ஸ்டெர்லைட் ஆலை தீர்ப்பு ‘அரசின் கன்னத்தில் விட்ட அறை’; இனியாவது தடுக்கப் பாருங்கள்: எடப்பாடிக்கு ஸ்டாலின் அறிவுரை  

By செய்திப்பிரிவு

ஸ்டெர்லைட் விவகார தீர்ப்பு தமிழக அரசுக்கு ஏற்பட்டிருக்கும் மிகப்பெரிய தலைகுனிவு, எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை உதாசீனப்படுத்திய எடப்பாடி இனியாவது திருந்தி கொள்கை முடிவெடுக்க வேண்டும் என ஸ்டாலின் அறிவுரை கூறியுள்ளார்.

இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிக்கை:

“ஸ்டெர்லைட் ஆலையை மூடிய அரசாணையை தமிழக அரசின் கொள்கை முடிவு என்று ஏற்றுக்கொள்ள முடியாது” என்று நெற்றியில் அடித்ததைப் போல் சுட்டிக்காட்டி ஆலையைத் திறக்க, தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அளித்திருக்கும் 40 பக்கத் தீர்ப்பு, முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தலைமையிலான அதிமுக அரசின் கன்னத்தில் ஓங்கி விடப்பட்ட அறையாகவே அமைந்திருக்கிறது.

மனிதநேயமற்ற முறையில் போலீஸ் மூலம் துப்பாக்கிச்சூடு நடத்தி, அறவழியில் போராடிய 13 பேரின் உயிரைப் பறித்த இந்த அரசு, லட்சக்கணக்கான மக்களுக்கு சுகாதாரக்கேடு விளைவிக்கும், சுற்றுப்புறச் சூழலை அடியோடு நாசப்படுத்தும் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதிலும் அலட்சியம் காட்டி, இன்றைக்கு டெல்லி பூமியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவமானப்பட்டு அசிங்கப்பட்டதோடு மட்டுமின்றி, நிர்வாகத் திறமைக்குப் பெயர் போன தமிழக அரசு அதிகாரிகளுக்கும் மிகப்பெரிய தலைகுனிவை ஏற்படுத்தியிருக்கிறார்.

“ஆலையை மூட அமைச்சரவையைக் கூட்டி கொள்கை முடிவு எடுங்கள்” என்று திமுக சார்பில் சட்டமன்றத்தில் ஆணித்தரமாக வாதாடினேன். அனைத்து எதிர்க்கட்சிகளும் இதே கோரிக்கையை வலியுறுத்தின. ஏன் உயர்நீதிமன்ற நீதிபதிகளே அரசாணை போதாது, அமைச்சரவையைக் கூட்டி முடிவு எடுத்திருக்க வேண்டும் என்று எச்சரித்தார்கள்.

ஆனால் எதையும் காது கொடுத்துக் கேட்காமல் - எல்லாவற்றிலும் கரை கண்டதைப்போல, கொள்கை முடிவு எடுப்பதற்குப் பதிலாக ஆலையை மூட தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் அனுப்பிய கடிதத்தை மட்டும் ஏற்றுக் கொண்டு அதன் அடிப்படையில் ஆலையை மூடி அரசாணை பிறப்பித்தது அதிமுக அரசு.

இதற்கு முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் சட்டமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் நிர்வாகத் திறமையில் தாங்கள் புலிகள் போல் கருத்து தெரிவித்து பிரதான எதிர்க்கட்சியின் கருத்தினை கேலி செய்தார்கள். உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எச்சரிக்கையை ஏற்க மறுத்தார்கள். இருவரும் “இனிமேல் ஸ்டெர்லைட் ஆலையை திறக்கவே முடியாது” என்று அடாவடியாகப்  பேசினார்கள்.

ஆனால் இன்றைக்கு தேசிய தீர்ப்பாயத்தின் தீர்ப்பு முதலமைச்சரின் முகத்தில் கழுவ முடியாத கரியைப் பூசியிருக்கிறது. “நியாயப்படுத்த முடியாத உத்தரவு” என்றும், “தமிழக அரசு தன்னிடம் உள்ள ஆதாரங்களின் அடிப்படையில் எடுக்கப்படாத முடிவு” என்றும் இடித்துரைத்துள்ள தேசிய பசுமைத் தீர்ப்பாயம் முதலமைச்சரின் ஆணவப் பேச்சுக்கும், அலட்சியமான நிர்வாகத்திற்கும் தர்ம அடி கொடுத்திருக்கிறது.

“தினம் தினம் கோப்புக்களைப் பார்த்து உடனுக்குடன் முடிவு எடுத்து விடுகிறேன்” என்று வீண் தம்பட்டம் அடித்து வீராப்புப் பேசி வரும் முதலமைச்சரின் நிர்வாக லட்சணம் தீர்ப்பின் ஒவ்வொரு வரியிலும் சிரிப்பாய் சிரிக்கிறது. “கொள்கை முடிவு எடுத்து ஆலை மூடப்படவில்லை என்பதால் அந்த அரசு ஆணையை ரத்து செய்யும் அதிகாரம் தீர்ப்பாயத்திற்கு இருக்கிறது” என்றே தீர்ப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதைப் பார்த்தால், திமுக குறிப்பிட்டது போல் கொள்கை முடிவு எடுத்திருந்தால் பசுமைத் தீர்ப்பாயம் நிச்சயம் தலையிட்டிருக்காது என்றே தெரிகிறது.

ஆகவே உயர்நீதிமன்றமும், பிரதான எதிர்க்கட்சியான திமுகவும் எடுத்து வைத்த வாதத்தை ஏதோ உள்நோக்கத்துடன் ஏற்றுக் கொள்ளாமல் பிடிவாதமாக நடந்து கொண்ட எடப்பாடி பழனிசாமி, இதற்கு தார்மீகப்  பொறுப்பேற்று தூத்துக்குடி மக்களிடம் மட்டுமல்ல - சுற்றுவட்டாரத்தில் உள்ள மக்களிடமும், உயிரிழந்த குடும்பங்களிடமும் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.

ஆகவே, இனியாவது முதல்வர் எடப்பாடி பழனிசாமி தன்னைத் திருத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். “மேல்முறையீடு செய்வோம்” என்று வழக்கமான பல்லவியைப் பாடிக் கொண்டிருக்காமல், உடனடியாக தமிழக அரசே முன்னின்று ஸ்டெர்லைட் ஆலையால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள சுற்றுப்புறச்சூழல் ஆபத்து தொடர்பான அனைத்து ஆதாரங்களையும் சேகரிக்கவேண்டும்.

சேகரித்து, அந்த ஆலை தொடருவது “சீர் செய்யவே முடியாத மாசு ஏற்படுத்தும்” (IRREVERSIBLE POLLUTION) என்பதை உறுதி செய்யும் வகையில் அறிவியல் பூர்வமான ஆய்வுகளை மேற்கொண்டு, தமிழக அமைச்சரவை கூடி ஒரு கொள்கை முடிவு எடுத்து ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடிட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.”

இவ்வாறு ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

வாழ்வியல்

7 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

10 hours ago

ஓடிடி களம்

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

மேலும்