அரசின் அக்கறையின்மையால் கடலில் கலந்து வீணாகும் காவிரி நீர்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேதனை

By செய்திப்பிரிவு

வெள்ளப்பெருக்க நீரை தேக்கி வைக்க தமிழக பொதுப்பணித்துறை முன்னெச்சரிக்கையோடு செயல்பட தவறியதன் காரணமாக கடந்த 5 நாட்களாக கீழணையிலிருந்து கொள்ளிடம் ஆறு வழியாக இதுவரை சுமார் 15 டி.எம்.சி. தண்ணீர் பயனின்றி கடலில் கலந்து வருகிறது, அரசின் அக்கறையின்மையால் வீணாகிறது காவிரி நீர் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேதனை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அக்கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து நீடித்து வரும் நிலையில் கர்நாடகா அணைகளில் நீர் நிரம்பி உபரி நீர் தமிழகத்திற்கு திறந்துவிடப்படுகிறது. கடந்த 15 நாட்களுக்கு மேலாக அதிகரித்து வரும் வெள்ளப்பெருக்க நீரை தேக்கி வைக்க தமிழக பொதுப்பணித்துறை முன்னெச்சரிக்கையோடு செயல்பட தவறியதன் காரணமாக கடந்த 5 நாட்களாக கீழணையிலிருந்து கொள்ளிடம் ஆறு வழியாக இதுவரை சுமார் 15 டி.எம்.சி. தண்ணீர் பயனின்றி கடலில் கலந்து வருகிறது. அடுத்த சில நாட்களுக்கும் இதே நிலை நீடிக்கும் என தெரிகிறது.

இவ்வாண்டு கர்நாடகத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் மேட்டூர் அணைக்கு அதிகபட்ச தண்ணீர் வந்துகொண்டுள்ளது. இந்நிலையில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 80 அடியை எட்டிய போதே பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பிலும், மற்றும் பல விவசாய அமைப்புகளும் கோரிக்கை வைத்தன. அணை திறப்பதை மேலும் தாமதப்படுத்துவதனால் உபரியாக கிடைக்கும் தண்ணீர் பயனின்றி கடலுக்குச் செல்லும் ஆபத்து ஏற்படும் எனவும், இப்போதே மேட்டூர் அணையைத் திறந்தால் டெல்டா முழுவதும் உள்ள ஏரி, குளங்கள் நிரம்புவதற்கும், வயல்வெளிகளில் தண்ணீர் பாய்ந்து நிலத்தடி நீர் உயர்வதற்கும் வாய்ப்பு ஏற்படும் என வற்புறுத்தப்பட்டது. ஆனால், இக்கோரிக்கையை தமிழக அரசு செவிமடுக்க மறுத்து கடந்த ஜூலை மாதம் 19ந் தேதி மேட்டூர் அணையை முதலமைச்சர் திறந்து வைத்தார். (முதலமைச்சர் திறக்க வேண்டுமென்பதற்காகவே அவரது நிகழ்ச்சி நிரலுக்காக 19ந் தேதி என தீர்மானிக்கப்பட்டதாகவும் செய்திகள் உள்ளன) அப்போது அணையின் நீர்மட்டம் 109 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 76.99 டி.எம்.சி.யாகவும் இருந்தது. தொடர்ந்து ஏற்பட்ட கனமழையினால் நீர்வரத்து அதிகமாகி மேட்டூர் அணை அடுத்த இரண்டு தினங்களில் அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டிவிட்டது. அதன் பிறகு அளவுக்கு அதிகமாக தண்ணீர் மேட்டூர் அணையிலிருந்து திறந்து விடப்பட்டு கல்லணை மற்றும் கீழணைகள் திறக்கப்பட்டு தற்போது அதிகமான நீர் கடலுக்கு சென்றுகொண்டுள்ளது. முன்னரே, மேட்டூர் அணை திறந்து தண்ணீர் திறக்கப்பட்டிருக்குமாயின்

வீராணம் ஏரி உள்பட பெரும்பகுதியான ஏரி, குளங்களில் காவிரி நீரை தேக்கி வைத்திருக்க முடியும். ஆனால், தற்போது வீராணம் ஏரியும் மற்றும் உள்ள ஏரி, குளங்கள் நிரப்ப முடியாமல் ஒரேநேரத்தில் அளவுக்கு அதிகமான தண்ணீர் திறப்பதால் கடலுக்குச் செல்வதை தவிர வேறு வழியில்லை என்ற நிலை உருவாகியுள்ளது.

