கருணாநிதிக்கு காய்ச்சல்; அச்சப்படும் வகையில் ஏதும் இல்லை- ஸ்டாலின் கூறியதாக திருமாவளவன் பேட்டி

By செய்திப்பிரிவு

கருணாநிதிக்கு காய்ச்சல் உள்ளது, அச்சப்படும்வகையில் ஏதும் இல்லையென்று ஸ்டாலின் தன்னிடம் கூறியதாக விசிக தலைவர் திருமாவளவன் கூறினார்.

ஒன்றரை ஆண்டுகளாக பேச முடியாமல் ஓய்வில் இருக்கும் திமுக தலைவர் கருணாநிதிக்கு, கடந்த 24-ம் தேதி மாலை காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து, கருணாநிதியின் உடல்நிலை மோசமாக இருப்பதாக சமூக ஊடகங்களில் செய்திகள் பரவின. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், ‘‘சிறிது காய்ச்சல் ஏற்பட்டதால் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். அதிர்ச்சி அடையக்கூடிய அளவுக்கு கருணாநிதியின் உடல்நிலை மோசமாக இல்லை. அவரது உடல் நிலை குறித்து வரும் செய்திகள் அனைத்தும் வதந்தியே. அதை யாரும் நம்ப வேண்டாம்’’ என்றார்.

கருணாநிதி உடல்நிலை குறித்து இன்று மாலை காவேரி மருத்துவமனை சார்பில் அறிக்கை ஒன்று வெளியானது. காவேரி மருத்துவமனையின் செயல் இயக்குநர் டாக்டர் அரவிந்தன் செல்வராஜ் இன்று வெளியிட்ட டாக்டர்கள் குழுவின் அறிக்கையில், ''திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் உடல் நலத்தில் வயோதிகம் காரணமாக நலிவு ஏற்பட்டுள்ளது. தற்போது சிறுநீரகப் பாதையில் ஏற்பட்டுள்ள நோய்த்தொற்றின் காரணமாக காய்ச்சல் வந்துள்ளது.

அதற்குத் தேவையான மருந்துகள் செலுத்தப்படுகின்றன. அவரை 24 மணி நேரமும் மருத்துவரகள், செவிலியர்கள் அடங்கிய மருத்துவக் குழு கவனித்துக்கொள்கிறது.வீட்டிலேயே மருத்துவமனைகள் அடங்கிய வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அவரது உடல்நிலையை கவனத்தில் கொண்டு, அவரை யாரும் நேரில் பார்க்க வரவேண்டாம் என்று மருத்துவர்கள் கேட்டுக்கொள்கிறார்கள்'' என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரிக்க துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தமிழக அமைச்சர்கள் ஜெயக்குமார், வேலுமணி, தங்கமணி ஆகியோர் வருகை புரிந்தனர். அப்போது மு.க.ஸ்டாலின், துரைமுருகன், டி.ஆர்.பாலு, ஆ.ராசா ஆகியோர் கோபாலபுரம் இல்லத்தில் இருந்தனர். சுமார் 20 நிமிடங்களில் இந்த சந்திப்பு நிறைவடைந்தது. அதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய துணை முதல்வர் ஓபிஎஸ் கருணாநிதி நலமுடன் இருக்கிறார் என்று தெரிவித்தார்.

அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''ஜெயலலிதா உடல்நிலை சரியில்லாதபோது திமுகவினர் வந்து பார்த்தார்கள். அந்த அரசியல் பண்பாட்டின் அடிப்படையில் திமுக தலைவர் கருணாநிதியைச் சந்தித்து நலம் விசாரித்தோம். அவர் நலமுடன் இருக்கிறார். கருணாநிதி விரைவில் குணம்பெற்று வருவார்'' என்றார்.

இதைத் தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ஆகியோர் கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்திற்கு வருகை தந்தனர்.

பிறகு செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், ''திமுக தலைவர் கருணாநிதி உடல்நலிவு காரணமாக ஓய்வில் இருக்கிறார். அதனால் மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேசினேன். காய்ச்சல் இருப்பதாகவும், அச்சப்படும் வகையில் ஏதும் இல்லையென்றும் ஸ்டாலின் என்னிடம் கூறினார்'' என்றார்.

திமுக தலைவர் கருணாநிதி விரைவில் நலம்பெற வேண்டும் என்று இறைவனை வேண்டுவதாக ஜி.கே.வாசன் கூறினார்.

தமிழக மக்கள் பதற்றமடைய வேண்டாம் என்று ஸ்டாலின் கேட்டுக்கொண்டதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

40 mins ago

க்ரைம்

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

2 hours ago

வணிகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

சினிமா

4 hours ago

மேலும்