ஒரு மிகப்பெரிய பொறுப்பிற்கு நான் உடனடியாக வந்துவிடவில்லை, படிப்படியாகத்தான் வளர்ந்து வந்திருக்கின்றேன்: ஸ்டாலின்

By செய்திப்பிரிவு

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கழக இளைஞரணி அறக்கட்டளை சார்பில், சங்கரன்கோவிலில் நடைபெற்ற பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் போட்டிகளில் பங்கேற்று வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார்.

 

நிகழ்ச்சியில் அவர் உரையாற்றும் போது பேசியதாவது:

 

பேரறிஞர் பெருந்தகை அறிஞர் அண்ணா அவர்களுடைய பிறந்த நாள் - தலைவர் கலைஞர் அவர்களுடைய பிறந்த நாள் என்பது ஏதோ ஒரு கட்சிக்கு மட்டும் பயன்படக்கூடாது, தனிப்பட்ட அரசியலுக்கும் அதை பயன்படுத்திக் கொள்ளக்கூடாது அது இளைஞர் சமுதாயத்திற்கும் மாணவர் சமுதாயத்திற்கும் அவர்களுடைய பிறந்த நாள் பயன்பட வேண்டும் என்ற எண்ணத்தோடு இளைஞர் அணியின் சார்பில் அதற்கென்று ஒரு அறக்கட்டளையை உருவாக்கி நெல்லையில் நடைபெற்ற இளைஞர் அணியினுடைய மாநில மாநாட்டில் அதற்காக ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அந்த தீர்மானத்தின் அடிப்படையில் அந்த மாநாட்டிற்காக வசூலான தொகையில் செலவு போக மீதம் இருக்கக்கூடிய தொகையை வங்கியில் டெபாசிட் செய்து அதன் மூலமாக வரக்கூடிய வட்டித்தொகையை பயன்படுத்தி மாணவச் செல்வங்களுக்கு – இளைஞர்களுக்கு போட்டிகளை நடத்தி அதன் மூலமாக பரிசுகள் வழங்கிடவேண்டும், ஊக்கத் தொகை வழங்கி அவர்களை உற்சாகப்படுத்த வேண்டும் என்ற அந்த எண்ணத்தோடு அந்தப் பணியை ஏறக்குறைய ஒரு 11 ஆண்டு காலமாக இளைஞர் அணி செய்துகொண்டிருக்கின்றது. அந்த வகையில் இந்த நிகழ்ச்சியும் இந்த ஆண்டு சங்கரன்கோவில் பகுதியில் நடைபெற்று கொண்டிருக்கிறது...

 

