமா?

By கி.பார்த்திபன்

உலகில் உள்ள உயிரினங்களில் அதிக எண்ணிக்கை கொண்டது பூச்சிகள்தான். பல கோடி வகைகளிலான பூச்சிகள் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்தப் பூச்சிகள் காலசூழலுக்கு ஏற்ப அவற்றை தகவமைத்துக் கொண்டு புவியில் வாழ்கின்றன. இவற்றில் சில விவசாயத்துக்கு  நன்மை செய்பவையாகவும், தீங்கிழைப்பவையாகும் உள்ளன.

அந்த வகையில், கரும்பு பயிர்களில் குருத்துப்பூச்சி, இடைக்கணு பூச்சி போன்றவற்றின் தாக்குதல் அதிகமாக இருக்கும். “இவற்றைக் கண்டறிந்து தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளாவிட்டால், அறுவடை சமயத்தில் கரும்பு கிடைக்காது, வெறும் சக்கைதான் கிடைக்கும்” என்கின்றனர் கரும்பு விவசாயிகள்.

நாமக்கல் மாவட்டத்தில் ஜேடர் பாளையம், பாண்டமங்கலம் தொடங்கி ஓலப்பாளையம், நன்செய் இடையாறு, மோகனுார், காட்டுப்புத்தூர் வரை பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பரப்பில் கரும்பு சாகுபடி மேற் கொள்ளப்படுகிறது. முழுக்க முழுக்க  காவிரிப் பாசனத்தை நம்பி சாகுபடி செய்யப்படும் கரும்பு பயிர்கள், அவ்வப்போது குருத்துப் பூச்சி, இடைக்கணுப் பூச்சி தாக்குதலால் பாதிக்கப்பட்டு வந்தன.

இதனால் ஏற்படும் இழப்புகளை விவசாயிகள் சமாளிக்க இயலாமல், பெரும் சிரமத்துக்குள்ளாகி வந்தனர். இதை கருத்தில்கொண்டு, மோகனூரில் உள்ள சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை வளாகத்தில் ‘ஒட்டுண்ணி உற்பத்தி நிலையம்’ தொடங்கப்பட்டு, சிறப்பாக செயல்பட்டு வந்தது.

 இங்கு குறைந்த விலையில் வழங்கப்படும் ஒட்டுண்ணிகளைப் பெற்றுச் செல்லும் விவசாயிகள், அவற்றை கரும்பு தோட்டத்தில் விட்டு, பயிர்களைப் பாதுகாத்து வந்தனர்.

இந்நிலையில், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் இந்த ஒட்டுண்ணி உற்பத்தி நிலையம் மூடப்பட்டது. இதனால், கரும்பை பாதிக்கச் செய்யும் ஒட்டுண்ணிகளை சமாளிக்க முடியாமல், கரும்பு சாகுபடி பரப்பை குறைக்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டுள்ளதாக கரும்பு விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து மோகனூர் ஓலப்பாளையத்தைச் சேர்ந்த கரும்பு விவசாயியும், சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாகக் குழு உறுப்பினருமான ஓ.பி.குப்புதுரை கூறும்போது, “பரமத்திவேலுார், மோகனூர் சுற்றுவட்டாரத்தில் காவிரிக் கரையோரத்தில் 15 ஆயிரம் ஏக்கர் பரப்பில் கரும்பு சாகுபடி செய்யப்படுகிறது. இதை மையப்படுத்தியே  கடந்த 1964-ம் ஆண்டு மோகனூரில் `சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை` தொடங்கப்பட்டது.

பொதுவாக, கரும்பில் குருத்துப்பூச்சி மற்றும் இடைக்கணு பூச்சித் தாக்குதல், வேர் அழுகல் நோய் தாக்கம் அதிகம் இருக்கும். பூச்சித்  தாக்குதலை கண்டுகொள்ளாமல்விட்டால், பயிர் முழுவதும் வீணாகி, முதலுக்கே மோசமாகிவிடும். இந்தப் பூச்சித் தாக்குதலை சமாளிக்க மோகனுாரில் உள்ள சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் ஒட்டுண்ணி உற்பத்தி நிலையம் தொடங்கப்பட்டது.

