பிறவிப் போராளியான கருணாநிதியின் மனோதிடம் வெற்றி பெற்றுள்ளது: பினராயி விஜயன் பேட்டி

By செய்திப்பிரிவு

கருணாநிதி பிறவிப் போராளி. அவரின் மனோதிடம் வெற்றி பெற்றுள்ளது என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதி, சிறுநீர் பாதை தொற்றினால் ஏற்பட்ட காய்ச்சலுக்காக வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு திடீரென ரத்த அழுத்தம் குறையவே கடந்த 27-ம் தேதி நள்ளிரவு ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சிறப்பு மருத்துவர்கள் குழு 24 மணி நேரமும் கண்காணித்து அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகிறது. கடந்த 29-ம் தேதி மாலை அவரது இதயத்துடிப்பு குறைந்து உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டது. ஆனாலும், மருத்துவர்களின் தீவிர சிகிச்சையால் படிப்படியாக உடல்நிலை சீரானது.

இந்தச் செய்தி வெளியானதும் ஆயிரக்கணக்கான திமுக தொண்டர்கள் மருத்துவமனை முன்பு குவிந்தனர். தமிழகம் முழுவதும் திமுக தொண்டர்கள் கருணாநிதி குணமடைய வேண்டிய கோயில்கள், தேவாலயங்கள், தர்காக்களில் பிரார்த்தனையில் ஈடுபட்டனர். காவேரி மருத்துவமனை முன்பு திமுக தொண்டர்கள் சிலர் மொட்டை அடித்தனர். பூசணிக்காய் உடைத்தனர். 'எழுந்து வா தலைவா’ என கோஷமிட்டனர்.

இந்நிலையில் 6-வது நாளாக கருணாநிதிக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நேற்று காலை 10 மணி அளவில் காவேரி மருத்துவமனைக்கு வந்த நடிகர் விஜய், மாலையில் வந்த நடிகர் அஜித் ஆகியோர் ஸ்டாலினை சந்தித்து கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரித்தனர். தமாகா தலைவர் ஜி.கே.வாசன், முன்னாள் மத்திய அமைச்சரும், ராஷ்ட்ரீய லோக்தள் கட்சியின் தலைவருமான அஜீத் சிங், திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன், நடிகர்கள் கவுண்டமணி, விவேக், புரட்சி பாரதம் கட்சித் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி, சென்னை மயிலை மறைமாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு வந்து ஸ்டாலின், கனிமொழி ஆகியோரை சந்தித்து கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரித்தனர்.

உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சியின் தலைவருமான அகிலேஷ் யாதவ், கருணாநிதியின் உடல்நிலை குறித்து ஸ்டாலினிடம் தொலைபேசியில் கேட்டறிந்தார்.

இந்நிலையில் இன்று கேரள முதல்வர் பினராயி விஜயன் காவேரி மருத்துவமனைக்கு வருகை புரிந்தார். அவரை ஸ்டாலின் வரவேற்றார். பிறகு, கருணாநிதியின் உடல்நிலை குறித்து ஸ்டாலின், கனிமொழி ஆகிய இருவரிடமும் பினராயி விஜயன் விசாரித்தார். அப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் உடனிருந்தார்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பினராயி விஜயன், ''கருணாநிதி உடல்நிலை குறித்து ஸ்டாலின், கனிமொழியிடம் விசாரித்தேன். கருணாநிதி மிகச் சிறந்த போராளி என்பது அனைவருக்கும் தெரியும். அவர் பிறவிப் போராளி.

கருணாநிதியின் மனோதிடம் வெற்றி பெற்றிருக்கிறது. தற்போது அவரின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. கருணாநிதி விரைவில் பூரண குணமடைய விரும்புகிறேன்'' என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கல்வி

21 mins ago

தமிழகம்

25 mins ago

சினிமா

42 mins ago

தொழில்நுட்பம்

47 mins ago

இந்தியா

29 mins ago

இந்தியா

36 mins ago

தமிழகம்

49 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

மேலும்