பெருங்களத்தூரில் ஜி.எஸ்.டி. சாலையை கடக்க மேம்பாலம் கட்ட வேண்டும்: "உங்கள் குரல்" மூலமாக பொதுமக்கள் கோரிக்கை

By செய்திப்பிரிவு

தாம்பரத்தை அடுத்த பெருங்களத்தூரில் ஜிஎஸ்டி சாலையை கடப்பதற்கு உடனடியாக மேம்பாலம் கட்ட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தென்மாவட்டங்களில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும் பெருங்களத்தூர் வழியாக சென்னை நகரை வந்தடைகின்றன. அரசு வெளியூர் எக்ஸ்பிரஸ் பஸ்கள் மற்றும் தனியார் ஆம்னி பஸ்கள் பெருங்களத்தூருக்கு வந்து அங்கிருந்துதான் புறவழிச்சாலை வழியாக கோயம்பேடு பஸ் ஸ்டாண்டுக்கு செல்கின்றன. பீக் அவர்ஸ் என்று அழைக்கப்படும் காலை மற்றும் மாலை நேரங்களில் வாகனப் போக்குவரத்து காரணமாக திக்குமுக்காடுகிறது பெருங்களத்தூர்.

மிக வேகமாக வளர்ந்து வரும் பெருங்களத்தூரில் ஆயிரக்கணக்கான வீடுகளும், அடுக்குமாடி குடியிருப்புகளும் உள்ளன.

ஜிஎஸ்டி சாலையின் இடதுபுறம் பெருங்களத்தூர், சீனிவாசன் நகர், குன்றுமேடு, பழைய பெருங்களத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலும் வலதுபுறம் பீர்க்கன்கரணை, சதானந்தபுரம் போன்ற இடங்களிலும் ஏராளமான கடைகள், வணிக நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் அமைந்துள்ளன. பஸ்கள் மற்றும் மின்சார ரயில்களில் இருந்து இறங்கும் பயணிகளும், மறுபக்கத்திற்கு செல்ல விரும்பும் பொதுமக்களும் எப்போதும் பரபரப்பாக இருக்கும் ஜிஎஸ்டி சாலையை கடந்துதான் செல்ல வேண்டும்.

பெருங்களத்தூர் முதலாவது ரயில்வே கேட் முன்னால் முன்பு வாகன ஓட்டிகளும் பாதசாரிகளும் கடப்பதற்கு பாதை இருந்தது. ஓராண்டுக்கு முன்பு அப்பாதை அடைக்கப்பட்டுவிட்டது. வாகனங்கள் சதானந்தபுரம் சென்று அங்கு புதிதாக அமைக்கப்பட்டுள்ள சிக்னல் வழியாகத்தான் மறுபக்கத்துக்கு திரும்ப முடியும்.

அதேபோல், பீர்க்கன்கரணை பகுதியைச் சேர்ந்த வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் மறுபுறத்துக்கு வருவதற்காக அங்குள்ள போலீஸ் நிலையம் அருகே அமைக்கப்பட்டுள்ள சிக்னல் வழியாக ஜிஎஸ்டி சாலையை கடந்து செல்கிறார்கள். தற்போது சிக்னலில் போக்குவரத்து போலீசார் பணியில் இருந்து வாகன போக்குவரத்தை ஒழுங்குபடுத்திக் கொண்டிருக்கிறார்கள். குறிப்பிட்ட நேரத்திற்குள் ஜிஎஸ்டி சாலையை கடக்க வேண்டும் என்பதால் பாதசாரிகள் அவசர அவசரமாக விரைந்து செல்ல வேண்டியுள்ளது. அதேபோல், வாகன ஓட்டிகளும் பரபரப்போடுதான் ஜிஎஸ்டி சாலையை கடந்து செல்கின்றனர்.

அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், பெருகி வரும் வாகனப் போக்குவரத்தை கட்டுப்படுத்தவும் பல்லாவரம் மற்றும் குரோம்பேட்டையில் இருப்பதைப் போல பெருங்களத்தூரிலும் பெரிய அளவிலான மேம்பாலம் கட்ட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் “தி இந்து” உங்கள் குரல் சேவை மூலம் கோரிக்கை விடுத்துள்ளனர். மேம்பாலம் கட்டும் திட்டம் தொடர்ந்து பல ஆண்டுகளாகவே ஆய்வில் இருந்து வருவதையும் அத்திட்டத்தை உடனடியாகச் செயல்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

28 mins ago

சினிமா

3 hours ago

இந்தியா

37 mins ago

இந்தியா

44 mins ago

இந்தியா

50 mins ago

இந்தியா

1 hour ago

சினிமா

4 hours ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

3 hours ago

தமிழகம்

57 mins ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

மேலும்