ஒருபக்கம், கடைமடைக்கு தண்ணீர் வந்து அடையாமலும், மறுபக்கம், பல இடங்களில் மக்கள் குடிநீருக்கு அவதிப்படும் நிலையில் காவிரி நீர் கடலில் கலக்கும் மோசமான நிலைமை ஏற்பட்டுள்ளது.

குடிமராமத்து பணிகளை மிகவும் தாமதப்படுத்தி தண்ணீர் திறக்கப்படும் நேரத்தில் அரைகுறையாக செய்துவிட்டு இதற்கான நிதி கொள்ளையடிக்கப்படுவது வழக்கமாக உள்ளது. இம்முறையும் இதே காரணத்தினால் ஒருபக்கம் மேட்டூர் அணை திறப்பது தாமதப்படுத்தப்பட்டதோடு, மறுபக்கம் குடிமராமத்து பணிகள் அரைகுறையாக முடிக்கப்பட்டு ஒதுக்கப்பட்ட பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. கடந்த ஓராண்டுக்கு மேல் பாசன வடிகால் வாய்க்கால்கள் வறண்டு கிடந்த போதெல்லாம் தூர்வாரும் பணியை மேற்கொள்ளாமல், தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்து மேட்டூர் அணை நிரம்புகிற வரை தூர்வாரும் பணியை தாமதப்படுத்துவது ஏன் என்ற கேள்விக்கு தமிழக அரசு பதில் சொல்லியாக வேண்டும்.

நடப்பாண்டில் மட்டுமல்லாமல் கடந்த பல ஆண்டுகளாகவும் இதே நிலைமை தான் ஏற்பட்டு வந்ததது என்பதையும் கவனப்படுத்த விரும்புகிறோம். குறிப்பாக, 2013ம் ஆண்டு இதேபோல கடை மடைக்கு தண்ணீர் எட்டாத நிலையில் அதிகமான அளவு கடலில் திறந்து விடப்பட்டது. 2005ம் ஆண்டும் இதே போல பாசனத்திற்கு தண்ணீர் கிடைக்காத நிலையில் சுமார் 140 டி.எம்.சி. தண்ணீர் கடலுக்கு திறந்து விடப்பட்டது.

காவிரியில் உபரியாக கிடைக்கும் தண்ணீரை தேக்கி வைக்க பல புதிய பாசனத் திட்டங்கள் தீட்டப்பட்டிருந்த போதும் அவைகள் நிறைவேற்றுவதில் தமிழக அரசு அக்கறை காட்டவில்லை. குறிப்பாக, மாயனூர் கதவணையிலிருந்து காவிரி, வைகை, குண்டாறு இணைப்புத் திட்டம் தீட்டப்பட்டிருந்த போதும் இத்திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. இத்திட்டம் நிறைவேற்றப்பட்டிருக்குமானால் உபரி நீரை தமிழகத்தின்

வறண்ட மாவட்டங்களான புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களுக்கு காவிரியின் உபரி தண்ணீரை திருப்பி விட்டு பயன்படுத்தியிருக்க முடியும். இதுபோல காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் ஏற்கனவே திட்டமிட்ட தலா 7 கதவணைகளை கட்டி முடிப்பதன் மூலம் ஓரளவு தண்ணீரை சேமித்து வைத்து பயன்படுத்த முடியும். இத்தகைய திட்டங்களை நிறைவேற்றாமல் கிடைக்கும் தண்ணீரை கடலில் திறந்துவிட்டு பின்னர் தண்ணீருக்காக கையேந்தும் நிலை நீடித்து வருகிறது.

எனவே, தமிழக அரசு இனியாவது கிடைக்கும் நீரை முழுமையாக சேமித்து வைத்து பயன்படுத்துவதற்கான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்பதே தமிழக மக்களின் எதிர்பார்ப்பாகும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

6 mins ago

தமிழகம்

17 mins ago

இந்தியா

10 mins ago

விளையாட்டு

26 mins ago

வாழ்வியல்

35 mins ago

ஓடிடி களம்

45 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தொழில்நுட்பம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

மேலும்