கபடியில் கலக்கும் கூலி தொழிலாளி மகள்!

By எஸ்.கோபு

அவர் பெயர் கதீஜா பீவி. கபடி வீராங்கனை.  மண்டல, மாவட்ட அளவிலான போட்டிகளில் வென்ற இவர், கர்நாடகாவில் நடைபெற்ற  தேசிய அளவிலான பெண்கள் கபடிப்  போட்டியில் பங்கேற்று, தனது அசாத்திய திறமையால் பலரது பாராட்டுகளையும் பெற்று வருகிறார். இதெல்லாம் வழக்கமான செய்திகள். இதில் என்ன அதிசயம் இருக்கிறது என்கிறீர்களா? ஆம். அதிசயம்தான் சார். இவர் ஒரு கூலி தொழிலாளியின் மகள். வறுமை மிகுந்த சூழலில் இருந்து வெளிவந்து, பெரிய சாதனைகளை செய்துகொண்டிருக்கிறார்  கதீஜா(14).

பொள்ளாச்சி அடுத்த ஆனைமலையைச்  சேர்ந்தவர் ஜாகிர் உசேன். இவரது மனைவி ஜரினா பேகம். இவர்களது மகள்தான் கதீஜா பீவி. இனிப்பு கடையில் கூலிக்கு வேலை பார்க்கும் தொழிலாளியான  ஜாகிர் உசேன், சிறு வயதில் கபடி விளையாட்டு வீரர். இதனால், வீட்டில் இருக்கும்போது அடிக்கடி கபடி விளையாட்டு பற்றிப் பேசியுள்ளார். இதனால்,  சிறுவயதிலிருந்தே கதீஜா பீவிக்கு,  கபடி விளையாட்டின் மீது ஆர்வம் ஏற்பட்டுள்ளது.

ஆரம்பக் கல்வி முடித்தவுடன், உயர் கல்விக்காக ஆனைமலை  வி.ஆர்.டி. அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சேர்க்கப்பட்டார் கதீஜா.  தோழிகள் கோகோ, பால் பாட்மிண்டன், வாலிபால் விளையாட்டுகளைத்  தேர்ந்தெடுத்தபோது, கபடியை ஆர்வமுடன் தேர்ந்தெடுத்தார் கதீஜா.

பள்ளி மற்றும் பல்வேறு விழாக்களையொட்டி  நடைபெறும் கபடிப் போட்டியில் பங்கேற்று,  அணிக்காக புள்ளிகளை அள்ளிய அவர், சிறந்த கபடி வீராங்கனையாக அடையாளம் காணப்பட்டார்.  கடும் பயிற்சிகளால் அவரது திறனை மெருகேற்றியது பள்ளி நிர்வாகம்.

தேசிய போட்டிக்கு தேர்வு

இதையடுத்து 'ஸ்கூல் ஃபெடரேசன் ஆஃப் இந்தியா’ (எஸ்ஜிஎப்ஐ) நடத்திய, 14 வயதுக்கு உட்பட்ட தேசிய பெண்கள் கபடி போட்டிக்கு கதீஜா தேர்வு செய்யப்பட்டார். கடந்த ஆகஸ்ட் மாதம் திருப்பூரில் நடைபெற்ற மண்டல அளவிலான தேர்விலும், கரூரில் அக்டோபரில் நடைபெற்ற  மாநில அளவிலான தேர்விலும் வென்ற அவர், தமிழக அணியில் இடம் பிடித்தார்.

கடந்த ஆண்டு டிசம்பர் 23-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை, கர்நாடகாவில் நடைபெற்ற 14 வயதுக்கு உட்பட்ட தேசிய பெண்கள் கபடிப்  போட்டியில், தமிழக அணியில் பங்கேற்று விளையாடினர். இந்த போட்டியில் காலிறுதியில் தமிழகம்-உத்தரப் பிரதேச அணிகள் மோதின. இதில்,  29-28 என்ற புள்ளிக் கணக்கில் தமிழக அணி தோல்வியடைந்தது. எனினும், இந்தப் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கதீஜா பீவி, மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகத்தின், 'கேலோ இந்தியா’  உதவி திட்டத்துக்கு தேர்வாகியுள்ளார். இந்த திட்டத்தில்  நாடு முழுவதுமிருந்து  சிறப்பாக விளையாடும் 1000 விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் தேர்வு செய்யப்படுகின்றனர். தேர்வு செய்யப்பட்ட  வீரருக்கு, விளையாட்டு மற்றும் கல்வி மேம்பாட்டுக்காக ஆண்டுக்கு ரூ.5 லட்சம்  வீதம்,  3 ஆண்டுகளுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. மாணவி கதீஜாவை, பள்ளி தலைமை ஆசிரியர் அழகி மீனாள், ஆசிரியர்கள் ஜெயக்குமார், செந்தில்குமார் மற்றும் மாணவ, மாணவிகள் பாராட்டியுள்ளனர்.

