காவல்துறையில் டிஜிட்டல் ரேடியோ சிஸ்டம் டெண்டரில் ரூ.88 கோடி முறைகேடு: முதல்வர் பழனிசாமி - டிஜிபி மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

காவல்துறையில் ரூ.88 கோடி டெண்டரில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக, முதல்வர் பழனிசாமி - டிஜிபி டி.கே.ராஜேந்திரன் மீது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் இன்று (சனிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சியில் காவல்துறையிலும் ஊழல் கொடி கட்டிப் பறக்கிறது என்ற செய்தியை ஆங்கில நாளிதழ் ஒன்றில் படித்த போது மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன்.

பொதுமக்களின் பாதுகாப்பிலும் சட்டம் – ஒழுங்கு - அமைதியை நிலைநாட்டிப் பராமரிப்பதிலும் ஈடுபட வேண்டியதை விடுத்து, காவல்துறையின் டெண்டர்களில் ஊழல் முதல்வருடன் ஆர்வத்துடன் கைகோத்து, ஒரு மாநில டிஜிபி ஊழல் முறைகேடுகளுக்கு மூலகாரணமாக இருப்பது எவ்வளவு கேவலமானது என்பதை எண்ணி மனம் மிகுந்த வேதனைப்படுகிறது.

சென்னையிலும், திருச்சியிலும் உள்ள காவல்துறைக்கு 'டிஜிட்டல் ரேடியோ சிஸ்டம்' உருவாக்கும் 88 கோடி ரூபாய் டெண்டரில் மிகப்பெரிய முறைகேடுகள் நடந்துள்ளன. 'ஆப்கோ பிராஜெக்ட்' என்ற பெயரில் காவல்துறையை நவீனமயமாக்கும் நிதியில் இருந்தும் மாநில அரசின் நிதியிலிருந்தும் செயல்படுத்தும் இந்தத் திட்டத்திற்கான டெண்டர் முறைகேடுகள் அதிமுக அரசின் கரி பூசிய ஊழல் முகத்தை மீண்டும் காட்டியிருக்கிறது.

2012-ல் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம் 38 கோடி ரூபாயில் முடித்திருக்க வேண்டியது. ஆனால், அதிமுக அரசின் கஜானாவில் கொள்ளையடிக்கும் கலையால் இந்தத் திட்டத்தின் மதிப்பு இன்றைக்கு 88 கோடி என்று உயர்ந்து அதிலும் மாபெரும் பகல் கொள்ளை நடைபெற்றுள்ளது. இந்த டெண்டரில் ஒரே ஒருவரிடம் ஒப்பந்தம் பெற்று அவருக்கே கான்டிராக்ட் வழங்கப்பட்டுள்ளது. இதில் வேடிக்கை என்னவென்றால் இவரிடம் இதற்கான லைசென்ஸ் பெறப்படவில்லை.

சென்னை மெட்ரோ ரயில் சுரங்கப் பாதைகளில் இந்த ரேடியோ டிஜிட்டல் சிஸ்டம் இயங்காது. ஆனால், டெண்டரின் முக்கிய நோக்கமே சுரங்கப்பாதைகளிலும் இந்த சிஸ்டம் செயல்பட வேண்டும் என்பதுதான். இந்த டெண்டர் போட்டவர் என்ன விலை கேட்டாரோ அந்த அதிக விலையை எவ்வித தயக்கமுமின்றி டிஜிபி டி.கே ராஜேந்திரன் அளித்திருக்கிறார்.

இந்த முறைகேடுகளின் பட்டியல், ஒரு டெண்டரை எப்படி முடிவு செய்யக்கூடாதோ அந்த அளவுக்கு மோசமாக முடிவு செய்யப்பட்டுள்ளதை வெளிக்கொண்டு வந்திருக்கிறது. ஊழல் செய்ய வேண்டும் என்பதை மட்டுமே ஒற்றை நோக்கமாக வைத்து ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. டெண்டர் போட்டவருடன் முறைப்படி நடத்த வேண்டிய விலை குறித்த எந்தப் பேச்சுவார்த்தையும் நடத்தி விலையைக் குறைக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை. டெண்டரில் செலுத்த வேண்டிய வரி பொறுப்புகளை ஒப்பந்ததாரரே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று டெண்டர் விதிகள் இருந்தபோதிலும் அவருக்கு ஜிஎஸ்டி தனியாக 5 கோடி ரூபாய் அனுமதிக்கப்பட்டுள்ளது.

