புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்வது உட்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி; அரசு ஊழியர், ஆசிரியர் வேலைநிறுத்தம் தொடங்கியது: தமிழகம் முழுவதும் 8 லட்சம் பேர் பங்கேற்பு

By செய்திப்பிரிவு

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்துசெய்வது, 21 மாத நிலுவைத்தொகையை வழங்குவது உள்ளிட்ட 9 அம்ச கோரிக் கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ சார்பில் அறிவிக்கப்பட்டிருந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நேற்று தொடங்கியது. இதில் 8 லட்சம் பேர் பங்கேற்றுள்ளதாக ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். போராட் டம் காரணமாக அரசு அலுவலகங் கள், அரசுப் பள்ளிகளில் பணிகள் முடங்கின.

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவது, இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை சரிசெய்வது, 7-வது ஊதி யக்குழு ஊதியத்தின் 21 மாத கால நிலுவைத் தொகையை வழங்குவது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை நிறை வேற்றக்கோரி அரசு ஊழியர்கள், ஆசிரி யர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ அமைப்பு தொடர்ந்து போராடி வருகிறது. தங்கள் கோரிக்கை களை நிறைவேற்றாவிட்டால் ஜனவரி 22-ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவ தாக இந்த அமைப்பு அறிவித்திருந்தது.

அதன்படி, ஜாக்டோ ஜியோ அமைப் பின் சார்பில் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நேற்று தொடங் கியது. சென்னை உட்பட அனைத்து மாவட் டங்களிலும் தாலுகா மற்றும் மாவட்ட தலைமையகங்களில் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் போராட்டத்தில் ஈடுபட்ட னர். சென்னையில் தமிழக அரசின் பல்வேறு துறைகளின் தலைமை அலுவலகங்கள் அமைந்துள்ள சேப்பாக்கம் எழிலகம் கட்டிடம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஜாக்டோ ஜியோ உயர்மட்டக் குழு ஒருங்கிணைப்பாளர்கள் சுப்ரமணி யன், மு.அன்பரசு, மாயவன், எஸ்.சங்கரப் பெருமாள் ஆகியோர் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் அரசு ஊழியர்கள், அரசு பள்ளி ஆசிரியர்கள் திரளாக கலந்துகொண்டனர். இடைநிலை ஆசிரியர்களும் பட்டதாரி ஆசிரியர்களும் அதிகளவில் வந்திருந்தனர்.

ஆர்ப்பாட்டத்தின்போது செய்தியாளர் களிடம் பேசிய ஒருங்கிணைப்பாளர் மாயவன், “எங்களின் நியாயமான கோரிக் கைகளை அரசிடம் வலியுறுத்தவே இந்த போராட்டம். இதை தடுக்க அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. போராட்டத்துக்கு தடை விதிக்க வேண் டும் என்ற அரசின் கோரிக்கையை உயர் நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. இதிலி ருந்தே எங்களின் கோரிக்கை 100 சதவீதம் நியாயமானது என்பதை உணர்ந்து கொள்ளலாம். போராட்டத்தை ஒடுக்கும் வகையில் தலைமைச் செயலர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதற்கெல்லாம் அரசு ஊழியர்கள் பயப்பட மாட்டார்கள். புதன் கிழமை (இன்று) மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம். தமிழக அரசு பிடிவாதம் பிடிக்காமல் அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் தொடர்பாக ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளை பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும்” என்றார்.

மற்றொரு ஒருங்கிணைப்பாளரான சுப்ரமணியன் கூறும்போது, “இந்த போராட்டத்தால் மாணவர்களை எந்த வகையிலும் பாதிக்க விடமாட்டோம். கூடுதல் வகுப்புகள் நடத்துவோம். தமிழகம் முழுவதும் 8 லட்சம் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் காலவரையற்ற போராட் டத்தில் ஈடுபட்டுள்ளனர். எங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை போராட்டத்தைக் கைவிடமாட்டோம்” என்றார். ஜாக்டோ ஜியோ சென்னை மாவட்ட தலைமை ஒருங்கிணைப்பாளர் கள் டேனியல் தனுசிங், கே.சாந்தகுமார், தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரி யர்கள் கழக நிர்வாகி அருணா உள்ளிட் டோரும் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.

அரசு ஊழியர்களின் போராட்டம் காரண மாக எழிலகத்தில் உள்ள அரசின் பல்வேறு துறைகளின் தலைமை அலுவலகங்களில் பணிகள் முடங்கின. ஊழியர்கள் இல்லாத தால் அலுவலக அறைகள் வெறிச்சோடிக் கிடந்தன. தலைமைச் செயலகத்தில் ஒருசில சங்கங்களே போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்திருந்ததால் அங்கு பணிகளில் எவ்வித பாதிப்பும் ஏற்பட வில்லை.

சென்னையைப்போல் ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் அதிக எண்ணிக்கையில் போராட்டத்தில் ஈடுபட்டதால் அலுவலக பணிகள் முற்றிலும் முடங்கின. மக்கள் அதிக எண்ணிக்கையில் வருகை தரும் தாலுகா அலுவலகங்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் வெறிச்சோடின. அரசு தொடக்கப்பள்ளி, நடுநிலைப் பள்ளிகளில் சுமார் 80 சதவீத ஆசிரியர்களும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஏறத்தாழ 60 சதவீதம் பேரும் பணிக்குச் செல்லவில்லை என ஆசிரியர் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். ஆசிரியர்கள் வராத பள்ளிகளில் தற்காலிக ஏற்பாடாக பகுதிநேர ஆசிரியர்கள், சத்துணவு அமைப்பாளர்கள் மூலமாக வகுப்புகள் நடைபெற்றன.

அமைச்சர் வேண்டுகோள்

இதற்கிடையே, நேற்று சென்னை போரூரை அடுத்த கொளப்பாக்கம் அரசு பள்ளி விழாவில் பங்கேற்ற பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறும்போது, “மாண வர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு போராட்டத்தை ஆசிரியர்கள் கைவிட வேண்டும். விரைவில் பொதுத் தேர்வு நடைபெற உள்ள சூழலில் ஆசிரி யர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டால் அது மாணவர்களைப் பெரிதும் பாதிக்கும். எனவே, ஆசிரியர்கள் மனிதநேயத் தோடு போராட்டத்தை திரும்பப் பெற்று உடனடியாக பணியில் ஈடுபட வேண்டும் என்று அரசு சார்பில் வேண்டுகோள் விடுக்கிறேன்" என்றார்.அரசு அலுவலகங்கள், பள்ளிகளில் பணிகள் முடங்கின

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 mins ago

இந்தியா

17 mins ago

இந்தியா

31 mins ago

இந்தியா

58 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

3 hours ago

உலகம்

4 hours ago

மேலும்