கருணாநிதி சிலை திறப்பு நிகழ்ச்சியில் மின்திருட்டு நடைபெற்றதா?-அமைச்சர் ஜெயக்குமாருக்கு திமுக பதிலடி

By செய்திப்பிரிவு

கருணாநிதி சிலை திறப்பு நிகழ்ச்சி வெற்றி பெற்றதால், பொதுமக்களின் ஆதரவு திமுகவுக்கு அதிகரித்து வருவதால் அமைச்சர் ஜெயக்குமார் மின் திருட்டு என குற்றம் சுமத்தியிருப்பதாக, சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளர் ஜெ.அன்பழகன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், "மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் சிலை திறப்புக்கு பெரிய பெரிய கட்-அவுட்கள் வைக்கப்பட்டிருந்தன. அவற்றுக்கு எங்கிருந்து மின்சாரம் எடுத்தனர்? எல்லாம் சென்னை மாநகராட்சி மின்சாரத்திடம் இருந்து எடுத்துள்ளனர். அவ்வாறு எடுப்பதற்கு அதிகாரமே இல்லை. மின்சாரத்தை திருடியுள்ளனர். அதற்கான அனைத்து ஆதாரங்களையும் எடுத்திருக்கிறோம். சென்னை மாநகராட்சியின் மின்கம்பம் மூலமே மின்சாரம் எடுத்து கட்-அவுட், மின்விளக்குகளுக்கு பயன்படுத்தியுள்ளனர்" என குற்றம் சாட்டினார்.

இந்நிலையில், கருணாநிதி சிலை திறப்பு நிகழ்ச்சியால் ஆளும் கட்சி ஆட்டம் கண்டு, அஞ்சி நடுங்கிப்போய் இருப்பதாக, சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளர் ஜெ.அன்பழகன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஜெ.அன்பழகன் இன்று (புதன்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "16-12-2018 அன்று கருணாநிதி சிலை திறப்பு விழா நிகழ்ச்சி அண்ணா அறிவாலயத்திலும், அதைத்தொடர்ந்து ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ  மைதானத்தில் பொதுக்கூட்டமும் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அகில இந்திய நாடாளுமன்ற காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கேரள முதல்வர் பினராயி விஜயன், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மேற்கண்ட நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்ச்சி இந்திய அரசியலில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது. கூட்டம் நடைபெற்ற இடத்தில் காவல்துறையினர் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தனர்.கூட்டத்திற்கான மின்சாரம் முழுவதும் ஜெனரேட்டர் மூலம் நடைபெற்றது. இது அனைவருக்கும் தெரியும்.

சிலை திறப்பு விழா மாபெரும் வெற்றி பெற்றதால், பொதுமக்களின் ஆதரவு திமுகவுக்கு அதிகரித்து வருவதால், இதைப் பொறுத்துக்கொள்ள முடியாத மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் விழாவுக்கு களங்கம் ஏற்படுத்த பத்திரிகையாளரிடம் மின் திருட்டு என வாட்ஸ் அப்பில் வந்த செய்தியைக் காண்பித்து குற்றம் சுமத்துகிறார்.

வாட்ஸ் அப்பில் வந்த ஆதாரத்தையெல்லாம் ஆதாரமாக எடுத்துப் பேசினால், அமைச்சர் மீது எவ்வளவோ பேசலாம். ஆனால், திமுகவினர் என்றைக்கும் தரம் தாழ்ந்து ஈடுபட மாட்டார்கள். அமைச்சரின் பேச்சிலிருந்து என்ன தெரிகிறது என்றால், தலைவர் கருணாநிதி சிலை திறப்பு நிகழ்ச்சியால் ஆளும் கட்சி ஆட்டம் கண்டு, அஞ்சி நடுங்கிப்போய் இருப்பது நன்றாகத் தெரிகிறது" என ஜெ.அன்பழகன் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

28 mins ago

இந்தியா

34 mins ago

இந்தியா

39 mins ago

கருத்துப் பேழை

2 hours ago

இந்தியா

47 mins ago

கருத்துப் பேழை

2 hours ago

இந்தியா

53 mins ago

ஆன்மிகம்

1 hour ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

7 hours ago

சினிமா

9 hours ago

மேலும்