திராவிட முன்னேற்றக் கழகத்தில் இன்றைக்கு தலைவர் என்கின்ற அந்தப் பொறுப்பில் இருந்து பணியாற்றிக் கொண்டிருந்தாலும் ஆனால், இளைஞர் அணியினுடைய சார்பில் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கின்றேன் என்று சொன்னால், என்னுடைய வளர்ச்சி என்பது திடீரென்று ஒரு மிகப்பெரிய பொறுப்பிற்கு நான் உடனடியாக வந்துவிடவில்லை, படிப்படியாகத்தான் வளர்ந்து வந்திருக்கின்றேன். அதிலும் என்னுடைய வளர்ச்சி என்பது, எப்படி தலைவர் கலைஞர் அவர்கள் ஒரு மாணவனாக தன்னுடைய பொது வாழ்க்கையை தொடங்கினாரோ, அதேபோல் ஒரு பள்ளிக்கூடத்தில் ஒரு மாணவனாக இருந்த போது கோபாலபுரத்தில் இளைஞர் அமைப்பு என்ற ஒரு அமைப்பு மூலமாக பொது வாழ்க்கையை தொடங்கி அதற்குப் பிறகு இளைஞர் அணியில் பொறுப்பை ஏற்றுக்கொண்டு செயலாளராக இருந்து இன்றைக்கு படிப்படியாக வளர்ந்து வந்திருக்கின்றேன் என்று சொன்னால், இந்த அளவிற்கு நான் உயர்ந்து வந்திருக்கின்றேன் என்பதற்கு காரணம், அதற்கு முழுக்காரணம் இளைஞர் அணியில் அந்தப் பொறுப்பில் இருந்ததுதான். இதை நான் சொல்வதற்குக் காரணம் படிப்படியாகத் தான் வளர்ச்சி இருக்க வேண்டும். இன்றைக்கு நீங்கள் இளைஞர்களாக இருக்கின்றீர்கள் அப்படி இருக்கையில் எத்தனையோ பேர் படிப்படியாக வளர்ந்து வளர்ச்சிப் பெற்று பல பொறுப்புகளில் வரக்கூடியவர்கள்தான் நீங்கள், ஆகவே, அதனை நினைவுபடுத்துவதற்குத் தானே தவிர வேறல்ல. இன்னும் வெளிப்படையாகச் சொல்ல வேண்டும் என்று சொன்னால் எல்லோரும் சொல்லுவார்கள். ‘பிறந்த வீடு - புகுந்த வீடு’ என்று. என்னதான் புகுந்த வீட்டிற்கு போனாலும் அவர்கள் பிறந்த வீட்டிற்கு வருகின்ற போது எவ்வளவு மகிழ்ச்சியடைவார்கள், அப்படி மகிழ்ச்சியடைகின்ற போது அந்த பிறந்த வீட்டில் இருக்கின்றவர்களும் எப்படி மகிழ்ச்சி அடைவார்கள் என்பதை யாரும் மறுத்திட முடியாது. அதேபோலதான், இன்றைக்கு நான் எவ்வளவு பொறுப்பிற்கு சென்றாலும் இளைஞர் அணி என்று வருகின்றபோது பிறந்த வீட்டிற்கு வந்திருக்கக்கூடிய அந்த உணர்வைத்தான் நான் பெறுகின்றேன். திராவிட முன்னேற்றக் கழகத்தில் எத்தனையோ துணை அமைப்புக்கள் இருக்கின்றன. இலக்கிய அணி, விவசாய அணி, மாணவர் அணி, மருத்துவர் அணி, மகளிர் அணி, தொழிலாளர் அணி, தொண்டர் அணி, வழக்கறிஞர் அணி என எத்தனையோ அணிகள் இருக்கின்றது. எத்தனையோ அணிகள் இருந்தாலும் முதல் இடத்தில் இருக்கக்கூடிய ஒரு அணி இளைஞர் அணி.

 

அந்த இளைஞர் அணி என்பது என்னைப் பொறுத்தவரையில் அதை இளைஞர் அணி என்றுகூட சொல்லமாட்டேன், கழகத்தினுடைய இதய அணி என்று தான் சொல்லத்தோன்றுகின்றது. ஏனென்றால் இளைஞர்கள் தான் இன்றைக்கு இருக்கக்கூடிய மாணவர்கள்தான் நாளைக்கு எதிர்காலத்தில் இருக்கக்கூடிய தலைவர்களாக வரக்கூடியவர்கள். ஆகவே, அந்த உணர்வோடுதான் இதைக்குறிப்பிட்டுச் சொன்னேனே தவிரவேறல்ல.

 

எப்படி தலைவர் கலைஞர் அவர்கள் 14 வயதில், தான் பிறந்த திருவாரூர் நகரத்தில், திருவாரூரின் தெற்கு வீதியிலே நம்முடைய தாய்மொழியாய் இருக்கக்கூடிய அழகுத் தமிழ் மொழிக்கு ஆபத்து வந்த நேரத்தில் அதை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும் என்று சொல்லி, அங்கிருக்கக்கூடிய மாணவர்களை ஒன்று திரட்டி திருவாரூர் வீதியில் ஊர்வலத்தை நடத்துகின்ற போது கையில் புலி – வில் – கயல் பொதிந்திருக்கக்கூடிய தமிழ்க் கொடியேந்தி ஏந்திக்கொண்டு, “ஓடிவந்த இந்திப் பெண்ணே கேள்! நீ தேடிவந்த கோழை உள்ள நாடு இதுவல்லவே” என்று போர்பரணி பாடி அதன்மூலமாக பொதுவாழ்வில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு ஒரு மாபெரும் தலைவராக மறைந்தும் மறையாமல் இன்றைக்கும் நம்முடைய உள்ளத்தில் வாழ்ந்து கொண்டிருக்கக்கூடிய ஒரு தலைவராக விளங்கிக் கொண்டிருக்கக்கூடிய நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள்.

