சக்திகாந்த தாஸ் நியமனம்: பொருளாதாரத்தை நிரந்தரமாக நாசமாக்கும் முயற்சி; வைகோ கண்டனம்

By செய்திப்பிரிவு

ரிசர்வ் வங்கி செயல்பாடுகளில் மத்திய அரசு தலையிடுவது நாட்டின் கருவூலத்தை நாசமாக்கும் முயற்சி என, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக வைகோ இன்று (வியாழக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி ஆர்எஸ்எஸ் அமைப்பின் பொருளாதாரப் பிரிவான சுதேசி ஜாக்ரன் மண்ஞ்ச் தலைவர் அஸ்வனி மகாஜன், இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஆதரவு தரும் வகையில் அரசாங்கத்துடன் இயைந்து செல்ல வேண்டும். முடியவில்லை எனில் பதவியை ராஜினாமா செய்துவிட்டுப் போக வேண்டும் என்று உத்தரவிடும் வகையில் மிரட்டல் விடுத்தார்.

மேலும், அதிக வட்டி விகிதம் சிறு வணிகர்களைக் கடுமையாக பாதிப்பதால், லட்சக்கணக்கான வேலைகளைக் காக்க நிவாரணம் வழங்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது. ரிசர்வ் வங்கி இந்தியாவின் யதார்த்தத்தைக் கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் விடாப்பிடியாக நிற்கிறது என்று தெரிவித்த அஸ்வினி மகாஜன், சுமார் 3 லட்சத்து 52 ஆயிரத்து 784 கோடி ரூபாய் மதிப்பிலான ரிசர்வ் வங்கி கருவூலப் பணத்தின் உபரியை மத்திய அரசு எடுத்துக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்றும், அதன் மூலம் முதலீடு செய்யப்பட்டு பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க முடியும் என்று ரிசர்வ் வங்கிக்கு 'ஆலோசனை' கூறினார்.

நாட்டின் தன்னிச்சையான அமைப்புக்கள் மீது ஆர்எஸ்எஸ் சங்பரிவார் கூட்டம் ஆதிக்கம் செலுத்துகிறது. பாஜக அரசு அதனை நிறைவேற்றும் வகையில் எதேச்சாதிகாரப் போக்கில் செயல்படுகிறது என்பதற்கு ரிசர்வ் வங்கி மீது நடத்தப்படுகின்ற தாக்குதல் வெள்ளிடை மலையாகத் தெரிகிறது.

'வாராக் கடன் பிரச்சினையைத் தீர்ப்பது, கடன் வழங்குவதில் 11 பொதுத்துறை வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கியிடம் உள்ள உபரிக் கையிருப்பை அரசுக்கு மாற்றுவது, பணப்பட்டுவாடாவைக் கண்காணிக்க தனி ஒரு ஒழுங்குமுறை அமைப்பை நிறுவி ரிசர்வ் வங்கியின் அதிகாரத்தைக் குறைப்பது' போன்றவற்றில் பாஜக அரசின் உத்தரவுகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பான மோதல்தான் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் உர்ஜித் படேல் தனது பதவியை விட்டு வெளியேறுவதற்கு அடிப்படைக் காரணங்கள் ஆகும்.

ஆர்பிஐ சட்டத்தின் கீழ் மத்திய அரசுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, ரிசர்வ் வங்கியின் செயல்பாடுகளில் தலையிட்டு சாத்தியமான தீர்வுகள் பரிந்துரைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. ஆர்எஸ்எஸ் சங் பரிவார் கூட்டத்தின் தீவிர சிந்தனையாளர்களான ஆடிட்டர் குருமூர்த்தி, சதீஷ் மராத்தே, சச்சின் சதுர்வேதி போன்றோரை பொருளாதார நிபுணர்கள் என்று ரிசர்வ் வங்கியின் இயக்குநர் குழுவில் பாஜக அரசு திணித்து இருக்கிறது.

பாஜக அரசும், ஆர்எஸ்எஸ் சங் பரிவாரும் ரிசர்வ் வங்கியை தங்கள் ஏகபோக ஆதிக்க அதிகாரத்தை செயல்படுத்தும் வகையில் கைப்பற்ற முனைந்ததை சகிக்க முடியாமல்தான் முன்பு ரகுராம் ராஜனும், தற்போது உர்ஜித் படேலும் ரிசர்வ் வங்கி ஆளுநர் பொறுப்பில் நீடிக்க முடியாமல் வெளியேறிவிட்டனர்.

ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தால் அதன் துணை ஆளுநர்தான் அப்பொறுப்பை ஏற்க வேண்டும். பாஜக அரசு எந்தவிதமான மரபுகளையும், விதிகளையும் பின்பற்றுவது இல்லை என்பதில் விடாப்பிடியாக இருக்கிறது. எனவேதான் ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக சக்திகாந்த் தாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

2014 இல் மோடி அரசு பொறுப்பேற்றபோது, நிதி அமைச்சகத்தின் வருவாய்த் துறையில் சக்திகாந்த தாஸ் நியமிக்கப்பட்டார். அதன்பின்னர் பொருளாதார விவகாரத்துறை செயலாளராக பணியாற்றி, 2017 மே மாதம் ஓய்வு பெற்றார். பிரதமர் மோடிக்கு நெருக்கமானவராகக் கருதப்படும் சக்திகாந்த தாஸ், தற்போது நடைபெற்று வரும் ஜி.20 மாநாட்டில் மத்திய அரசின் சார்பில் கலந்துகொள்ள அனுப்பப்பட்டார்.

தற்போது ரிசர்வ் வங்கியின் 25 ஆவது ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ரிசர்வ் வங்கியின் ஆளுநருக்குக்கூடத் தெரியாமல் மோடி அரசால் அறிவிக்கப்பட்ட பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் பின்னணியில் மூளையாக இருந்து செயல்பட்டவர் சக்திகாந்த தாஸ். பண மதிப்பு இழப்பால் கறுப்புப் பணம் ஒழிக்கப்படும், கள்ள நோட்டுகள் ஒழியும், பண மதிப்பு நீக்கத்தால் மின்னணு பரிமாற்றம் அதிகரிக்கும் என்றெல்லாம் பத்திரிகை, ஊடகங்களில் பண மதிப்பு இழப்பு முடிவை ஆதரித்துப் பேசியவர் இவர்.

பண மதிப்பு  நீக்க நடவடிக்கையால் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டபோது, வங்கியின் முன் மணிக்கணக்கில் மக்கள் காத்துக் கிடந்தபோது ஒரு நாளில் ரூ.4500 எடுக்கலாம் என்ற முடிவை ரூ.2000-ம் தான் எடுக்க முடியும் என்று மாற்றியவர். வங்கியில் பழைய நோட்டுகளை மாற்ற வருகிறவர்களின் கையில் மை வைக்க வேண்டும். அப்போதுதான் ஒருவரே திரும்பத் திரும்ப வங்கிக்கு வருவது தடுக்கப்படும் என்று ஆலோசனை சொன்ன மகானுபவர் இவரே.

சுயேச்சையாக இயங்க வேண்டிய ரிசர்வ் வங்கியை ஆர்எஸ்எஸ் காவிப்படை கைப்பற்றி உள்ள நிலையில், சக்திகாந்த தாஸ் ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கிறார். நாட்டின் கருவூலத்தைச் சூறையாடும் வகையில் மத்திய பாஜக அரசு சதித் திட்டங்களைத் தீட்டுவதும், கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவாக ரிசர்வ் வங்கி விதிமுறைகளை மாற்றுவதும், பொதுத்துறை வங்கிகளை சீர்குலைப்பதும் மிகப்பெரிய பொருளாதார அழிவை நோக்கி நாடு தள்ளப்படும் ஆபத்தை உருவாக்கி வருகிறது.

இந்திய நாட்டின் 120 கோடி மக்களின் காக்கும் கருவூலமான ரிசர்வ் வங்கியை சீர்குலைத்து, நாட்டின் பொருளாதாரத்தை நிரந்தரமாக நாசமாக்கும் அக்கிரமமான முயற்சியில் நரேந்திர மோடி அரசு ஈடுபட்டுள்ளது. 2019 மே மாதம் பாஜக தலைமையிலான அரசு அமைய ஒரு சதவீதம்கூட வாய்ப்பு இல்லாத நிலையில், போகிற போக்கில் இந்த அழிவு வேலையில் மோடி அரசு ஈடுபட்டுள்ளது.

நரேந்திர மோடியின் கைப்பாவையான சக்திகாந்த தாஸ் அந்தப் பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும். ரிசர்வ் வங்கியின் நிர்வாக ஆலோசனைக் குழுவில் கடந்த ஓராண்டில் நியமிக்கப்பட்டவர்கள் நீக்கப்பட வேண்டும். இதுகுறித்து உச்ச நீதிமன்றத்தில் இந்தியாவின் முக்கிய அரசியல் கட்சிகள் வழக்குத் தொடுக்க முன்வரவேண்டும். நாட்டின் தலைக்குமேல் தொங்கும் கத்தியைக் கயிற்றுடன் அறுத்து குப்பையில் வீச வேண்டும்" என வைகோ வலியுறுத்தியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

12 mins ago

சினிமா

2 mins ago

உலகம்

59 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

கல்வி

2 hours ago

மேலும்