இனப் பகையை முறியடிப்போம்; தேர்தல் களத்தில் வெற்றி குவிப்போம்: தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்

By செய்திப்பிரிவு

மத்திய பாஜக அரசையும், தமிழகத்தை ஆளும் அதிமுக அரசையும் வீழ்த்துவதே திமுகவின் இலக்கு என, அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு புதன்கிழமை எழுதிய கடிதத்தில், “புதிதாகப் பிறந்திருக்கின்றோம் நாம். நம்மை ஆளாக்கிய தலைவர் கருணாநிதி நம் நெஞ்சில் நிறைந்து, உலகைத் துறந்த நிலையில், அவர் காலமெல்லாம் கட்டிக்காத்த கழகம் எனும் லட்சிய தீபத்தை ஏந்தித் தொடர்ந்து மேற்செல்லும் மிகப்பெரும் பொறுப்புடன் நாம் புதிதாகப் பிறந்திருக்கின்றோம். அந்த லட்சிய தீபத்தை ஏந்திச் செல்லும் லட்சோப லட்சம் சிப்பாய்கள் அணிவகுக்கும் படை வரிசையின் தலைவர் என்ற பொறுப்பு என் தலையிலும், தோள்களிலும் சுமத்தப்பட்டிருப்பதை உணர்கிறேன்.

இதனை இதனால் இவன் முடிப்பான் என்று உணர்ந்து, தலைவர் கருணாநிதியின் அன்பு உடன்பிறப்புகள் அனைவரும் மாவட்ட வாரியாக தீர்மானங்களை நிறைவேற்றி, கழகத்தின் துணை அமைப்புகள் அனைத்தும் அதனையே வழிமொழிந்து, கழகத்தின் இதயமாம் பொதுக்குழுவின் பேராதரவுடன் பொதுச் செயலாளர் க.அன்பழகனின் வாழ்த்துகளுடன் கழகத் தலைவர் என்ற பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளேன். அதற்காக வேர்நிலைத் தொண்டர் முதல் தலைமைக் கழக நிர்வாகிகள் வரை அனைவருக்கும் என் இதயப்பூர்வமான நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உங்களால் உங்களுக்காகத் தலைவர் என்ற பொறுப்பை ஏற்றிருக்கும் தலைமைத் தொண்டன் நான். அரை நூற்றாண்டு காலம் தலைவர் கருணாநிதியின் தகுதி வாய்ந்த நிழலில், அவரது வழிகாட்டுதலில் கழகத்தின் வளர்ச்சியிலும், சோதனைகளிலும் சம மனநிலையுடன் பங்கெடுத்து, சிறிதும் சளைக்காமல் களம் கண்ட உங்களில் ஒருவன் இன்று உங்களின் தலைவன் என்ற பொறுப்பினை உன்னதமான உங்களால் தான் பெற்றிருக்கிறேன் என்பதை உயிருள்ளவரை ஒருபோதும் மறக்க மாட்டேன்.

தலைவர் கருணாநிதியின் மகன் என்பதைவிட, அவரது தொண்டன், தொண்டர்களில் ஒருவன் என்பதில் எல்லா தொண்டர்களைப் போலவே எப்படி எனக்கு அதிகப் பெருமை உண்டோ, அதுபோலவே கழகத்தின் தலைவர் என்பதைவிட, கருணாநிதியின் உடன்பிறப்புகளான உங்களில் ஒருவன் என்பதில்தான் இன்பமும் அதிகப் பெருமிதமும் கொள்கிறேன்.

உங்களில் ஒருவனான என்னை நீங்கள் அறிவீர்கள். நான் தலைவர் கருணாநிதியைப் போல பன்முகத் திறமை கொண்டவனல்ல. அதை மறைக்க வேண்டியவனும் அல்லன். கருணாநிதியிடம் நான் கற்றுக்கொண்டது துணிவு, உறுதி, உழைப்பு. அதில், நம் திராவிட இயக்கத்தின் முப்பெரும் தலைவர்களான பெரியார், அண்ணா, கருணாநிதி. மூவரும் பிரிக்க முடியாமல் கலந்திருக்கிறார்கள். அந்த உணர்வுதான் நம் ஒவ்வொருவர் உள்ளத்திலும் நிலைபெற்றுள்ளது. அந்த உணர்வுதான், உங்களின் அன்புடனும், ஆதரவுடனும் என்னைத் தலைமைப் பொறுப்பில் அமர வைத்திருக்கிறது.

