ஓடும் ரயிலில் கொள்ளையடித்தது எப்படி? வடமாநில கொள்ளையர்களை நடிக்க வைத்து வீடியோ எடுக்கும் சிபிசிஐடி

By செய்திப்பிரிவு

ரூ.5.78 கோடி கொள்ளையடித்த வழக்கில் ஓடும் ரயிலில் கொள்ளையடித்தது எப்படி என கொள்ளையர்களை நேரில் நடிக்க வைத்து வீடியோவாக எடுக்க சிபிசிஐடி போலீஸார் சமபவ இடத்திற்கு அவர்களை அழைத்துச் சென்றனர்.

கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 8-ம் தேதி சேலத்திலிருந்து சென்னை வந்த ரயிலில் சேலம், நாமக்கல் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் சேகரிக்கப்பட்ட ரூ.323 கோடி பழைய, கிழிந்த 1000 ரூபாய், 500 ரூபாய் நோட்டுகள் சென்னை ரிசர்வ் வங்கிக்கு கொண்டுவரப்பட்டது.

எழும்பூர் வந்த ரயில் பெட்டியின் மேற்கூரையில் துளையிட்டு ரூ.5 கோடியே 78 லட்சத்தை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்துச் சென்றனர். இந்தக் கொள்ளைச் சம்பவம் தொடர்பாக விசாரணை சிபிசிஐடி போலீஸாருக்கு மாற்றப்பட்டது.

மின்சார ரயில் கேபிள் வரும் இடத்தில் ரயில் பெட்டியின் மேற்கூரையைப் பெயர்த்து கொள்ளை அடிக்க முடியாது. ஆகவே டீசல் இன்ஜின் வரும் வரையில் உள்ள பகுதிகளிலேயே மேற்கூரையில் துளையிட்டு கொள்ளை அடித்திருக்க வாய்ப்பு இருந்திருக்கும் என சிபிசிஐடி போலீஸார் சந்தேகித்தனர்.

இஸ்ரோ உதவியுடன் சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தியதில் கொள்ளையர்கள் சிக்கினர். அவர்கள் மத்தியப் பிரதேசம் குணா மாவட்டத்தைச் சேர்ந்த மோஹர்சிங் என்ற கொள்ளைக்கூட்டத் தலைவனின் ஆட்கள் எனத் தெரியவந்தது.

போலீஸாரின் தீவிர விசாரணையில் மோஹர்சிங்கின் கூட்டாளிகள் ரயில் கொள்ளையில் ஈடுபட்ட மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த தினேஷ் (38), ரோஹன் பார்த்தி (29) இருவரும் கடந்த அக்டோபர் 12 அன்று சென்னையில் கைது செய்யப்பட்டனர்.

குற்றம் நடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் 8-ம் தேதி இரவு ரயில் சின்னசேலத்திலிருந்து விருதாச்சலம் நோக்கிச் செல்லும்போது மேற்கூரையில் அமர்ந்து பயணம் செய்த இவர்கள் மேற்கூரையை வெட்டி எடுத்து விருதாச்சலத்தில் இறங்கிச் சென்றது தெரியவந்தது.

ஏற்கெனவே 2 பேர் சென்னையில் கைது செய்யப்பட்ட நிலையில் 1. மோஹர் சிங், 2. ருசி பார்தி, 3. கலியா (எ) கிருஷ்ணா, 4. மஹேஷ் பார்தி, 5. பில்தியா (எ) ப்ரஜ்மோகன் ஆகிய 5 பேரை போலீஸார் கைது செய்தனர்.

மோஹர் சிங் தலைமையிலான இந்தக் குழு பார்த்தி என்று அழைக்கப்படும் பயங்கரமான கொள்ளைக் கும்பலாகும். இவர்கள் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், டெல்லி, குஜராத், மஹாராஷ்டிரா, ஹரியாணா மாநிலங்களில் பரவி இருப்பவர்கள் ஆவர். அவர்களுக்கு இந்தி தெரிந்தாலும் தங்களுக்குள் பார்த்தி மொழியில்தான் பேசிக்கொள்கின்றனர்.

