பன்னாட்டு நிறுவனங்களின் பொருட்கள் பிளாஸ்டிக் உறைகளில் அடைத்து விற்பதற்கு தடை விதிக்க வேண்டும்: ராமதாஸ்

By செய்திப்பிரிவு

பன்னாட்டு நிறுவனங்கள் உற்பத்திச் செய்யும் பொருட்கள் பிளாஸ்டிக் உறைகளில் அடைத்து விற்பதற்கு தடை விதிக்க வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக ராமதாஸ் இன்று (சனிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "தமிழ்நாட்டில் ஒருமுறை மட்டும் பயன்படுத்தி தூக்கி வீசக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடை முழு அளவில் நடைமுறைக்கு வந்திருக்கிறது. இதற்கு மக்களும் முழுமையான ஆதரவு அளித்து, பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை கைவிட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

மக்களுக்கு எல்லையில்லா நன்மைகளைத் தரும் இயற்கைக்கும், சுற்றுச்சூழலுக்கும் பிளாஸ்டிக் பொருட்களை விட மோசமான எதிரி இருக்க முடியாது. சோலைவனங்களையும் பாலைவனங்களாக மாற்றும் வலிமை நெகிழிகளுக்கு உண்டு. மக்கும் தன்மையற்ற நெகிழிகள் மண்ணில் புதைவதால் அதன் தன்மையை மாற்றுவதுடன், மழை நீர் பூமிக்குள் இறங்காமல் தடுக்கிறது. பிளாஸ்டிக் குப்பைகளை  உட்கொள்வதால் மாடுகள், நாய்கள் உள்ளிட்ட விலங்கினங்கள் மூச்சுக்குழாயில் அடைப்பு ஏற்பட்டு உயிரிழக்கின்றன. சூடான உணவுகளை பிளாஸ்டிக் பைகளில் அடைக்கும்போது உருவாகும் வேதிவினை காரணமாக, அந்த உணவை உட்கொள்வோருக்கு புற்றுநோய் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன.

அதனால் தான் பிளாஸ்டிக்கை மனிதகுலத்தின் எதிரி என்று நான் தொடர்ந்து விமர்சித்து வருகிறேன். பிளாஸ்டிக் இல்லாத தமிழகத்தை உருவாக்குவதே எனது முதன்மைக் கனவு ஆகும். பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்ய வேண்டும் என்று பசுமைத் தாயகம் அமைப்பு உருவாக்கப்பட்ட நாளில் இருந்து வலியுறுத்தி வருகிறேன். 2002 ஆம் ஆண்டு ஜூலை 25 ஆம் தேதி பசுமைத்தாயகம் நாளையொட்டி சென்னையில் பிளாஸ்டிக் எதிர்ப்பு பரப்புரையை மேற்கொண்டேன். பிளாஸ்டிக்கின் தீமைகள் குறித்து மக்களிடம் விழிப்பை ஏற்படுத்துவதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரட்டி வரப்பட்ட பிளாஸ்டிக் குப்பைகளை சென்னையில் ஓரிடத்தில் கொட்டி, பாதுகாப்பாக அகற்றினோம். 2002 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளில் பசுமைத் தாயகம் நாளையொட்டி சென்னை தியாகராயர் நகரில் கடை, கடையாக ஏறி பிளாஸ்டிக் எதிர்ப்பு துண்டறிக்கைகளை வழங்கி வணிகர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினேன். கடந்த 20 ஆண்டுகளாக நெகிழிப் பொருட்களுக்கு எதிராக பாமக தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்துள்ளது.