திமுக தலைவர் எனும் பெரும் பொறுப்பை காலம் சுமத்திய சுமையை ஏற்றுக்கொண்ட வேளையில் ஆற்றிய உரையில், திமுக என்பது பகுத்தறிவு, சுயமரியாதை, சமூக நீதி, சமத்துவம் ஆகிய நான்கு தூண்களால் கட்டப்பட்ட இயக்கம் என்பதை எடுத்துரைத்தேன். அந்தத் தூண்களைப் பாதுகாத்து, பலப்படுத்த வேண்டிய கடமை நம் எல்லோருக்கும் இருக்கிறது. அதற்காகத்தான், நாம் எந்நாளும் இணைந்தே பயணிப்போம் என்று அந்த உரையிலே குறிப்பிட்டேன்.

தொண்டன் வேறு, தலைவன் வேறு என்ற பாகுபாடின்றி தோளோடு தோள் நின்று பயணிக்கும் குடும்பப் பாசமிக்க இயக்கம்தான் திமுக. அப்படித்தான் தலைவர் கருணாநிதி நம்மை ஊட்டி வளர்த்திருக்கிறார். தமிழ்நாட்டின் ஏதோ ஒரு மூலையில் இன்னமும் முகம்கூட காணாத தொண்டனுக்கும் நான் தலைவன். இது பதவியல்ல, இடையறாது பணியாற்றிடத் தந்திருக்கும் பொறுப்பு. அதனை உணர்ந்து அனைவரையும் இன்முகத்துடன் பாசம் காட்டி அரவணைத்து உங்களுடன் பயணிக்க வேண்டியவன் நான் என்பதை ஒருபோதும் மறக்க மாட்டேன்.

தனிப்பட்ட என்னைவிட, நீங்கள் அனைவரும் முக்கியம். அதைவிட உங்களை உள்ளடக்கியிருக்கும் கழகம்தான் முக்கியம் என்பதை உணர்ந்திருக்கிறேன். கழகத்தால் தனக்கென்ன லாபம் என நினைப்போரைவிட, தன்னால் கழகத்திற்கு என்ன லாபம் என எண்ணிச் செயல்படுவோரே நமக்குத் தேவை என்றார் தலைவர் கருணாநிதி. அந்த எண்ணம் கொண்ட தொண்டர்களே, உங்களுடன்தான் நான் பயணிக்கிறேன். கழகத்தின் நான்கு தூண்களையும் பாதுகாக்க வேண்டிய கடமை உணர்வுடன் பயணத்தைத் தொடங்குவோம்.

கழகத்தைக் காக்கும் பணி என்பது தமிழைக் காக்கும் பணி, தமிழ்நாட்டின் உரிமை மீட்கும் பணி, தமிழர்களின் வாழ்வைக் காக்கும் பணி, திராவிட இனத்தின் வெற்றியை நிலைநாட்டும் பணி. இந்தப் பணிகளை நிறைவேற்றுவதற்கு எங்கெங்கு எவையெல்லாம் தடையாக இருக்கிறதோ, அவற்றையெல்லாம் அவ்வப்போது தகர்த்து மோதி, தவிடுபொடியாக்கி, வெற்றி காணவேண்டிய பயணத்தை லட்சிய தீபம் கையில் ஏந்தி நிறைவேற்றிட வேண்டிய இன்றியமையாக் கடமை உள்ளவர்களாக நாம் இருக்கிறோம்.

பெரியாரும் அண்ணாவும் கருணாநிதியும் வகுத்துத் தந்த கொள்கைகளுடன் அவர்கள் காட்டிய ஜனநாயக வழியில்தான் நம் பயணம் தொடர்கிறது. காலத்திற்கேற்ற அணுகுமுறைகள், மக்களின் மனநிலையை உணர்ந்த மாற்றங்கள், லட்சியத்தை வென்றடைவதற்கான வியூகங்கள் இவற்றுடன் புதிய பயணத்தைத் தொடங்கியிருக்கிறோம். பாதை நமது; பயணம் புதிது.

நூற்றாண்டு கடந்து வந்து, பல வெற்றிகளைக் குவித்துள்ள திராவிட இயக்கத்தின் பயணம் இன்னும் நெடுந்தூரம் செல்ல வேண்டியிருக்கிறது. அந்த நெடும் பயணத்தில் உடனடி இலக்குகள், இரண்டு. ஒன்று, சுயமரியாதையை அடகு வைத்த முதுகெலும்பில்லாத, ஊழல் கறை படிந்த அரசு கருவூலத்தைக் கொள்ளையடிப்பதற்காகவே ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் அதிமுக அரசை மக்கள் துணையுடன் விரட்டி அடிப்பது.

மற்றொன்று, சமூக நீதிக்குக் குழிவெட்டி, நாட்டின் பன்முகத்தன்மையைச் சிதைத்து, மாநில உரிமைகளைப் பறித்து மதவெறியைத் திணித்து, இந்தியா முழுவதும் காவி வண்ணம் பூச நினைக்கும் மத்திய பாஜக அரசை வீழ்த்திக் காட்டுவது.