 

அப்படிப்பட்ட தலைவர் கலைஞர் அவர்களுடைய வரலாற்றை, அப்படிப்பட்ட தலைவரை உருவாக்கித் தந்திருக்கூடிய அண்ணாவின் சரித்திரத்தை நீங்கள் எல்லாம் அறிந்துகொள்ள வேண்டும், புரிந்து கொள்ள வேண்டும், உள்ளத்திலே பதிய வைத்துக்கோள்ள வேண்டும் என்பதற்காகத்தான் இதுபோன்ற போட்டிகளை நாம் தொடர்ந்து நடத்தி வந்து கொண்டிருக்கின்றோம். அந்த வகையில், நீங்கள் அனைவரும் பங்குபெற்று அதற்குரிய பரிசை இன்றைக்கு நீங்கள் பெற இருக்கின்றீர்கள். அப்படிப்பட்ட உங்களுக்கெல்லாம் என்னுடைய வாழ்த்துகளை நான் மிகுந்த மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன். வாழ்த்துச் சொல்லுகின்ற அதேநேரத்தில் அரசியல் பேசவேண்டிய அவசியம் இல்லை. அதேநேரத்தில் மாணவர்களிடத்தில் அரசியல் பேசாமல் போனால் அதுவும் சரியாக இருக்காது.

 

ஏனென்றால் இன்றைக்கு அரசியல்வாதிகளாக இருக்கக்கூடிய எங்களைவிட மாணவர் சமுதாயத்தில் இளைஞர் சமுதாயத்தில் இருக்கக்கூடிய உங்களுக்குத்தான் இன்னும் அதிகமாக அரசியலை தெரிந்துகொள்ளக்கூடிய வாய்ப்பு வந்து சேர்கின்றது என்பதை நாம் மறுத்திட – மறைத்திட முடியாது. ஆகவே, நாட்டில் நடைபெறக்கூடிய சூழ்நிலைகளை எல்லாம் பார்த்துக் கொண்டிருக்கின்றீகள். இன்றைக்கு மத்தியில் ஒரு ஆட்சி, மாநிலத்தில் ஒரு ஆட்சி. இந்த இரண்டு ஆட்சிகளும் எந்த நிலையில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது என்பதை நீங்கள் புரிந்துகொண்டாக வேண்டும். தனிப்பட்ட முறையில் எதையும் நான் விமர்சித்துப் பேச விரும்பவில்லை ஆட்சியினுடைய தன்மையை இன்றைக்கு நீங்கள் அறிந்து கொண்டு புரிந்து கொண்டு அதற்கு ஏற்ற வகையில் வரக்கூடிய காலக்கட்டத்தில் நாம் எந்த நிலையில் இருந்திட வேண்டும் என்பதை நீங்கள் முடிவு செய்யக்கூடிய நிலையில் நிச்சயமாக உங்களுடைய உணர்வு இருக்குமென்று நான் நம்புகின்றேன். அதை மனதில் வைத்துக்கொண்டு அதற்கு ஏற்ற வகையில் நீங்கள் செயல்பட வேண்டும் உங்களை எல்லாம் நான் இந்த நேரத்தில் அன்போடு கேட்டுக்கொண்டு. பரிசு பெற்றிருப்பவர்களுக்கு வாழ்த்து சொல்லுவதற்கு மட்டுமல்ல, அந்தப் பரிசுகளை பெற முடியாத நிலையில் இருக்கும் மாணவச் செல்வங்களுக்கு வாழ்த்து சொல்லவேண்டியது என்னுடைய கடமை.

 

இவ்வாறு அவர் பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

4 hours ago

உலகம்

5 hours ago

மேலும்