அது அவர்களுக்குள் பேசப்படும் ஒரு மொழி. இவர்கள் பயங்கரமான கொள்ளையர்கள், முகமூடிக் கொள்ளை, வீட்டின் பூட்டை உடைத்து திருடுவது, கவனத்தை திசை திருப்பி பணம், நகை பறிப்பது, வழிப்பறி, செல்போன் பறிப்பு போன்ற அனைத்துக் குற்றங்களிலும் ஈடுபடுபவர்கள்.

பார்த்தி இனத்தைச் சேர்ந்த இவர்கள் தொழிலே கொள்ளை அடிப்பதுதான். காஷ்மீரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரைக் கொலை செய்து பணம், நகைகளை கொள்ளையடித்த வழக்கில் சிக்கி தூக்கு தண்டனை விதிக்கப்பட்டவர்களும் இந்த இனத்தில் உள்ளனர். அந்தக் கொள்ளையில் ஈடுபட்டவர்களில் 2 பேர் ரயில் கொள்ளையிலும் சம்பந்தப்பட்டுள்ளனர்.

14 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்த சிபிசிஐடி போலீஸார் தொடர்ந்து 10 நாட்களாக அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொள்ளையர்கள் ஏழு பேரை சிபிசிஐடி போலீஸார் பிடித்து விட்டாலும் கொள்ளைக்கான சந்தர்ப்ப சாட்சியங்களைத் தயார் செய்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தகுந்த ஆதாரங்கள் வேண்டும். ஆனால் விசாரணையில் கொள்ளைக்கு தமிழ்நாட்டில் அவர்களுக்கு துப்பு கொடுத்தது யார்? கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை என்ன செய்தார்கள் என்பது குறித்து வாய் திறக்க மறுக்கின்றனர்.

கொள்ளையடிக்கப்பட்ட ரூ.5.78 கோடி பழைய 1000 மற்றும் 500 ரூபாய் ஆகும். அவற்றைக் கொள்ளையடித்த ஆகஸ்ட் 8 2016-ம் ஆண்டு அன்று பணமதிப்பு நீக்க நடவடிக்கை வரவில்லை. ஆனால் சரியாக 90 நாளில் பணமதிப்பு நீக்க நடவடிக்கை கொண்டு வரப்பட்டது.

இடைப்பட்ட 3 மாதங்களில் பணத்தை அவர்கள் செலவழித்திருக்க வாய்ப்பில்லை, அல்லது சொத்து நகைகள், வாகனம் என வாங்கியிருக்க வேண்டும். ஆனால் கொள்ளையர்கள் தாங்கள் கொள்ளையடித்த பணம் அத்தனையும் செலவாகிவிட்டது என்று தெரிவித்தாலும் எப்படி செலவழித்தோம் என்று சொல்ல மறுக்கின்றனர்.

இதனால் அடுத்தகட்ட நகர்வுக்குச் செல்ல முடியாமல் போலீஸார் இக்கட்டில் சிக்கியுள்ளனர். கொள்ளையர்கள் 7 பேர் தவிர இன்னும் கைது செய்யப்படவேண்டியவர்கள் ஏராளமானோர் உள்ளதாக சிபிசிஐடி தரப்பில் கூறப்படுகிறது.

இந்நிலையில் விஞ்ஞானப்பூர்வமாக கொள்ளையை நிரூபிக்க கொள்ளையர்கள் கொள்ளையடித்த சின்ன சேலத்திலிருந்து விருதச்சாலம் வரும் வழியிலும், விருதாச்சலத்தில் அவர்கள் இறங்கி தப்பித்ததையும், ரயில் கூரையில் பயணம் செய்து பணம் கொள்ளை அடித்ததையும் நடித்துக் காட்ட 5 கொள்ளையர்களையும் சிபிசிஐடி போலீஸார் சின்ன சேலம் அழைத்துச் சென்றுள்ளனர்.

சின்ன சேலத்திலிருந்து அவர்கள் எப்படியெல்லாம் கொள்ளை அடித்தனர் என செய்முறைக்காட்சி செய்யச் சொல்லி அதை வீடியோவாக சிபிசிஐடி பதிவு செய்ய உள்ளதாகவும் அது விசாரணைக்கு உதவியாக இருக்கும் என்றும் சிபிசிஐடி போலீஸார் கருதுகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

31 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

3 hours ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

3 hours ago

இந்தியா

1 hour ago

ஆன்மிகம்

1 hour ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

8 hours ago

மேலும்