குறைந்த விலையில் ஒட்டுண்ணிகள்

விவசாயிகளுக்கு, இந்த ஒட்டுண்ணிகைளை குறைந்த விலைக்கு சர்க்கரை ஆலை நிர்வாகம்  வழங்கும். இவற்றை குறிப்பிட்டகால இடைவெளியில் கரும்புத் தோட்டத்தில் விடும்போது, கரும்புக்குத் தீங்கு விளைவிக்கும் குறுத்துப்பூச்சி, இடைக்கணு பூச்சிகளைக்  கொன்று சாப்பிடும். அதேசமயம், தொடர்ச்சியாக இந்த ஒட்டுண்ணிகள் கரும்பு தோட்டத்தில் இருக்கும். இதன்மூலம் கரும்பு பயிர்கள் பாதுகாக்கப்பட்டு வந்தன.

மூடப்பட்ட உற்பத்தி நிலையம்

இந்நிலையில், கடந்த 2010-2011-ம் ஆண்டு,  ஆலை வளாகத்தில் இணை மின் உற்பத்திக்கான ஆலை அமைக்கப்பட்டது. அப்போது, ஒட்டுண்ணி உற்பத்தி நிலையம் அங்கிருந்து அகற்றப்பட்டது. பின்னர், ஒட்டுண்ணி உற்பத்தி நிலையம் மீண்டும் தொடங்கப்படவே இல்லை. ஆலையில் போதுமான இட வசதியிருந்தும்,  இந்த நிலையம் தொடங்கப்படாமல் உள்ளது.

விலை கொடுத்து வாங்கும் சூழல்

வேளாண்மைத் துறை சார்பில், மோகனூர் காந்தமலை முருகன் கோயில் அருகே ஒட்டுண்ணி உற்பத்தி நிலையம் செயல்பட்டு வந்தது. இதுவும் கடந்த 5 ஆண்டுகளாக செயல்படாமல், பூட்டி வைக்கப்பட்டுள்ளது. இதனால், கரூர் மாவட்டம் புலியூரில் உள்ள தனியாரிடம் இப்பகுதி விவசாயிகள் சென்று, ஒரு அட்டை ஒட்டுண்ணிக்கு ரூ.500 வீதம் விலை  கொடுத்து வாங்கி வருகின்றனர்.

ஏக்கர் ஒன்றுக்கு 3 அட்டைகளுக்கு மேல் தேவைப்படும். அதேபோல, ஒருமுறை மட்டுமின்றி 2 அல்லது மூன்றுமுறை ஒட்டுண்ணிகளை விடவேண்டும். அப்போதுதான் பயிர் பாதுகாக்கப்படும். மேலும், தனியார் ஒருவரிடமே அனைத்து விவசாயிகளும் செல்வதால், ஒட்டுண்ணிகள் தாராளமாக கிடைப்பதில்லை.

இந்தப் பிரச்சினை மற்றும் வறட்சி போன்ற காரணங்களால், பரமத்தி வேலூர், மோகனூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கரும்பு சாகுபடிப் பரப்பளவு குறைந்துள்ளது. சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு, அதன் அரவைப் பருவத்தில் 4.50 லட்சம் டன் கரும்பு தேவைப்படும். ஆனால், 2018-19-ம் ஆண்டு அரவைப் பருவத்தில் 1.27 லட்சம் டன் கரும்பே கிடைத்தது. இதனால், ஆலை பெரும் பொருளாதார இழப்பை சந்தித்துள்ளது. வறட்சி போன்ற இயற்கை இடர்பாடுகளை தீர்க்க முடியாவிட்டாலும், கரும்பு விவசாயிகள் அன்றாடம் சந்திக்கும் பூச்சித் தாக்குதல் பிரச்சினைக்கு தீர்வு காண, மீண்டும் சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் ஒட்டுண்ணி உற்பத்தி நிலையத்தைத் தொடங்க வேண்டும். இது, இப்பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான கரும்பு விவசாயிகளின் எதிர்பார்ப்பாகும்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

48 mins ago

க்ரைம்

46 mins ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

க்ரைம்

2 hours ago

சுற்றுச்சூழல்

2 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

2 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்