உங்களின் உதவி பவனேஷுக்கு தேவை: 8 வயது சிறுவனுக்கு 14 கீமோ, 2 அறுவை சிகிச்சை; அரிய புற்றுநோயால் அவதி

By க.சே.ரமணி பிரபா தேவி

'புற்றுநோய்'... கேட்டவுடனே கதிகலங்கவைக்கும் வார்த்தை. அதை அனுபவித்துக் கடப்பவர்கள் எத்தனை உடல், மன வேதனைக்குள்ளாவார்கள்? அதிலும் குழந்தைகளுக்குப் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டால்?! அத்தனை வலி நிரம்பிய ஒரு நோய்க்கும், கடினமான சிகிச்சைக்கும் ஒரு குழந்தை தள்ளப்படுவது எத்தனை பெரிய வேதனை? அதிலும் குழந்தை துயரப்படும் போது அதைப் பார்க்கும் பெற்றோர் நிலையைச் சொல்ல வார்த்தையில்லை.

8 வயது சிறுவன் பவனேஷ், ''நியூரோபிளாஸ்டோமா'' என்னும் அரிய வகைப் புற்றுநோய் தாக்குதலுக்கு ஆளாகி இருக்கிறான். ஓடியாடி விளையாட வேண்டிய வயதில் ஓய்ந்து, தொடர் சிகிச்சையால் சோர்ந்து கிடக்கிறான். ஒரு கீமோதெரபி சிகிச்சைக்கே உடல் தாங்காத நிலையில், பவனேஷுக்கு 14 கீமோதெரபிகள் அளிக்கப்பட்டு, 2 முறை அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

விதியோடு போராடி மீண்டு வந்த பவனேஷைப் பார்த்து பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைந்தாலும், அது நீடிக்கவில்லை. மீண்டும் அதே புற்றுநோய் பவனேஷை ஆட்கொண்டு இருக்கிறது.

ஒருமுறை வந்து, மீண்டும் வரும் நியூரோபிளாஸ்டோமா புற்றுநோய்க்கு (Relapsed or Refractory Neuroblastoma) ஆசியாவிலேயே மருத்துவ சிகிச்சை இல்லை. ஸ்பெயினில் மட்டுமே சிகிச்சை அளிக்கப்படுகிறது. பவனேஷுக்கு இந்த சிகிச்சை செய்ய சுமார் ரூ.1.5 கோடி செலவாகும். சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவரான பவனேஷின் தந்தை செந்தில்குமாரால் நிச்சயம் இது சாத்தியமில்லை.

மதுரையைச் சேர்ந்த செந்தில்குமார், மகனின் சிகிச்சைக்காக தனது பணத் தேவையை தயக்கத்துடனும் வேதனையுடனும் நம்மிடையே பகிர்கிறார்.

''2015, மார்ச் மாதம். அப்போது என் மகன் பவனேஷுக்கு 5 வயது. ஒரு நாள் கழுத்து வலிக்கிறது என்றான். அருகிலுள்ள குழந்தைகள் நல மருத்துவரிடம் அழைத்துச் சென்று வந்தோம். விரைவில் சரியானது. சில நாட்களிலேயே மீண்டும் கழுத்து வலிப்பதாக பவனேஷ் கூறினான். எலும்பியல் மருத்துவரிடம் சென்று சிகிச்சை அளித்தோம், பயனில்லை. நரம்பியல் மருத்துவரிடம் சென்று எம்ஆர்ஐ ஸ்கேன் எடுத்தோம். அப்போதுதான் புற்றுநோயின் தாக்கம் இருப்பது தெரிந்தது.

வேலூர் சிஎம்சியில் அனைத்துவிதமான பரிசோதனைகளும் பவனேஷுக்கு மேற்கொள்ளப்பட்டன. தொடர் பரிசோதனையில் பெரும்பாலும் சிறுவர்களுக்கே வரும் அரிய வகைப் புற்றுநோயான 'நியூரோபிளாஸ்டோமா' இருந்ததை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர். எலும்புகள், எலும்பு மஜ்ஜை, அட்ரீனல் சுரப்பி மற்றும் நிணநீர் நாளத்தில் புற்றுநோய்க் கட்டி இருப்பது கண்டறியப்பட்டது.

வேலூர் மருத்துவமனையில் பவனேஷுக்கு 8 முறை கீமோ சிகிச்சை அளிக்கப்பட்டது. ஒவ்வொரு 10 நாட்களுக்கும் ஒரு கீமோ என்ற வீதத்தில் மருத்துவர்கள் கொடுத்தனர். கீமோ கொடுப்பதால் குறையும் ரத்த சிவப்பணுக்களை அதிகப்படுத்த தினமும் ஊசி போட்டோம். உடலில ஊசி குத்தப்படும் போது ரணமாகிக் கண்ணீர்விட்டுக் கதறுவான் பவனேஷ்.

எங்கள் கண் முன்னாலேயே எங்கள் பிள்ளை நரக வேதனையை அனுபவிக்கும் போது எங்களுக்கு வலித்தது. பவனேஷுக்கு அனைத்தும் சரியாகும் என தேற்றிக்கொண்டோம். நம்பிக்கையோடு சிகிச்சையைத் தொடர்ந்தோம். 80 நாட்கள் கழித்து எலும்பு மஜ்ஜையில் உள்ள கட்டி சரியானது. அட்ரீனல் சுரப்பியில் இருந்த கட்டி குறைந்திருந்தது.

