ஆளுநர் உரை ஃப்ளாப் திரைப்படத்துக்கான ட்ரெய்லர் போன்று உள்ளது: தினகரன் விமர்சனம்

By செய்திப்பிரிவு

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தின் உரை ஃப்ளாப் திரைப்படத்திற்கான ட்ரெய்லர் போன்று உள்ளது என, அமமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டம், ஏற்கெனவே அறிவித்தபடி ஆளுநர் உரையுடன் இன்று காலை 10 மணிக்குத் தொடங்கியது. கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், அனைத்துக் கட்சி எம்எல்ஏக்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மேலும், ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அமமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கலந்துகொண்டார். அவர் சட்டப்பேரவையில் தனியாக அமர்ந்திருந்தார்.

ஆளுநர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வழியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறம்பட நிர்வாகம் நடத்துவதாகப் பாராட்டிப் பேசினார். இதையடுத்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பல அறிவிப்புகளை வெளியிட்டார்.

கூட்டம் முடிந்த பின்பு சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த டிடிவி தினகரன், "ஆளுநர் உரை சம்பிரதாயமான உரை போன்று இருந்தது. ஆளுநர் உரையில் உள்ளதற்கும் தமிழகத்தின் யதார்த்தத்திற்கும் வானத்திற்கும் பூமிக்குமான இடைவெளி உள்ளது. உரையில் 15,000க்கும் மேற்பட்ட கோப்புகளை முதல்வர் பழனிசாமி தீர்த்திருப்பதாக உள்ளது. இதனால், எந்தப் பயனாவது மக்களுக்கு கிடைத்ததா என்பது அனைவருக்கும் தெரியும்.

2017-18 ஆம் ஆண்டு மற்றும் 2018 ஆம் ஆண்டு மார்ச்-செப்டம்பர் வரையில் தமிழகத்திற்கு ரூ.7,214 கோடி ஜிஎஸ்டி வருவாயை மத்திய அரசு இன்னும் தமிழகத்திற்குக் கொடுக்கவில்லை.

அதேபோன்று மத்திய அரசு தமிழ்நாட்டைப் பாதிப்பது போன்று மருத்துவ ஆணையச் சட்ட முன்வடிவு, அணை பாதுகாப்பு மசோதா உள்ளிட்டவற்றைக் கொண்டு வருகின்றனர். முக்கியமாக, மத்திய அரசின் ஆராய்ச்சி மற்றும் பிற நிறுவனங்களை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, சென்னையில் உள்ள உவர்நீர் மீன் வளர்ப்புக்கான மையம், கோயம்புத்தூரிலுள்ள கரும்பு ஆராய்ச்சிக்கன நிறுவனம், திருச்சியிலுள்ள தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனம், ஊட்டியிலுள்ள உருளைக்கிழங்கு ஆராய்ச்சி நிலையம், கோயம்புத்தூரிலுள்ள மை அச்சகம் ஆகியவற்றை மூட முடிவெடுத்துள்ளனர்.

'கஜா' புயல் நிவாரண நிதிக்காக தமிழக அரசு மத்திய அரசுக்கு நன்றி சொல்லியுள்ளனர். ஆனால், கொடுக்கப்பட்ட ரூ.335 கோடி நிதியும் தேசிய பேரிடர் நிதியிலிருந்தே வழங்கியுள்ளனர்.

மேகேதாட்டு உட்பட பல விஷயங்களில் மத்திய அரசை தமிழக அரசு குறை சொல்கிறது. வாராவாரம் தமிழக அமைச்சர்கள் டெல்லி சென்று பல்வேறு திட்டங்களுக்காக நிதி கோரியதாகச் சொல்கின்றனர். ஆனால், ஜிஎஸ்டி நிதியே இன்னும் வரவில்லை என உரையில் உள்ளது.

மாநில அரசின் கொள்கைகள் ஆளுநர் உரையில் தெரியவில்லை. 'கஜா' புயல் பாதிப்பில் தமிழக அரசு சிறப்பாகச் செயல்பட்டதாக பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழக அரசு எவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டது என நமக்குத் தெரியும். உணவு, குடிநீர், மாற்று உடை இல்லாமல் 15 நாட்கள் மக்கள் சாலையில் நின்றனர். முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் அங்கு செல்ல முடியாத நிலைமை இருந்தது.

மொத்தத்தில் ஆளுநர் உரை நேர விரயம். வேலைவாய்ப்பு, தொழில்முனைவோர் குறித்த அறிவிப்புகள் இல்லை. பட்ஜெட்டுக்கான ட்ரெய்லர் போல் இல்லை. இது ஃப்ளாப் திரைப்படத்திற்கான ட்ரெய்லர் போன்று உள்ளது" என டிடிவி தினகரன் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

3 mins ago

விளையாட்டு

57 mins ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

க்ரைம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தொழில்நுட்பம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்