2015 ஆம் ஆண்டு ஜூன் 5 உலகச் சுற்றுச்சூழல் நாளில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்க வலியுறுத்தி பசுமைத் தாயகம் அமைப்பின் சார்பில் தமிழகம் முழுவதும் விழிப்புணர்வு பரப்புரை நடத்தப்பட்டது. அதன்பின் 3 ஆண்டுகள் கழித்து 2018 ஆம் ஆண்டு ஜூன் 5 உலகச் சுற்றுச்சூழல் நாளில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசு தடை விதித்தது. அந்தத் தடை புத்தாண்டு முதல் நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், அனைத்துத் தரப்பினரும் அதற்கு ஒத்துழைப்பு அளிப்பது ஆனந்தமளிக்கிறது. பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்திப் பழகிப்போன மக்களுக்கு இது தொடக்கத்தில் சற்று சிரமத்தைக் கொடுத்தாலும் சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காக இதை மகிழ்ச்சியுடன் மக்கள் ஏற்றுக்கொள்கின்றனர்.

தமிழகத்தில் ஒருமுறை பயன்பாட்டு பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பது மக்களிடம்  வரவேற்பைப் பெற்றுள்ள போதிலும், பன்னாட்டு நிறுவனங்கள் உற்பத்திச் செய்யும் பொருட்கள் இன்னும் பிளாஸ்டிக் உறைகளில் அடைத்து விற்கப்படுவது சற்று கவலையளிக்கிறது. இதையும் மாற்றி தமிழகத்தில் பிளாஸ்டிக்குக்கு முழுமையான தடை விதிக்கப்படும் நாளே எனது கனவு நிறைவேறும் நாளாக இருக்கும்.

அதேபோல், சென்னையில் அனைத்து வகையான போக்குவரத்து முறைகளையும் ஒருங்கிணைத்து, சென்னை ஒருங்கிணைந்த பெருநகரப் போக்குவரத்துக் குழுமச் சட்டம் மற்றும் அதற்கான விதிகள், வரும் 16 ஆம் தேதி அறிவிக்கை  செய்யப்படும் என்று ஆளுநர் உரையில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதுவும் பாமகவின் கனவுத் திட்டம் தான். 2008 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி நான் வெளியிட்ட, சென்னை பெருநகருக்கான மாற்றுப் போக்குவரத்துத் திட்டம் என்ற தலைப்பிலான ஆவணத்தில் சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த பேருந்துகள், தொடர்வண்டிகள், பெருநகரத் தொடர்வண்டிகள், பறக்கும் தொடர்வண்டிகள் ஆகியவற்றை ஒருங்கிணைத்தும், நடைபாதை மற்றும் மிதிவண்டி போக்குவரத்தை மேம்படுத்தியும் ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்துக் குழுமத்தை அமைக்க வேண்டும் என்று பாமக வலியுறுத்தியிருந்தது. அத்திட்டத்திற்கு தான் பேரவையில் ஆளுநர் உரை அறிவிப்புகள் மூலம் தமிழக அரசு செயல்வடிவம் கொடுத்திருக்கிறது.

இந்தத் திட்டத்தையும், அதிவிரைவுப் பேருந்துப் பாதை திட்டம் (பி.ஆர்.டி.எஸ்), சென்னை மாநகர நீர்வழிப் பாதைகளை மேம்படுத்தியும், கடல்வழிப் பாதைகள் வழியாகவும் நீர்வழிப் போக்குவரத்தை தொடங்குதல் உள்ளிட்ட திட்டங்களையும் தேர்தல் அறிக்கைகளில் பாமக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்தத் திட்டங்களும் செயல்வடிவம் பெறும்போது சென்னை போக்குவரத்து நெரிசல் இல்லாத நகரமாக மாறும். பிளாஸ்டிக் குப்பைகளும், போக்குவரத்து நெரிசலும் இல்லாத சென்னை மாநகரம் உருவாகும் நாளே என் இருபதாண்டு கனவு நிறைவேறும் நாளாக அமையும்" என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

15 mins ago

தமிழகம்

26 mins ago

ஓடிடி களம்

43 mins ago

விளையாட்டு

50 mins ago

கல்வி

1 hour ago

உலகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

கல்வி

3 hours ago

ஆன்மிகம்

3 hours ago

ஆன்மிகம்

3 hours ago

ஆன்மிகம்

3 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்