இந்த இரண்டு உடனடி இலக்குகளும், இந்தியாவையும் தமிழ்நாட்டையும் நெருக்கும் பேராபத்திலிருந்து காக்கக்கூடிய பாதுகாப்பு வேலிகளாகும். ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டுள்ள மதச்சார்பற்ற சக்திகளுடன் இணைந்து அந்தப் பாதுகாப்பு வேலிகளை அமைப்பதில் நாம் முனைப்புடன் செயல்பட வேண்டும்.

அதன் அடுத்த கட்டமாக, மாநில உரிமை என்ற பயிரை வளர்க்க வேண்டிய பெரும்பணி இருக்கிறது. அது நமக்கான பணி மட்டுமல்ல, அண்ணாவின் லட்சியமும், தலைவர் கருணாநிதியின் கொள்கையுமான மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்பதை நிறைவேற்ற வேண்டிய கடமை. தமிழ்நாட்டின் உரிமைகள் பறிக்கப்பட்டதுபோல, அண்டை மாநிலங்களின் உரிமைகளும் நலன்களும் பறிபோகின்றன. இந்தியாவின் பல மாநிலங்களிலும் இந்த உரிமைக் குரல் ஒலிக்கிறது.

மத்தியில் ஆள்கின்ற பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசின் எதேச்சதிகாரப் போக்கினால் இந்தியாவின் ஒருமைப்பாடு மிகப்பெரிய அச்சுறுத்தலை சந்தித்து வருகிறது. 120 கோடி மக்களைக் கொண்ட நாட்டின் வலிமையைப் பலவீனப்படுத்தும் அனைத்து வேலைகளையும் சமூக, பொருளதார, கல்வி, மொழி, வாழ்வுரிமை உள்ளிட்ட பல தளங்களிலும் செய்து வருகிறது. இவற்றால் ஒவ்வொரு மாநிலத்திலும் வாழ்கின்ற அந்தந்த மொழி பேசும் தேசிய இனங்களின் மீது அறிவிக்கப்படாத போர் தொடுக்கப்பட்டுள்ளது. இந்த யுத்தத்தை எதிர்கொள்கின்ற ஜனநாயக சக்திகளை ஒருங்கிணைத்து செல்வதில், மாநில சுயாட்சிக்காக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி, அதற்காக அயராது உழைக்கும் இயக்கமான திமுக முன்னணியில் இருக்கும்.

சமூக நீதிக்கு எதிராகவும் மதவெறியுடனும் இந்திய ஒருமைப்பாட்டைச் சிதைக்கும் வகையிலும் செயல்படும் மத்திய பாஜக அரசையும், சுயமரியாதை இழந்து மாநில உரிமைகளை அடமானம் வைத்த மாநில அதிமுக அரசையும் வீழ்த்த வேண்டியது என்பது ஜனநாயக போர்க்களமான தேர்தல் களம் தான். நாடாளுமன்றத் தேர்தலும், சட்டப்பேரவைத் தேர்தலும் அடுத்தடுத்து வரலாம். ஏன், இரண்டும் இணைந்துகூட வரலாம்.

எப்படி வந்தாலும், எந்தத் தேர்தல் வந்தாலும் அதில் மக்கள் விரோத அரசுகள் இரண்டையும் வீழ்த்துவதே ஜனநாயக இயக்கமான திமுகவின் இலக்கு. கொள்கை ரீதியான தோழமை சக்திகள் நம்முடன் இணைந்து நிற்கின்றன. அதில் குழப்பம் ஏற்படுத்தலாமா என நினைத்து குறுக்குசால் ஓட்டிப் பார்க்க எவர் நினைத்தாலும் அவர்தம் எண்ணம் ஒருபோதும் ஈடேறாது. நம் பயணம் உறுதியானது. நான், நீ என்றால் உதடுகள் ஒட்டாது; நாம் என்று சொல்லும்போதுதான் உதடுகள்கூட ஒட்டும் என்றார் ஆருயிர்த் தலைவர் கருணாநிதி. நாம் என்ற உணர்வுடன் என்றும் இணைந்து பயணிப்போம். இனப் பகையை முறியடிப்போம். தேர்தல் களத்தில் வெற்றி குவிப்போம். அதனை நம் உயிருக்கு மேலான தலைவர் கருணாநிதிக்கு லட்சியக் காணிக்கையாக்குவோம்” என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

5 mins ago

இந்தியா

9 mins ago

கருத்துப் பேழை

3 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

இந்தியா

32 mins ago

உலகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

கல்வி

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

தமிழகம்

10 hours ago

சினிமா

11 hours ago

மேலும்