எலும்பு மஜ்ஜையில் புற்றுநோய் செல்கள் மீண்டும் உருவாகாமல் இருக்க அடையாறு புற்றுநோய் மருத்துவனையில் ஸ்டெம்செல் மாற்று அறுவை சிகிச்சை செய்தோம்.

ரத்தத்தில் இருந்து ஸ்டெம்செல்லை எடுத்து அறுவை சிகிச்சை செய்யும்போது வாந்தி, தலைசுற்றல் ஏற்படும். அந்த சிகிச்சை மேற்கொள்ளும்போது பவனேஷ் சாப்பிடவே மாட்டான். தண்ணீர் மட்டும் குடித்தே நாட்களைக் கடத்தினான்.

21 நாட்கள் சிகிச்சையில் பவனேஷ் உடல் எடை 7 கிலோ எடை குறைந்தது. புற்றுநோய்க் கட்டியை நீக்கிய இடத்தில் விட்டுப்போன செல்களை மீண்டும் துல்லியமாக நீக்க வேலூரில் ரேடியேஷன் தெரபி மேற்கொண்டோம். நெஞ்சுக் குழிக்குக் கீழே உருவான கட்டியை நீக்க அறுவை சிகிச்சை செய்தோம். அறுவை சிகிச்சை செய்த அதே இடத்தில் மீண்டும் 6 முறை கீமோ சிகிச்சை அளிக்கப்பட்டது. விதியோடு போராடும் பவனேஷ் பட்ட துன்பம் எல்லாம் சரியாகிவிட்டதாகத்தான் நினைத்தோம்.

வழக்கமான பரிசோதனைக்காக மீண்டும் வேலூர் சென்றோம். அப்போது மீண்டும் எலும்பில் புற்றுநோய் செல்கள் உருவாகி இருப்பதாக மருத்துவர்கள் கூறியதைக் கேட்டு அதிர்ந்தோம். மீண்டும் ஏற்படும் நியூரோபிளாஸ்டோமா புற்றுநோய்க்கு இந்தியாவில் சிகிச்சை இல்லை என்றார்கள் மருத்துவர்கள். மருத்துவர்கள் உதவியுடன் ஸ்பெயின் நாட்டில் உள்ள எஸ்ஜேடி பார்சிலோனா குழந்தைகள் மருத்துவமனையில் இதற்கான சிகிச்சை மேற்கொள்ளப்படுவதைக் கண்டுபிடித்தோம்.

Anti GD2 இம்யூனோ தெரபி என்னும் இந்த சிகிச்சைக்கு ரூ.1.5 கோடி தேவைப்படும் என்று அங்குள்ள மருத்துவர்கள் சொல்கின்றனர். இவ்வளவு நாள் செலவான தொகையை நண்பர்கள் மற்றும் குடும்பத்தின் உதவியுடன் சமாளித்துவிட்டேன். ஆனால் ஸ்பெயின் மருத்துவமனையில் செய்ய வேண்டிய சிகிச்சை மிகப்பெரிய தொகைக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை?

என் நிலையையும், பவனேஷ் உடலையும் பார்த்த மிலாப் என்னும் கிரவுட் ஃபண்டிங் நிறுவனத்தின் உதவியுடன் ரூ.29 லட்சம் திரட்டினோம். ரைட் டூ லிவ் என்னும் அமைப்பின் மூலம் ரூ.1.2 லட்சம் கிடைத்திருக்கிறது. பவனேஷைக் காப்பாற்ற உங்களை நாடி நிற்கிறேன்.

புற்றுநோய் என்றாலே மரணம்தான் முடிவு என்று பெரும்பாலானோர் நினைக்கின்றனர். ஆனால் உரிய நேரத்தில் சரியான சிகிச்சை அளித்தால், காப்பாற்ற முடியும். அப்படிக் காப்பாற்றப்பட்டவர்கள் சமூகத்தில் இன்று வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். அந்த வகையில் என் மகனின் மறுவாழ்வுக்காகக் காத்திருக்கிறேன். தனக்கு வந்தது புற்றுநோய் என்பதே தெரியாமல் சோர்ந்து கிடக்கும் அவனின் விழிகளில் வாழ்வின் ஒளியைப் பார்க்க ஆசைப்படுகிறேன்.

பவனேஷ் நிச்சயம் காப்பாற்றப்படுவார், புற்றுநோயில் இருந்து மீண்டுவருவார். இவை அனைத்தும் உங்களின் உதவி இருந்தால் சாத்தியம். நீங்கள் அளிக்கும் சிறிய உதவியும், மனம் உருகும் பிரார்த்தனையும் அந்தப் பிஞ்சு (பவனேஷ்) வாழ்க்கையை நீட்டிக்கச் செய்யும்.

புற்றுநோயில் இருந்து பவனேஷை மீட்க உதவுவீர்களா?''

செந்தில்குமாரைத் தொடர்புகொள்ள: 9994520740

அக்கவுண்ட் விவரம்:

Bank name: city union bank

Account No: 117001000481850

Name: Senthilkumar

Account: saving Account

IFSC code: CIUB0000117.

தொடர்புக்கு: ramaniprabhadevi.s@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

வணிகம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

தொழில்நுட்பம்

5 hours ago

சினிமா

6 hours ago

க்ரைம்

6 hours ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

இந்தியா

7 hours ago

க்ரைம்

7 hours ago

மேலும்