அம்மாவின் தயக்கமும், ஊக்கமும்...

இதுகுறித்து கதீஜா பீவி கூறும்போது, "எனது விளையாட்டுக் கல்வி ஆசிரியர் செந்தில்குமார்தான், எனக்குள் இருந்த திறமையை  அடையாளம் காட்டினார். `உனது உயரமும், வேகமும் உனக்கு கிடைத்த வரம்.  கபடி விளையாட்டில் நீ கண்டிப்பாக சிகரம் தொடுவாய்` என்று கூறி ஊக்கமளித்தார். சிறந்த கபடி வீராங்கனையாக மாற வேண்டுமென்பதே எனது தந்தையின் கனவு. ஆரம்பத்தில்  நான் கபடி விளையாடுவதில் என் அம்மாவுக்கு விருப்பமில்லை. அரை மனதுடன்தான்  போட்டிகளுக்கு அனுப்புவார்.  ஒருமுறை  கரூரில் நடைபெற்ற போட்டியில் பங்கேற்கச்  சென்றபோது, எனது அம்மாவும் உடன் வந்திருந்தார்.

அன்றைய போட்டியில், எதிரணியினரின் உடும்புப் பிடியிலிருந்து மீட்டெழுந்து, வெற்றிக்  கோட்டைத் தொடுவதற்குள், உடலளவில் நான் படும் வேதனைகளைக் கண்டு அம்மா கண்ணீர் வடித்தார்.  அதன் பின்னர், கபடி விளையாட்டு மீதான அம்மாவின் எண்ணம் மாறியது. எனது விளையாட்டுத் திறனை மேம்படுத்த உதவினார். முந்திரி, பாதாம், உலர்திராட்சை, பழச்சாறு, ஆட்டுகால் சூப், சப்பாத்தி என உடலுக்கு வலு சேர்க்கும் ஆகாரங்களை, அட்டவணை போட்டு  தர ஆரம்பித்தார்.

அதிகாலையில்  ஆனைமலையில் இருந்து,  சுங்கம் வரையிலான  சாலையில்  10 கிலோமீட்டர்  நான்  ஓடும்போது, அம்மா  மொபட்டில் பாதுகாப்பாக பின் தொடர்ந்து வருவார். `படி படி` என சொல்லும் பெற்றோர்களுக்கு மத்தியில்,  `கபடி கபடி` என சொல்லும் எனது பெற்றோர்தான் எனக்கு கிடைத்த பெரிய பரிசு.

கபடி விளையாட்டு எனக்கு பதக் கங்களையும், கோப்பைகளையும் மட்டும் பெற்றுத் தரவில்லை. எந்த சூழலையும், நம்பிக்கையுடன் எதிர்கொள்ளும் தைரியத்தையும் வந்துள்ளது.  உறுதியுடன் போராடினால் வாழ்வில் வெல்லலாம் என்ற தன்னம் பிக்கை வந்துள்ளது" என்றார் உறுதியுடன்.

உயரமும், வேகமும் பிளஸ் பாயின்ட்...

"விநாடிக்கு விநாடி வியூகம் மாறும் கபடி விளையாட்டில், வேகமும், விரைவில் முடிவெடுக்கும் திறனும் அவசியம். கதிஜாவின் உயரமும், வேகமும் கபடியில்  அவரை சிறந்த `ரைடராக`  மாற்றும் என எண்ணினேன். கால்களுக்கு வலு சேர்க்க, தினமும் ஓட்டப் பயிற்சி மேற்கொள்வார்.  விளையாட்டில் எதிர் அணியில் அதிக புள்ளிகளை எடுக்கும் வீரர்களை குறிவைத்து,  அவர்களை விரைவில்  `அவுட்` ஆக்கி,  போட்டியை தனது அணியின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதே கதீஜாவின் சிறப்பம்சம்" என்கிறார் பயிற்சியாளர் செந்தில்குமார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கல்வி

2 mins ago

உலகம்

51 mins ago

தமிழகம்

1 hour ago

கல்வி

1 hour ago

ஆன்மிகம்

1 hour ago

ஆன்மிகம்

1 hour ago

ஆன்மிகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்