2014-ம் ஆண்டு சட்டத்தை கடுமையாக அமல்படுத்தி மகளிர் விடுதிகளில் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்: பெற்றோரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்

By டி.செல்வகுமார்

சென்னை ஆதம்பாக்கம் மகளிர் விடுதிக்குள் ரகசிய கேமராக்கள் பொருத்தியிருந்தது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, அனைத்து மகளிர் விடுதிகளிலும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அதற்கான சட்டத்தை கடுமையாக அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

மகளிர் விடுதிகள் மற்றும் குழந்தைகள் இல்லங்களை முறைப்படுத்தும் நோக்கில் தமிழ்நாடு மகளிர் விடுதிகள் மற்றும் குழந்தைகள் இல்ல ஒழுங்குமுறைச் சட்டத்தை (2014) அப்போதைய முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்தார். இருப்பினும், விதிகளை மீறி ஏராளமான மகளிர் விடுதிகள் செயல்படுவதாகக் குற்றம் சாட்டப்படுகிறது.

மகளிர் விடுதி தொடர்பான வழக்கொன்றில், வரும் மார்ச் 1-ம் தேதிக்குப் பிறகு தமிழ்நாட்டில் உரிமம் இல்லாமல் மகளிர் விடுதிகள் செயல்படக்கூடாது என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

இச்சட்டப்பிரிவு 4-ன்படி மகளிர் விடுதிகள் கண்டிப்பாக உரிமம் பெற்றிருக்க வேண்டும். பிரிவு 8-ன்படி உரிமத்தில், விடுதியின் பெயர் மற்றும் அமைந்திருக்கும் இடம், பெண் வார்டனின் பெயர், விடுதியில் தங்கியிருப்போர் எண்ணிக்கை ஆகியன இடம்பெற வேண்டும்.

மாவட்ட ஆட்சியர் அனுமதி

மாவட்ட ஆட்சியர் அனுமதி இல்லாமல் மகளிர் விடுதியின் பெயரையோ, இடத்தையோ மாற்றக்கூடாது. மகளிர் விடுதியில் தங்கியிருப்போர் எண்ணிக்கையையும் அதிகரிக்கக் கூடாது.

பிரிவு 12-ன்படி மகளிர் விடுதிகளை உரிய முறையில் மாவட்ட ஆட்சியரிடம் பதிவு செய்திருக்க வேண்டும். உரிமம் இல்லாமல் இல்லம் நடத்தினால் அதிகபட்சம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.

பிரிவு 13(1)-ன்படி மகளிர் விடுதிகளுக்கு பெண்களை மட்டுமே வார்டனாக நியமிக்க வேண்டும். பிரிவு 13(2)-ன்படி வார்டன் உடல் நலம் குறித்து மருத்துவரிடம் சான்று பெற வேண்டும். வார்டன் பற்றி உள்ளூர் காவல்துறையினர் சான்றளித்த பிறகே வார்டனை நியமிக்க வேண்டும். பிரிவு 13(4)-ன்படி 50 பேருக்கு ஒரு வார்டன் இருக்க வேண்டும்.

பிரிவு 15(1)-ன்படி மகளிர் விடுதி நடத்தப்படும் கட்டிடம், அதற்கான அனுமதி பெற்றதாக இருக்க வேண்டியது கட்டாயம்.

பாதுகாவலர் அவசியம்

பிரிவு 16(1)-ன்படி மகளிர் விடுதிகளில் 24 மணி நேரமும் பாதுகாவலர் இருக்க வேண்டும். பிரிவு 16 (2)-ன்படி பாதுகாவலர் 55 வயதுக்குட்பட்டவராக இருத்தல் அவசியம். பிரிவு 16(3)-ன்படி பாதுகாவலர் பற்றிய விவரங்கள் உள்ளூர் காவல்துறையினரால் சரிபார்க்கப்பட வேண்டும்.

சட்டப்பிரிவு 17-ன்படி மகளிர் விடுதிக்கான வருகைப் பதிவேட்டை வார்டன் பராமரிக்க வேண்டும்.

இதுதொடர்பாக திருவான்மியூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஓ.உன்னிகிருஷ்ணன் கூறியதாவது:பெரும்பாலான மகளிர் விடுதிகள், வீடுகளில் நடத்தப்படுகிறது. இதுதான் முதல் விதிமீறல். வீடு கட்டுவதற்கு அனுமதி வாங்கி வீடு கட்டிவிட்டு, அதை வர்த்தக நோக்கத்துக்காகப் பயன்படுத்துவது சட்டவிரோதம். இக்குற்றச் செயலைத் தடுத்தாக வேண்டும். அத்துடன் வீடுகளில் லாப நோக்கில் மகளிர் விடுதி நடத்தப்படுவதால் வர்த்தக பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டர் கட்டணம், மின் கட்டணம் செலுத்துவதில்லை.

சொத்து வரி, குடிநீர் கட்டணம் செலுத்துவதிலும் விதிமீறல்தான். ஜிஎஸ்டி வரிவிதிப்பு மற்றும் வருமான வரி செலுத்துவதில் இருந்தும் தப்பிக்கின்றனர். இதனால் மத்திய, மாநில அரசுகளுக்கு பெருமளவு வருவாய் இழப்பு ஏற்படுகிறது என்றார்.

பெற்றோரிடம் விழிப்புணர்வு

இதுகுறித்து விவரம் தெரிந்தவர்கள், மேற்படி சட்டத்தை தீவிரமாக அமல்படுத்தினால் மட்டுமே மகளிர் விடுதிகளில் இருக்கும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும். அரசு அங்கீகாரம் இல்லாத பள்ளிகளில் குழந்தைகளைச் சேர்க்க வேண்டாம் என்று அரசு எச்சரிப்பது போல, விதிமீறி செயல்படும் மகளிர் விடுதிகளில் உங்கள் பெண்களைச் சேர்க்க வேண்டாம் என்று பெற்றோர் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

அத்துடன் சமூகநலத் துறை இணையதளத்தில், சட்டப்படி செயல்படும் மகளிர் விடுதிகளின் பட்டியலை வெளியிட வேண்டும். மகளிர் விடுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தியிருப்பதை உள்ளூர் காவல்துறையினர் உறுதி செய்வதுடன், அதன் செயல்பாட்டை குறிப்பிட்ட கால இடைவெளியில் கண்காணிக்க வேண்டும்.

இவற்றை செய்ய அரசு தவறினால், உயர் நீதிமன்றமே தனியாக குழு அமைத்து மகளிர் விடுதிகளின் நிலை குறித்த அறிக்கையைப் பெற்று உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும்” என்று கூறுகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

4 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

ஜோதிடம்

7 hours ago

ஜோதிடம்

7 hours ago

ஜோதிடம்

7 hours ago

மேலும்