தமிழர்களின் சகாப்த நாயகர் கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்குக: வைகோ

By செய்திப்பிரிவு

மறைந்த திமுக தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக வைகோ சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்கூறும் நல்லுலகின் தன்னிகரில்லா மறைந்த திமுக தலைவர் கருணாநிதி, கோடிக்கணக்கான தமிழ் நெஞ்சங்களைத் துயர் கொள்ளச் செய்துவிட்டு, அண்ணாவுக்கு அருகில் துயில் கொள்ளச் சென்றுவிட்டார்.

ஐம்பது ஆண்டு காலம் திராவிட இயக்கத்துக்கு தலைமையேற்று வழிநடத்திய கலங்கரை விளக்கம் அணைந்து போனது. ஓயாத கடல் அலை போல உழைத்துக் கொண்டிருந்த தமிழர்களின் சகாப்தம் தன் மூச்சை நிறுத்திக்கொண்டது.

இந்திய அரசியல் தலைவர்களிலேயே எழுத்தாற்றலும், சொல்லாற்றலும் ஒருங்கே பெற்றிருந்த மக்கள் தலைவர் கருணாநிதி ஒருவரே என்றால் அது மிகையல்ல. மேடையில் வீசிய மெல்லியப் பூங்காற்றாய், உலகத் தமிழர்களின் உள்ளத்தில் நிறைந்தவர், தன் ஈடற்ற எழுத்து வன்மையால் தமிழ் அன்னைக்கு முத்தாரங்கள் பலவற்றை அணிகலனாகப் பூட்டி மகிழ்ந்த வித்தகப் பெருமகன் கருணாநிதி.

வான்புகழ்கொண்ட வள்ளுவரின் குறளுக்கு அவர் தீட்டிய குறளோவியம், தமிழரின் தொன்மைச் சிறப்பை இயம்பும் தொல்காப்பியப் பூங்கா, தமிழ் இனத்தின் பழைய பண்பாட்டின் புதிய வடிவத்தைக் கண்முன் நிறுத்தும் சங்கத் தமிழ், கடலாண்ட தமிழனின் வரலாற்றைக் கூறும் ரோமாபுரிப் பாண்டியன், தமிழ் மண்ணின் வீரம் மணக்கும் தென்பாண்டிச் சிங்கம், பொன்னர் சங்கர் போன்றவை தலைவர் கருணாநிதியின் சாகாவரம் பெற்ற இலக்கியப் படைப்புகள் ஆகும். தமிழ்த் திரையுலகில் பேனா முனையில் புரட்சிகர வசனங்கள் தீட்டி, வண்ணத் தமிழுக்கு மேலும் அணிசேர்த்து காவியப் புகழ் கொண்டவர் கருணாநிதி.

ஐந்துமுறை தமிழகத்தின் முதல்வர் பொறுப்பை ஏற்று, மக்கள் பணி ஆற்றிய தலைவர் கருணாநிதி, ஆட்சித் துறையில் அளப்பரிய சாதனைகள் நிகழ்த்தியவர். இந்திய ஜனநாயகத்திற்கும், கூட்டாட்சித் தத்துவத்திற்கும் வலுசேர்க்கும் வகையில், இந்தியாவிலேயே முதன் முதலில் சட்டப்பேரவையில் மாநில சுயாட்சி தீர்மானத்தை நிறைவேற்றிய வரலாறு கருணாநிதிக்கு மட்டுமே உரியது ஆகும். திராவிட இயக்கத்தின் ஆணி வேரான சமூக நீதி தழைப்பதற்கு பிற்படுத்தப்பட்டோர், ஒடுக்கப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் இடஒதுக்கீட்டு உரிமையை நிலைநாட்டியவர்.

செம்மொழித் தமிழுக்கு சிறப்பான திட்டங்களால் பெருமை சேர்த்தவர். எண்ணிலடங்கா சமூக நலத் திட்டங்களுக்கு முன்னோடியான மாநிலம் தமிழ்நாடு என்ற கீர்த்தி தலைவர் கருணாநிதியால்தான் கிடைத்தது. பெண்களுக்கு சொத்துரிமை வழங்கிட சட்டம், வேளாண்மை செழிக்க இலவச மின்சாரம் வழங்கும் திட்டம், கல்வி, சுகாதாரத் துறைகளில் தமிழகம் பெற்றிருக்கும் வளர்ச்சி, தொழில் துறையிலும், தகவல் தொழில்நுட்பத் துறையிலும் தலைசிறந்த மாநிலமாகத் திகழும் தமிழ்நாடு. இவையெல்லாம் கருணாநிதியின் ஆட்சித் திறனுக்கு சான்று கூறும் சரித்திரச் சாதனைகள் ஆகும்.

பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்ற அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகும் சட்டம் கொணர்ந்த பெருமை கருணாநிதியையே சேரும். இந்திய நாட்டில் தென்னகத்து ஒளிவிளக்காக ஏழு கோடி தமிழர்களின் நெஞ்சில் மட்டுமல்ல, மாநில எல்லைகளைக் கடந்து நாட்டு மக்கள் அனைவரது பேரன்புக்கும், போற்றுதலுக்கும் உரிய தமிழகர்களின் சகாப்த நாயகர் தலைவர் கருணாநிதிக்கு இந்திய அரசு பாரத ரத்னா விருது வழங்கிச் சிறப்பிக்க வேண்டும்” என்று வைகோ வலியுறுத்தியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

வாழ்வியல்

4 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

6 hours ago

ஓடிடி களம்

7 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

கருத்துப் பேழை

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்