டெண்டரில் உள்ள அனைத்து பொருள்களுக்கும் கற்பனைக்கு எட்டாத அளவுக்கு பல மடங்கு அதிக விலை கொடுக்கப்பட்டுள்ளது. மொபைல் தொடர்பான சாதனங்களிலும் கையடக்கத் தொடர்பான சாதனங்களிலும் மட்டும் 23 கோடி ரூபாய்க்கு மேல் அதிகம் ஒப்பந்ததாரருக்கு கொடுக்கப்பட்டு அரசுக்கு கண்ணை மூடிக்கொண்டு இழப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இப்படி வரலாறு கண்டிராத டெண்டர் முறைகேடுகள் செய்து அரசுக்கு 88 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் அளவுக்கு டிஜிபி டி.கே. ராஜேந்திரனும் இந்தத் துறையை கையில் வைத்திருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் இணைந்து ஊழல் செய்திருப்பது வேதனையானது மட்டுமல்ல - வெட்கக்கேடானது.

இந்த சட்டவிரோத சலுகைகளையும் அப்பட்டமான விதிமீறல்களையும் உள்துறைச் செயலாளர் சுட்டிக்காட்டி டிஜிபியிடம் கேள்வி எழுப்பிய பிறகும் இந்த டெண்டரை முறைகேடாக அளித்திருக்கிறது டி.கே ராஜேந்திரன் - பழனிசாமி கூட்டணி.

மக்களின் பாதுகாப்புக்கும், குறிப்பாக பெண்களின் பாதுகாப்புக்கும் நிறைவேற்றப்பட வேண்டிய இதுபோன்ற திட்டங்களில் எவ்வித கூச்சமும் இன்றி அரசு பணத்தைச் சுரண்டல் செய்வது மிகப்பெரிய குற்றம். அதுவும் காவல்துறைக்கு தலைவராக இருக்கும் டி.கே ராஜேந்திரன் இதுபோன்ற முறைகேடுகளில் துணை நின்று முதல்வர் ஊழல் செய்வதற்கு பச்சைக் கொடி காட்டுவது மட்டுமின்றி பாதுகாப்பாகவும் நிற்பது தமிழக காவல்துறைக்கு மிகக்கேவலமான தலைக்குனிவை ஏற்படுத்தி இருக்கிறது.

ஏற்கெனவே குட்கா ஊழலில் சிபிஐ ரெய்டுக்கு உட்பட்ட டி.கே ராஜேந்திரனை தொடர்ந்து பதவியில் நீடிக்க வைத்திருப்பது இப்படி கோடிக்கணக்கில் கொள்ளையடிக்கத்தான் என்பது இந்த டெண்டர் முறைகேடு மூலம் அம்பலத்திற்கு வந்திருக்கிறது.

88 கோடி ரூபாய் 'டிஜிட்டல் ரேடியோ சிஸ்டம்' டெண்டரில் நடைபெற்றுள்ள இந்த ஊழல் குறித்து, தமிழக மக்களின் பேராதரவுடன் திமுக ஆட்சிக்கு வந்ததும் நிச்சயம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு, ஊழல் செய்தவர்கள் ஊழலுக்கு துணை நின்றவர்கள் அனைவரும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்படுவார்கள் என்று எச்சரிக்க விரும்புகிறேன்" என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

16 mins ago

தமிழகம்

18 mins ago

க்ரைம்

24 mins ago

க்ரைம்

33 mins ago

இந்தியா

29 mins ago

இந்தியா

59 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்