பாஜக வேட்பாளரை திமுக, காங். ஆதரிக்க வேண்டும்: பாஜக மாநில தலைவர் தமிழிசை செளந்தரராஜன்

By செய்திப்பிரிவு

தமிழக உள்ளாட்சி இடைத்தேர்தலில் நிலவும் அசாதாரண சூழலை உணர்ந்து இத்தேர்தலைப் புறக்கணித்துள்ள திமுக மட்டுமின்றி காங்கிரஸ் கட்சியும் பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று அக்கட்சியின் தமிழகத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கேட்டுக் கொண்டார்.

கோவை மாநகராட்சி மேயர் இடைத்தேர்தல் செப்.18-ம் தேதி நடைபெறுகிறது. பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் ஆர்.நந்தகுமாரை ஆதரித்துப் பிரச்சாரம் செய்வதற்காக தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் சனிக்கிழமை கோவை வந்தார். அவர் கோவை சித்தாபுதூரில் உள்ள கட்சியின் மாவட்டத் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

எங்கள் வேட்பாளர்கள் பலர் மிரட்டப்படுகிறார்கள். கடத்தப்படுகிறார்கள். எங்கள் வேட்பாளர்களின் கையெழுத்தை எதிர்ப்பவர்களே போட்டுவிட்டு உனது மனு வாபஸ் வாங்கப்பட்டுவிட்டது, தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது எனக் கூறி விரட்டப்படுகிறார்கள். மேல்மலையனூரில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் பிரபாகரன் கடத்தப்பட்டார்.

தேர்தல் ஆணையரிடம் முறையிட்டபோது, `அரசியல் கட்சியினர் பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டும்’ என எங்களுக்கே அறிவுரை சொல்கிறாரே தவிர தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. நெல்லை வேட்பாளராக அறிவித்த வெள்ளையம்மாள் அதிமுகவில் இணைந்துள்ளார். அவ்வாறு இணைய வேண்டிய அவசியம் என்ன? இதுதான் அரசியல் நாகரிகமா? இதன் மூலம் நாங்கள் சொல்லும் தொடர் குற்றச்சாட்டு நிரூபணம் ஆகியிருக்கிறது.

கோவையில் ஏராளமான அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள், வெவ்வேறு மாநகர மேயர்கள், கவுன்சிலர்கள் தேர்தல் பணிக்காக முகாமிட்டுள்ளார்கள்.

கோவையில் நிலவிய மின்வெட்டை நீக்கவும், தொழில் தேக்கத்தை சரி செய்யவும் இத்தனை அமைச்சர்கள் வந்திருந்து பணியாற்றியிருந்தால் பாராட்டலாம்.

எனவேதான் நாங்கள், `மோடியின் நல்லாட்சி நகராட்சியிலும்’ என்ற கோஷத்துடன் இந்த தேர்தலில் மக்களை சந்தித்து கொண்டிருக்கிறோம்.

தமிழகத்தில் நடப்பதைப் பார்க்கும்போது தேர்தல் ஆணையம் தேர்தலை நடுநிலையாக நடத்துமா என்ற சந்தேகம் எழுகிறது. எனவேதான் தமிழகம் முழுவதும் நடைபெறும் விதிமீறல்கள், மிரட்டல்கள், அராஜகங்கள் என அனைத்தையும் புள்ளி விவரமாக சேகரித்து நீதிமன்றம் சென்றுள்ளோம் என்றார்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் கூறியதாவது:

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்படுவது குறித்து..

இது குறித்து மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜுடன் பலமுறை பேசியிருக்கிறோம். முந்தைய அரசுகள் போல் இல்லாமல் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரமாக தமிழக மீனவர் பிரச்சினையை பாஜக அரசு தீர்த்து வைக்கும்.

உள்ளாட்சி இடைத்தேர்தலில் போட்டியிடாத கட்சிகள் பாஜகவுக்கு ஆதரவு தரவேண்டும் என்று கூறியிருக்கிறீர்கள். இதை திமுகவுக்கு விடுக்கும் வேண்டுகோளாக எடுத்துக் கொள்ளலாமா?

தேர்தலுக்காக நாங்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்களை சந்தித்தோம். அவர்கள் உள்பட எல்லா தலைவர்களும் இந்தத் தேர்தலில் அசாதாரண விஷயங்களை கண்டித்து வருகிறார்கள். அதேபோல் திமுக தலைவர் கருணாநிதியும் இதைக் கண்டித்துள்ளார். ஸ்டாலினும் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார். எனவே அவர்களும் எங்களுக்கு ஆதரவு தருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

கருணாநிதியை நேரில் சந்தித்து ஆதரவு கேட்பீர்களா?

நாங்கள் பிரச்சாரத்தில் இருக்கிறோம். நேரில் சந்திக்க நேரமில்லை. இப்போது உங்கள் மூலம் கேட்பதே கோரிக்கைதானே?.

உங்கள் வேட்பாளர்கள் வேட்பு மனுவை வாபஸ் பெற்று அதிமுகவில் இணைவது வேட்பாளர் தேர்வில் நடைபெற்ற பிழையாகக் கொள்ளலாமா?

அப்படிச் சொல்லமுடியாது. தற்போது வேட்பு மனு வாபஸ் பெற்று அதிமுகவில் இணைந்த வேட்பாளர் ஒருவரின் கணவர் எங்கள் கட்சியின் வர்த்தகப் பிரிவில் மாநிலச் செயலாளராக இருந்தவர். அப்படிப்பட்டவர்கள் அங்கே சென்று சேருகிறார்கள் என்றால் என்ன சொல்வது? வலுக்கட்டாயமாக செய்யப்படும் செயலுக்கு, மிரட்டிப் பணியவைக்கும் நிகழ்வுக்கும் என்ன காரணம் சொல்லமுடியும்? ஏற்கெனவே மாற்றுக்கட்சி எம்எல்ஏக்களையே கட்சி மாறச்செய்ய முயற்சித்த கட்சிதானே அது?

உள்ளாட்சி இடைத்தேர்தலில் உங்களுக்கு திமுக ஆதரவு தரவேண்டும் என்கிறீர்கள். அந்த கட்சி மீது ஸ்பெக்ட்ரம் ஊழல் உள்பட ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள் வைத்தீர்கள். காங்கிரஸுக்கும் இதே நிலைதான். அந்த கட்சியும் இந்த தேர்தலை புறக்கணித்துள்ளது. அவர்களும் இந்த தேர்தலில் ஆதரவு தரவேண்டும் என்று கோருவீர்களா?

ஊழல் குற்றச்சாட்டு என்பதுடன் இதைப் பொருத்திப் பார்க்க வேண்டியதில்லை. இப்போது களத்தில் நிற்பவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினையில் களத்தைப் புறக்கணித்தவர்கள் ஒன்றிப் போவதால் இந்த ஆதரவு கோரப்படுகிறது. அது வேறு; இது வேறு.

அந்தவகையில் பார்த்தால் தமிழக காங்கிரஸார் இந்த தேர்தலில் எங்களை ஆதரிக்க வேண்டும்.

ஏனென்றால் கடந்த காலங்களில் தேர்தல் விதிமீறல்களை அதிகமாக அனுபவித்தவர்கள் அவர்கள்தானே? இதை அவர்களுக்கும் கோரிக்கையாகவே வைக்கிறோம் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

28 mins ago

வணிகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

இணைப்பிதழ்கள்

1 hour ago

க்ரைம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

உலகம்

4 hours ago

இந்தியா

5 hours ago

சினிமா

4 hours ago

விளையாட்டு

4 hours ago

மேலும்