நவ்ஜோத் சிங் சித்துக்கு எதிராக தமிழக பாஜக போராட்டம்; தமிழிசைக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்: திருநாவுக்கரசர் கேலி

By செய்திப்பிரிவு

தமிழிசை சவுந்தரராஜன் தேவையில்லாமல் காங்கிரஸ் கட்சியை சீண்டிப் பார்க்க வேண்டாம் என, தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக திருநாவுக்கரசர் இன்று (புதன்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “தமிழக பாஜக, பஞ்சாப் மாநில காங்கிரஸ் அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்து தமிழையும், தமிழகத்தையும் அவதூறாக பேசியதாகக் கூறி சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கிறது. மத்திய பாஜக அரசுக்கு எதிராக தமிழகமே கிளர்ந்தெழுந்து ஒட்டுமொத்த எதிர்ப்பை வெளிப்படுத்துவதை தாங்கிக்கொள்ள முடியாத தமிழிசை சவுந்தரராஜன் மக்களின் கவனத்தை திசைத் திருப்புவதற்காக இந்த போராட்டத்தை நடத்தியிருக்கிறார். இதில் நவ்ஜோத் சிங் சித்து பேசாததை பேசியதாக திரித்து கூறி போராட்டத்திற்கு காரணம் கூறியிருக்கிறார்.

முன்னாள் கிரிக்கெட் கேப்டன் இம்ரான்கான் பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்ற விழாவுக்கு சென்ற நவ்ஜோத் சிங் சித்து பத்திரிகையாளர்களிடம் பேசும்போது, தமிழ்நாட்டுக்கு செல்வதை விட பாகிஸ்தானுக்கு செல்வது எனக்கு இயல்பானது எனக் கூறி தமிழ் மொழியும் எனக்கு தெரியாது, அங்குள்ள உணவு வகைகளை விட பாகிஸ்தானில் உள்ள உணவு வகைகள் எனக்கு மிகவும் பிடிக்கும் என்று கூறியிருக்கிறார். பாகிஸ்தான் பிரிவினைக்கு முன்பு ஒரே மாகாணமாக அடுத்தடுத்த பகுதிகளில் வாழ்ந்து ஒரே கலாச்சாரத்தை பின்பற்றியதை வலியுறுத்துகிறபோது மேற்கோள் காட்டுவதற்காக தொலை தூரத்தில் உள்ள தமிழ்நாட்டை ஒரு வாதத்திற்காக ஒப்பிட்டார். இதில் அவரது நோக்கம் தமிழகத்தை அவமானப்படுத்துவது அல்ல.

ஆனால், அதை திரித்து தமிழ்நாட்டு மக்களுக்கு எதிராக பேசியதாக தமிழிசை கயிறு திரித்திருக்கிறார். எதுவுமே கிடைக்காத தமிழிசைக்கு அவல் கிடைத்ததாக எண்ணி மென்று வருகிறார். அவருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். எதிலும் வெற்றி பெறாத தமிழக பாஜக இதிலும் தோல்வியைத் தான் சந்திக்கப் போகிறது.

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களுக்கு தலா ரூபாய் 60 லட்சம் அபராதமும், மூன்று மாத சிறை தண்டனையும் விதித்து இலங்கை நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் 8 பேரை கடந்த மாதம் 18 ஆம் தேதி இலங்கை கடற்படை கைது செய்து அவர்களது படகுகளையும் பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்தது. அந்த வழக்கில் தான் இத்தகைய கொடூரமான தண்டனையை மீனவர்கள் மீது விதித்திருக்கிறது. இதையெல்லாம் தட்டிக் கேட்க, தடுத்து நிறுத்த வக்கற்ற மத்திய பாஜக அரசுக்கு தமிழக மக்கள் உரிய பாடத்தை விரைவில் புகட்டுவார்கள்.

தமிழக மீனவர்களின் 150 படகுகள் கடத்தி செல்லப்பட்டு இலங்கை கடற்படையினரால் பல ஆண்டுகளாக மக்கி மண்ணாகி சிதலமடைந்து வருகின்றன. படகுகளை திரும்பக் கொண்டு வரவோ, நஷ்ட ஈடு பெறவோ மத்திய - மாநில அரசுகள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது மிகுந்த கண்டனத்திற்குரிய செயலாகும்.

மீனவ சமுதாயத்தின் நலன்களை பாதுகாக்க மத்திய அரசில் தனி அமைச்சகம் அமைக்கப்படும் என்று 2014 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு ராமேஸ்வரத்தில் கடல் தாமரை மாநாட்டில் மீனவர்கள் முன்பாக சுஷ்மா சுவராஜ் வாக்குறுதி கொடுத்தார். ஆனால் நான்கு ஆண்டுகளாக வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கு தமிழிசை சவுந்தரராஜன், பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் எடுத்த முயற்சிகள் என்ன ? ஏன் தனி அமைச்சகம் அமைக்கப்படவில்லை ? மீனவர்களுக்கு எதிராக கடுமையான சட்டம் வந்த போது எதிர்த்து தமிழகத்தில் குரல் எழுப்பப்பட்டது.

அப்பொழுது எந்த நடவடிக்கையும் மத்திய பாஜக அரசு எடுக்காத காரணத்தால் இன்றைக்கு அந்த சட்டத்தினால் தமிழக மீனவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். இதையெல்லாம் தடுத்து நிறுத்த முடியாத தமிழிசை சவுந்தரராஜன் தேவையில்லாமல் காங்கிரஸ் கட்சியை சீண்டிப் பார்க்க வேண்டாம்” என திருநாவுக்கரசர் எச்சரித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

சினிமா

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

4 hours ago

வாழ்வியல்

5 hours ago

தமிழகம்

5 hours ago

ஆன்மிகம்

4 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

மேலும்