கத்திப்பாரா பாலத்தின் குறுக்கே சங்கிலியால் பிணைத்துப் போராட்டம் நடத்திய வழக்கு: இயக்குநர் கவுதமனை  விடுவிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு

By செய்திப்பிரிவு

கிண்டி கத்திப்பாரா பாலத்தின் குறுக்கே சங்கிலியால் பிணைத்துப் பூட்டு போட்டு போராட்டம் நடத்திய வழக்கில் இயக்குநர் கவுதமனை விடுவிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13-ம் தேதி அன்று காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி திரைப்பட இயக்குநர் கவுதமன் தலைமையில் மாணவர்களும், இளைஞர்களும் சென்னை கிண்டியில் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். அப்போது கிண்டி கத்திப்பாரா சந்திப்பு மேம்பாலத்தின் குறுக்கே இரும்புச் சங்கிலியால் பிணைத்து பூட்டுப்போட்டு மறித்து வாகனங்கள் செல்ல விடாமல் போராட்டக்காரர்கள் தடுத்தனர்.

இதனால் பூட்டைத் திறந்து சங்கிலியை விடுவிக்கும்வரை போக்குவரத்து தடைப்பட்டது. இதையடுத்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து, அவர்களைக் கைது செய்தனர். பின்னர், இந்த வழக்கின் குற்றப்பத்திரிகையை ஆலந்தூர் குற்றவியல் நீதிமன்றத்தில் போலீஸார் தாக்கல் செய்தனர்.

இந்த குற்றப்பத்திரிகை நகலை பெற்றுக்கொண்ட இயக்குநர் கவுதமன், தன் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரம் இல்லாததால், வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்று மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை கடந்த நவம்பர் மாதம் ஆலந்தூர் குற்றவியல் நீதிமன்ற நடுவர் தள்ளுபடி செய்தார்.

இதை எதிர்த்து இயக்குநர் கவுதமன், சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி வி.பார்த்திபன், குற்றவியல் நீதிமன்ற உத்தரவு சரியே. கவுதமனை வழக்கில் இருந்து விடுவிக்க முடியாது என்று கூறி, மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

மேலும், இந்தப் போராட்டத்தை சுதந்திரப் போராட்டத்துடன் ஒப்பிட்டு இயக்குநர் கவுதமன் தரப்பில் வாதிடப்பட்டதை ஏற்க மறுத்த நீதிபதி, இந்திய அரசியல் சாசனம் போராட அனுமதி வழங்கியுள்ள போதும் அதற்கும் நியாயமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும், முறையான அனுமதியைப் பெறாமல், சட்டவிரோதமாக போராட்டம் நடத்தி மக்களுக்கு அசவுகர்யத்தை ஏற்படுத்த யாருக்கும் உரிமையில்லை எனவும் தன் உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வேலை வாய்ப்பு

10 mins ago

தமிழகம்

49 mins ago

இந்தியா

58 mins ago

தமிழகம்

43 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்